search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாலமுரளி கிருஷ்ணா மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது: கவிஞர் வைரமுத்து
    X

    பாலமுரளி கிருஷ்ணா மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது: கவிஞர் வைரமுத்து

    பாலமுரளி கிருஷ்ணா மறைவு குறித்து, ‘இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது’, என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்து உள்ளார்.
    கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இசைமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்துவிட்டது. இசையே வாழ்வு, வாழ்வே இசை என்று வாழ்ந்த கலைஞன் இசைப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார்.

    இசை அவரின் மரபணுக்களோடு கலந்திருந்தது. அவரது தந்தை ஒரு புல்லாங்குழல் மேதை. அவரது அன்னை ஒரு வீணைக் கலைஞர். புல்லாங்குழலும் வீணையும் கூடிப்பெற்ற குழந்தை அவர். எட்டு வயதில் அரங்கேறியவர். பதினைந்து வயதுக்குள் 72 மேளகர்த்தா ராகங்களுக்கும் கீர்த்தனை வடிவம் தந்தவர். சங்கீதம், சாகித்தியம், கானம் என்று முக்கூறாய் இயங்கும் இசை என்ற தத்துவம் அவருக்குள் ஒரே புள்ளியில் இயங்கியது.

    அவரது குரல் காற்றை நெசவு செய்யும் குரல். காதுகளில் தேன்தடவும் குரல். கர்நாடக இசையின் மூலம் பண்டிதர்களுக்கு நல்லிசை என்ற அமிர்தம் அளிக்கத் தெரிந்த பாலமுரளிகிருஷ்ணா, திரை இசையின் மூலம் பாமரர்களுக்கு மெல்லிசையைப் பந்தி வைத்தார்.

    அவர் பெருமை பேச ‘ஒருநாள் போதுமா...’ என்று அவர் பாடிய பாடலையே துணைக்கழைக்கிறேன். ‘தங்கரதம் வந்தது வீதியிலே...’ என்ற பாடல் அவரது குரலில் விளைந்த அமுதமாகும். ‘மவுனத்தின் விளையாடும் மனச்சாட்சியே’ என்ற பாடல் அவர் உன்னதக் குரலின் உச்சமாகும்.

    சக கலைஞர்களைக் குறைப்பதில்லை, எவரையும் பழிப்பதில்லை, நாம் வாழ்த்தப் பிறந்தவர்கள் என்ற பெருங்குணத்தால் அவர் மனித மாணிக்கமாகவும் திகழ்ந்திருக்கிறார். அந்த அருங்குணந்தான் நிகழ் சமூகத்திற்கு அவர் விட்டுச் செல்லும் செய்தியாகும்.

    ‘சங்கீத கலாநிதி’, ‘இசைப்பேரறிஞர்’, ‘பத்ம விபூஷண்’ என்ற விருதுகளைப் பெற்ற பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மிச்சமிருந்த ஒரே விருது ‘பாரத ரத்னா’ மட்டும்தான்.

    அவர் காலமாகவில்லை. கலையோடு கலந்துவிட்டார். கலைக்கு மரணமில்லை. கலையோடு கலந்தவர்களும் மரிப்பதில்லை. காற்றில் நாதம் உள்ள காலம்வரை பாலமுரளி கிருஷ்ணாவின் கானம் மிதந்துகொண்டே இருக்கும்.

    அவரைப்போல் ஓர் இசைவாணர் பிறக்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடும், பிறக்கமுடியுமா? என்ற துக்கத்தோடும் என் இரங்கல் செய்தியை நிறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
    Next Story
    ×