search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சத்யா மூவிஸ் படத்தில் சிவாஜிகணேசனை டைரக்ட் செய்த உதயகுமார்
    X

    சத்யா மூவிஸ் படத்தில் சிவாஜிகணேசனை டைரக்ட் செய்த உதயகுமார்

    எம்.ஜி.ஆர். படங்களையே தயாரித்து வந்த சத்யா மூவிஸ், சிவாஜிகணேசனை வைத்து "புதிய வானம்'' என்ற படத்தைத் தயாரித்தது.
    எம்.ஜி.ஆர். படங்களையே தயாரித்து வந்த சத்யா மூவிஸ், சிவாஜிகணேசனை வைத்து "புதிய வானம்'' என்ற படத்தைத் தயாரித்தது. அந்தப் படத்தையும், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் படங்களையும் ஆர்.வி.உதயகுமார் இயக்கினார்.

    ஆர்.வி.உதயகுமாரின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள முல்லைப்பாளையம் கிராமம். தந்தை பெயர் வெங்கடசாமி. தாயார் கண்ணம்மாள். விவசாய குடும்பம்.

    சத்தியமங்கலம் மங்களாபுதூர் பள்ளியில் பள்ளிப்படிப்பை தொடங்கிய ஆர்.வி.உதயகுமார் கோபி கலைக்கல்லூரியில் `பி.ï.சி.' படித்தார். பின்னர் கோவை அரசு கலைக்கல்லூரியில் `பி.எஸ்.'சி.' பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து 1980-ம் ஆண்டு சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்து டைரக்டர் துறைக்கு பயிற்சி பெற்றார்.

    திரைப்பட கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது "பாரதியின் கவிக்கனவு'' என்ற குறும்படத்தை டைரக்ட் செய்தார்.

    அதன் பிறகு "நினைவுப் பாதையில் ஒரு பயணம்'' என்ற ஆங்கில குறும்படத்தை டைரக்ட் செய்தார்.

    1983-ம் ஆண்டு எடிட்டர் வெள்ளைச்சாமியின் "நேரம்வந்தாச்சு'' என்ற படத்திற்கு துணை டைரக்டராக பணிபுரிந்தார். இதற்கிடையே பழனியப்பன் ராமசாமி சிபாரிசில் ஜெமினியில் வேலை கிடைத்தது. அப்போது தயாரிக்கப்பட்ட "ஜனனி'' படத்திற்கு ஆசோசியேட் டைரக்டராகவும், தயாரிப்பு மேற்பார்வையாளராகவும் பணிசெய்தார்.

    1985-ம் ஆண்டு ஆபாவாணனின் "ஊமைவிழிகள்'' என்ற படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் ஆர்.வி.உதயகுமாருக்கு படவாய்ப்புகள் வரத்தொடங்கின. 1986-ம் ஆண்டு "கடைக்கண் பார்வை'' என்ற படத்தில் உதயகுமார் ஒரு பாடலை எழுதினார். "நான் நெஞ்சுக்குள் உன்னை வைத்தேன். நீ என்மனதை கிள்ளி வைத்தாய்'' என்ற அந்த பாடல் மூலம் புகழ்பெற்றார்.

    இந்த சமயத்தில் பட அதிபர் மணி அய்யர் தயாரித்த "உரிமைகீதம்'' படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு உதயகுமாருக்கு கிடைத்தது. இப்படத்தில் பிரபு, கார்த்திக் ஆகியோர் நடித்தனர்.

    இந்தப்படம் தயாராகிக் கொண்டிருந்தபோது, உதயகுமாருக்கு திருமணம் நிச்சயமாயிற்று. இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.கணேசனின் மகள்தான் மணமகள். இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் நண்பர்தான் எஸ்.எஸ்.கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண் பார்க்கும் நிகழ்ச்சியின்போது, மணப்பெண்ணிடம் தனியே பேச விரும்பினார், உதயகுமார். அதன்படி இருவரும் பேசினர்.

    "நான் இப்போதுதான் ஒரு படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கிறேன். படம் ஓடினாலும் ஓடலாம்; ஓடாமலும் போகலாம். என்னை பெரிய டைரக்டர் என்று நினைத்து திருமணத்துக்கு சம்மதித்து விடாதே! அதே சமயம், எந்த நிலையிலும் உன்னை வைத்துக் காப்பாற்ற என்னால் முடியும்'' என்று உதயகுமார் வாக்குறுதி அளித்தார்.

    திருமண வரவேற்புக்கு சிவாஜிகணேசன், விஜயகாந்த் ஆகியோர் வந்திருந்தார்கள். ஆர்.எம்.வீரப்பனும் வந்திருந்தார்.

    அவர் உதயகுமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், "நீங்கள் டைரக்ட் செய்துள்ள படத்தின் காட்சிகளைப் பார்த்தேன். நன்றாக இருந்தன. என்னுடைய அடுத்த படத்தை நீங்கள்தான் டைரக்ட் செய்ய வேண்டும்'' என்று கூறியதோடு, ரூ.1 லட்சத்துக்கான `செக்'கை அட்வான்சாகக் கொடுத்தார்.

    இதுபற்றி உதயகுமார் குறிப்பிடுகையில், "என் திருமண வரவேற்பின்போது, ஆர்.எம்.வீரப்பன் சார் வந்து ரூ.1 லட்சத்திற்கான `செக்'கை கொடுத்தது, நான் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி ஆகும். அதை வைத்துத்தான் என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அவர் உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது'' என்றார்.

    ஆர்.வி.உதயகுமாரின் "உதய கீதம்'' 1988-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

    அடுத்தபடியாக, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிசுக்காக "புதிய வானம்'' படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    இந்தப்படத்தில் சிவாஜிகணேசன் நடிக்க வேண்டும் என்று ஆர்.எம்.வீரப்பன் விரும்பினார். அதன் பேரில், சிவாஜியை போய்ப் பார்த்தார், உதயகுமார்.

    அப்போது நடந்தது பற்றி அவர் கூறியதாவது:-

    "சிவாஜியை நான் `அப்பா' என்றுதான் கூப்பிடுவேன். புதிய வானம் படத்தில் அவரை நடிக்கச் செய்ய, அவரை போய்ப்பார்த்தேன்.

    `உன் படம் ("உதயகீதம்'') நன்றாகப் போகிறதாமே' என்று என்னிடம் கேட்டார், சிவாஜி.

    "ஆம், அப்பா! என்னுடைய அடுத்த படத்தில் நீங்கள்தான் நடிக்கவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன். `ஹீக்குமத்'' என்ற இந்திப்படத்தைப் போட்டுக்காட்டி, அதில் ஷம்பிகபூர் நடித்த வேடத்தில் நடிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன். அவர் ஒப்புக்கொண்டார்.

    "பட அதிபர் யார்?'' என்று கேட்டார். "ஆர்.எம்.வீ'' என்றதும், "அவர் என்னை வைத்து படம் எடுக்க மாட்டாரே'' என்றார். "இல்லை, இல்லை. அவர்தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார்'' என்று நான் சொன்னேன்.

    அதன் பேரில் புதிய வானம் படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக்கொண்டார்.

    Next Story
    ×