search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    படங்களுக்கு இசையமைக்க நேரம் இல்லை: ஜி.வி.பிரகாஷ்
    X

    படங்களுக்கு இசையமைக்க நேரம் இல்லை: ஜி.வி.பிரகாஷ்

    சினிமாவில் நடிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. இசையமைக்க நேரம் இல்லை என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
    ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு.’ இதில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ்.எம். இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

    விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, “கடவுள் இருக்கான் குமாரு படத்தை டி.சிவா தயாரித்து இருக்கிறார். அவர் 100 ஆண்டு சினிமாவில் கால் நூற்றாண்டுகளை கடந்து இருக்கிறார். ராஜேஷ் எடுத்த எல்லா படங்களும் நகைச்சுவை படங்களாக வந்து நன்றாக ஓடின. இந்த படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் நீண்ட வசனம் பேசி இதில் சிறப்பாக நடித்துள்ளார்.” என்றார்.

    தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, நடிகர் சந்தானம், டைரக்டர்கள் சசி, பொன்ராம், தயாரிப்பாளர்கள் டி.சிவா, முரளிதரன், தேனப்பன், தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் பேசினார்கள்.

    படத்தை பற்றி ஜி.வி.பிரகாஷ் அளித்த பேட்டி வருமாறு:-

    “சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் இரண்டு இளைஞர்கள் ஒரு போலீஸ் அதிகாரியிடம் சிக்குகின்றனர். இதனால் என்ன பிரச்சினைகள் நடக்கிறது என்பதே கடவுள் இருக்கான் குமாரு படத்தின் கதை. சாலையிலேயே பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் நான் நடுத்தர குடும்பத்து இளைஞனாக வருகிறேன். படப்பிடிப்பில் ஒரு காட்சியில் வேகமாக கார் ஓட்டியபோது நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.

    ஆனந்தி, நிக்கி கல்ராணி என்று இரண்டு நாயகிகள் உள்ளனர். இருவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக வந்துள்ளது. இது எனக்கு 5-வது படம். பட வாய்ப்புகள் அதிகம் வருவதால் மற்ற படங்களுக்கு இசையமைக்க நேரம் கிடைக்கவில்லை. எனக்காக காத்திருப்பவர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுப்பேன்.

    கடவுள் இருக்கான் குமாரு படத்தில் எனது நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. காதல், நகைச்சுவை, அதிரடி என்று அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து சிறந்த நடிகராக பெயர் வாங்க ஆசைப்படுகிறேன்.”

    இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார். 
    Next Story
    ×