search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடக்கம்"

    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
    • பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்கவேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருமான வரித்துறையினரை வைத்து இப்படி செய்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் உள்ளது. இப்படி செய்தால் தேர்தல் எப்படி நடக்கும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. எப்படி பணம் சம்பாதித்தது என்பதை சுப்ரீம் கோர்ட்டு இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க. வங்கி கணக்குகள் செயல்பட்டில் உள்ளது.

    தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பா.ஜ.க.வின் வங்கி கணக்குகளை முடக்கவேண்டும்.

    தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
    • ல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

    திருப்பூர்:

    கழிவு பஞ்சு விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறி திருப்பூர், கோவையில் நூல் மில் உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓ.இ., மில்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜவுளி உற்பத்தி தொழிலை பொறுத்தவரை, ஓ.இ., மில்கள், விசைத்தறிகள், ஆட்டோ லூம், சுல்ஜர், சைசிங் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யப்பட்டு அடுத்தடுத்த செயல்பாடுகளால் காடா துணியாக வடிவம் பெறுகின்றன. ஓ.இ., மில்களில் இருந்து கிடைக்கும் நூலை பயன்படுத்தியே, விசைத்தறிகள் இயங்குகின்றன. நூல் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், விசைத்தறிகள் உட்பட சைசிங், ஆட்டோ லூம், சுல்ஜர் ஆகிய அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். எனவே இப்பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்று ஜவுளி துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • ஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனை மேற் கொண்டார். இதை தொடர்ந்து அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நெல்லை சரகத்தில் உள்ள மாவட்டங் களில் சுமார் 10 வருடங்க ளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட நிலுவை யில் இருந்த 65 ஆயிரம் வழக்குகள் புலன் விசாரணை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை 554 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. 919 பேர் மீது பிணையில் வெளியே வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. குமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 63 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அவர்களிடமிருந்து 13½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    27 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 6 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் 161 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 வழக்குகளில் புலன் விசாரணையின் மூலமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்து 738 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் செல்போன்களில் குறுஞ் செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 25 ஆண்டுகளாக முடங்கிப்போன மலட்டாறு அணை திட்டம் முழுமையடைய நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 54 கிராம மக்கள் பயனடைவார்கள்.

    அபிராமம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் மற்றும் எழுமலை பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கவுண்ட நதி திருமங்கலம் தாலுகா மற்றும் திருச்சுழி தாலுகா வழியாக குண்டாறு என்னும் பெயரில் ராமநாதபுர மாவட்டத்தில் நுழைகிறது.

    இந்த குண்டாறு கமுதியில் ரெகுநாத காவேரி எனும் கால்வாய் வழியாக மலட்டாறு என்னும் பெயரில் கமுதி மற்றும் கடலாடி தாலுகாக்கள் வழியே பாய்ந்து முடிவில் சாயல்குடி அருகே மூக்கையூர்அருகில் கடலுடன் கலக்கிறது.

    இங்குதான் பாக்கு வெட்டி கீழவலசை மக்கள் ஆற்றினை ஒட்டிய புறம்போக்கு பகுதிகளில் பயிரிட்டும் கிணறு தோண்டி பாசனம் செய்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மலட்டாறு திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 54 கிராம மக்கள் பயனடைவார்கள்.

    மலட்டாறு திட்ட ஆய்வுப் பணிகள் 1965-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நீர்த்தேக்க திட்டம் மூலம் பாசன வசதி நிலங்கள், பாதிப்படை யக்கூடிய நிலங்கள், மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடிய கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டு இந்த பகுதியில் அணை ஒன்று கட்டுவதற்கு அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டு மலட்டாறு அணை கட்டும் திட்டத்திற்கு முழுவடிவம் தரப்பட்டது.இந்த அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு முறைப்படி ஒப்புதல் வழங்கியது. எனினும் மலட்டாறு அணை திட்டம் நிறைவு பெற வில்லை.

    இந்த திட்டத்திற்கான உபரி நீர்ப்போக்கி தலை மதகுகள், மணற்போக்கி மதகுகள் முதலியவை கட்டும் பகுதி, இடது மற்றும் வலதுபக்க மண் கரைகள் ஏற்படுத்தப்படும் பகுதி இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் மேலும் சுவற்றின் கிளை வாய்க்கால்கள் தோண்டப் படும் பகுதி அனைத்திற்கும் சேர்த்து சுமார் 425 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும்.

    இத்திட்டத்திற்கான அனைத்துப் பணிகளுக்கும் 1994ம் ஆண்டு நிலவரப் படி சுமார் ரூ.17 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.

    1991-ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்தினை செயல்படுத்துவதாக அறிவித்து முதல்கட்டமாக ரூ.40 லட்சம் ஒதுக்கி நிலம் கையகப்படுத்த உத்தர விட்டது.

    அன்றிலிருந்துஇன்று வரையிலும் மாறி வருகின்ற ஒவ்வொரு அரசியல் சூழ்நிலை களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தப்போவதாக ஒவ்வொரு அரசியல்வாதி யும் கூறிவருகின்றனர். ஆனால் திட்டம் செயல் படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தின் செயல் பாட்டுக்கென பரமக்குடியை தலைமையகமாகக் கொண்டு பொது கோட்ட அலுவலகம் கட்ட 4 ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் செயலாக்கத்திலுள்ள மெத்தனம் காரணமாக இக்கோட்டமானது சுற்றுச்சூழல் குழுமக் கோட்டம் என மாற்றப் ப ட்டது.

    இந்த திட்டத்திற்காக ஒரேயொரு பிரிவு அலுவலரைக் கொண்டு கமுதியில் உபகோட்டம் ஒன்று இருந்து வருகிறது. முதலில் இந்த திட்டத்தை அ.தி.மு.க . அரசு தொடங்கு வதாக அறிவி த்ததால் இந்த திட்டத்தினை செயல் படுத்துவதில் அதற்கு பின்பு வந்த தி.மு.க. அரசு ஆர்வம் காட்டவில்லை.

    இந்த திட்டம் பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்தால் இந்த பகுதி விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மலட்டாறு அணைக்கட்டு திட்டம் செயல் படுத்தப் பட்டால் இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும். எனவே விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

    சமூக ஆர்வலர் அருணாசலம் கூறுகையில், பருவமழை பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் மலட்டாறு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டால் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட பகுதிகள் பயனடையும் என்றார்.

    விவசாய சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய பகுதி. முழுக்க முழுக்க விவசாயமே முழுநேர தொழிலாக உள்ளது. கமுதி, கடலாடி. முதுகுளத்தூர், திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதி களும் மலட்டாறு திட்டம் செயல்படுத்தப்பட்டால் செழிக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் குடிநீர் ஆதாரம் பெருகும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.

    • அ.தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
    • அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

    சிவகாசி,

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசியில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சிவகாசி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அசன்பதுருதீன் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ வர்மன், தலைமைக்கழக பேச்சாளர்கள் செல்வம், பரமக்குடி ஜமால், மான்ராஜ் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணி, விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் சிறப்பாக செயலாற்றிக்கொண்டு வருகிறார். ஜெயலலிதா காலத்துக்கு பிறகு தமிழ கத்தில் ஏழை- எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்ப டுத்தியவர் எடப்பாடியார். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது.

    ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அறிவியல் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டது. தற்போது பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க. ஆட்சியாளர்கள்.

    ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள், எடப்பாடியார் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    அம்மா பரிசு பெட்டகம், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை இப்படி பல்வேறு அ.தி.மு.க.வின் திட்டங்களை நிறுத்தி விட்டனர். சைக்கிள் வழங்குவதை பாதியாக குறைத்து விட்டனர். லேப்டாப் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.

    முதியோர் பென்ஷன் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். அ.தி.மு.க. அரசின் எல்லா திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது.

    மகளிருக்கு ரூ. 1000 தருவதாக சொன்ன தி.மு.க. இதுவரை வழங்கவில்லை. தி.மு.க. கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் தி.மு.க.வினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் தி.மு.க.வினர் உள்ளனர். எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம். மக்கள் தயாராக இருந்து அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியமர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பி.எப்.ஐ. இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.
    • பி.எப்.ஐ. பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கைது செய்யப்பட்டதாக தகவல்.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் அந்த அமைப்புகள் செயல்பட 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, அந்த அமைப்பின் இணையதளம், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை அடுத்து கேரளாவில் பி.எப்.ஐ. அமைப்பை கலைத்து விட்டதாக அதன் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நாட்டின் சட்டத்தின்படி செயல்படுகிற குடிமக்களாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவை தங்கள் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது என்றும், பி.எப்.ஐ. கலைக்கப்பட்டு விட்டது என அதன் உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சட்டரீதியாக இதை  எதிர்கொள்ள உள்ளதாகவும் அப்துல் சத்தார் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவர், கருநாகப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தின.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

    பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பி.எப்.ஐ.க்கு (பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா, உள்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த 22ந் தேதி சோதனையில் ஈடுபட்டது.

    தமிழகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தின.

    இந்த சோதனைகளின்போது பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பி.எப்.ஐ.(பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) அமைப்பு இந்தியாவில் செயல்பட ஐந்து ஆண்டு காலம் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு அதன் துணை அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

    பிஎஃப்ஐயின் டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமான என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    • ecom.indiapost.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பொருட்களை விற்று வந்தனர்.
    • வாடிக்கையாளர் வரவேற்பு குறைந்துவிட்டதால் இந்த சேவை நிறுத்திவிட்டது.

    திருப்பூர் :

    தபால்துறை புதிய இ- காமர்ஸ் தளம் ஒன்றை கடந்த 2018ல் துவங்கியது. இதன்கீழ் இந்தியா போஸ்ட் மூலம்தங்களது தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய விரும்புபவர்கள், ecom.indiapost.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்களது பொருட்களை விற்று வந்தனர்.

    கிராமப்புற வணிகர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், பெண்கள் சுய உதவி குழுக்கள் போன்றவற்றுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.இதற்கு வாடிக்கையாளர் தரப்பில் வரவேற்பு குறைந்துவிட்டதால், இந்த சேவையை நிறுத்திவிட்டது தபால்துறை. தற்போது இணையதளமும் முடக்கப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருப்பூர் தபால்துறை வெளியிட்டுள்ளது.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு படி நடவடிக்கை
    • கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளை முடக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வழக்கில் வடசேரியைச் சேர்ந்த காட்வின் எட்வர்ட், பெருவிளையை சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதை யடுத்து காட்வின் எட்வர்ட் மற்றும் அவரது தாயாரின் வங்கி கணக்குகளும் சந்திரகுமாரின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக அருகில் இயங்கி வரும் தனியாா் இ-சேவை மையத்தில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக புகாா் வந்தது.
    • இதனையடுத்து அந்த மையத்தின் பயனாளா் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக அருகில் இயங்கி வரும் தனியாா் இ-சேவை மையத்தில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக புகாா் வந்தது. இதனைத் தொடா்ந்து அதிகாரிகள் குழு திடீா் ஆய்வு செய்ததில் முதியோா் ஓய்வூதியத் திட்டம் சாா்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டாமாறுதல் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மையத்தின் பயனாளா் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட இ-சேவை மைய அங்கீகாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இது தொடா்பான புகாா்களை tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 18004251997 மூலமாகவோ புகாா்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கஞ்சா வழக்கில் கைதான 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.
    • கடந்த ஜனவரி முதல் இதுவரை 516 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகா்க் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்ற 157 பேரின் பெயா்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதனடிப்படையில் 53 கஞ்சா வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 85 போ் கைது செய்யப்பட்டனா்.

    கைதான 72 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்றதாக கடந்த ஜனவரி முதல் இதுவரை 516 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து ரூ.25.33 லட்சம் மதிப்புள்ள 2,598 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    கஞ்சா, குட்கா போன்றவை விற்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் 7603846847 அல்லது ஹலோ போலீஸ் மொபைல் எண் 8300031100 ஆகியவற்றிக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர் பெயர் மற்றும் தகவல்களில் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×