search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    புதிய இயக்குனர்கள் சினிமாவை காப்பாற்றுவார்கள்: சிவகுமார் பேச்சு
    X

    புதிய இயக்குனர்கள் சினிமாவை காப்பாற்றுவார்கள்: சிவகுமார் பேச்சு

    “புதிய இயக்குனர்கள் திறமைசாலிகளாக வருகிறார்கள். சினிமாவை அவர்கள் காப்பாற்றுவார்கள்” என்று படவிழாவில் நடிகர் சிவகுமார் பேசியுள்ளார்.
    ராஜுமுருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடந்தது. விழாவில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:-

    “கிராமத்து பிரச்சினைகளை மையப்படுத்தி சிறந்த படமாக ‘ஜோக்கர்’ வந்துள்ளது. கிராம மக்கள் கழிப்பறை வசதி இன்றி கஷ்டப்படுவதை படத்தில் காட்டி உள்ளனர். நான் சிறிய வயதில் இந்த கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறேன். வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாத பெண்கள் மிகவும் சிரமப்படும் நிலைமை உள்ளது.

    ‘ஜோக்கர்’ படத்தில் கழிப்பறை இருந்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு ஏழைப்பெண் காதலனை வற்புறுத்துவதும் மத்திய அரசு திட்டத்தில் அது கட்டப்பட்டு பிறகு இடிந்து விழுந்து அந்த பெண் கோமாவுக்கு போவதும் பெரிய சோகம். மதுவால் மக்கள் சீரழிவதை நினைக்கும் போது ரத்தக்கண்ணீர் வருகிறது. மக்கள் நலனுக்காக போராடுபவர்களை சமூகம் வேறுமாதிரிதான் பார்க்கிறது.

    திரைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றங்களை சந்தித்து வருகிறது. தியாகராஜ பாகவதர் காலத்தில் 50 பாடல்களுடன் படங்கள் வந்தன. பிறகு வசனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து படங்கள் எடுத்தனர். மணிரத்னம் காலத்தில் வசனம் சுருங்கியது. அவரது படத்தில் மொத்த வசனமே ஒரு பக்கம்தான் இருக்கும். தற்போது காக்கா முட்டை, குக்கூ என்று வேறு சாயல்களில் படங்கள் வருகின்றன.

    சினிமாவுக்கு வீழ்ச்சி கிடையாது. பீனிக்ஸ் பறவைபோல் அது எழுந்து கொண்டே இருக்கும். திறமைசாலிகளாக வரும் புதிய இயக்குனர்கள் சினிமாவை காப்பாற்றிக்கொண்டே இருப்பார்கள்.”

    இவ்வாறு சிவகுமார் பேசினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, டைரக்டர் லிங்குசாமி, நடிகர் குரு சோமசுந்தரம், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்
    Next Story
    ×