search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சுவாதி கொலை சம்பவம் படமானது
    X

    சுவாதி கொலை சம்பவம் படமானது

    சுவாதி கொலை சம்பவத்தை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் புதிய படம் உருவாகி உள்ளது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
    விதார்த், பூஜா தேவாரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், குற்றமே தண்டனை, நாசர், ரவிமரியா, மாரிமுத்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை மணிகண்டன் டைரக்டு செய்துள்ளார். இவர் காக்கா முட்டை படத்தை இயக்கி பிரபலமானவர். குற்றமே தண்டனை படம் சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் சுவாதி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

    ஒரு தலைக்காதலால் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அந்த கொலையை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே கதை. இந்த படம் குறித்து டைரக்டர் மணிகண்டன் கூறியதாவது:-

    “சுவாதி கொலை சம்பவத்துக்குள் விடை தெரியாத பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. குற்றமே தண்டனை படத்திலும் அதுபோன்ற ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையை பார்த்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற உளவியல் ரீதியான விஷயங்களை இதில் காட்சிப்படுத்தியுள்ளேன். ஐந்து கதாபாத்திரங்களை சுற்றி கதை நகரும். எனது படங்களில் சில உண்மை சம்பவங்கள் கலந்து இருக்கும். இந்த படத்திலும் அது இருக்கிறது.

    விதார்த், ‘கிரடிட் கார்டு’ பயன்படுத்துவோரிடம் பணம் வசூலிக்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். எனது படங்களை அதிக செலவில் எடுப்பது இல்லை. எனவே தயாரிப்பாளர்களுக்கு அவை நஷ்டத்தை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கதாபாத்திரங்களுக்கு பொருந்தாத பாடல்களை படங்களில் திணிப்பதும் எனக்கு பிடிக்காது.

    குற்றமே தண்டனை படத்தை பாடல்கள் இல்லாமலேயே எடுத்து இருக்கிறேன். இந்த திகில் படத்துக்கு இளையராஜா சிறப்பாக இசையமைத்து இருக்கிறார். ஹரிஹர நாகநாதன், முத்து, காளஸ்வரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் விதார்த் கூறும்போது, “ மைனாவுக்கு பிறகு எனக்கு சிறந்த படமாக குற்றமே தண்டனை அமைந்துள்ளது. இந்த படம் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்று இருக்கிறது. ஒரு கொலையை நேரில் பார்க்கும் இளைஞனுக்குள் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றங்களே கதை. ரசிகர்களுக்கு இது புதுமையான படமாக இருக்கும்” என்றார்.
    Next Story
    ×