என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலர்கள்"

    • கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை.
    • அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் தற்கொலை செய்து கொண்டார்.

    கர்நாடக மாநிலம் தாவநகரே மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் 2 மாதங்களுக்கு முன் ஹரிஷ் (30) என்பவரை மணந்தார்.

    கடந்த 23 ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை. புகாரின் பேரின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சரஸ்வதி தனது காதலன் சிவகுமாருடன் சென்றது தெரியவந்தது.

    இதை அறிந்ததும், கணவர் ஹரிஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். ஹரிஷின் மரணச் செய்தியைத் தாங்க முடியாமல், அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் (36) தற்கொலை செய்து கொண்டார். ருத்ரேஷ் சரஸ்வதியின் தாய்மாமன்.

    காவல்துறை விசாரணையில், சரஸ்வதிக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. சரஸ்வதி மற்றும் அவரது காதலனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.  

    • இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.
    • தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா கும்பலின் அச்சறுத்தலால் பயந்துபோன ஒரு இளம் காதல் ஜோடி மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஷாஜஹான்பூரில் நேற்று ஒரு pizza கடை உணவகத்தின் இரண்டாவது மாடியில் அந்த இளைஞரும் இளம்பெண்ணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள் அந்த ஜோடியைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.

    அவர்கள் தங்களைத் தாக்குவார்களோ என்ற பயத்தில், இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.

    கீழே விழுந்ததில் அந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  

    • பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்
    • சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    உத்தரப் மாநிலம் ஜான்பூரை சேர்ந்த 20 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.

    ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோற்ற அவர் அடுத்த முறை எப்படியும் வென்று விட வேண்டும் என தீவிரமாக இருந்துள்ளார்.

    சூரஜ், பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிர்பந்தத்திலும் இருந்துள்ளார்.

    எனவே நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு இருந்தால் எளிதாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார்.

    எனவே அவர் தனது ஒரு காலில் உள்ள 4 விரகலை அவரே துண்டித்துள்ளார். வலிக்காமல் இருக்க அனஸ்தீசியா மருந்து செலுத்திக்கொண்டு இந்த காரியத்தை அவர் செய்துள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவு தன்னை யாரோ தாக்கியதில் அவ்வாறு ஆனதாக கூறியுள்ளார். இந்த விஷயம் காவல்துறை கவனத்துக்கு செல்லவே, அவர்கள் சூரஜ் உடைய போனை ஆராய்ந்ததில் அவருக்கு காதலி இருப்பதை அறிந்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். இறுதியில் விசாரணையில் உண்மை வெளிவந்தது.

    சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் மதம் கடந்து காதலித்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து காதலி கைகால்கள் கட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்பட்டுள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அர்மான் (27) சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவிட்டு 3 மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரும் அதே ஊரை சேர்ந்த காஜல் (22) என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடந்த 3 நாட்களாக இருவரையும் காணவில்லை என்று அர்மானின் தந்தை புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் காஜலின் சகோதரர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கொலையை ஒப்புக்கொண்டனர்.

    அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாகவும், உடல்களை நதிக்கரையில் குழிதோண்டிப் புதைத்துள்ளதாகவும்அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

    அவர்கள் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து போலீசார் புதன்கிழமை மாலை, உடல்களைத் தோண்டி எடுத்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    காஜலின் 3 சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் மத ரீதியான பதற்றம் ஏற்படாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • அந்த பெண்ணைக் கொண்டே சோனுவைத் தொலைபேசியில் அழைக்கச் செய்து, அவரை வரவழைத்துள்ளனர்.
    • வீடியோவாகப் பதிவு செய்து சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனு.

    இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் தன் வீட்டிலிருந்து வெளியேறி, போபாலில் சோனுவுடன் வசித்து வந்தார்.

    இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரைப் பலவந்தமாக ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர், அந்த பெண்ணைக் கொண்டே சோனுவைத் தொலைபேசியில் அழைக்கச் செய்து, அவரை ராஜஸ்தானுக்கு வரவழைத்துள்ளனர்.

    அங்கு சென்ற சோனுவைக் கடத்திய பெண்ணின் குடும்பத்தினர், அவரை ஒரு இடத்தில் மூன்று நாட்கள் அடைத்து வைத்துத் தடியால் அடித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

    மேலும், ஒரு பாட்டிலில் சிறுநீரை நிரப்பி அவரை வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்துள்ளனர்.

    இந்தக் கொடூரச் செயலை வீடியோவாகப் பதிவு செய்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அதனைச் சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோனுவின் பெற்றோர், போபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து இந்த புகாரை விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  

    • மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.
    • நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.

    மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் 16 வயது சிறுவனை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி 1.5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததை தொடர்ந்து, சிறுவன் சிறையிலும், சிறுமி சீர்திருத்தப் பள்ளியிலும் வைக்கப்பட்டனர் என்று கூறபடுகிறது. 

    இந்தச் சம்பவத்தால் சிறுமியின் குடும்பத்தினர் சிறுவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

    சிறையில் இருந்து விடுதலையான சிறுவன், தனது மாற்றுத்திறனாளி தாயுடன் உஜ்ஜைன் இல் இருந்து வெளியேறி தேவாஸ் பகுதியில் வசித்து வசித்து வந்தான்.

    தனது தாயின் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்ட இந்த வாரம் உஜ்ஜைன் திரும்பியபோது, சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறுவனை வழிமறித்துள்ளனர்.

    சிறுவனைப் பிடித்து ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்திய கும்பல், சிறுவனின் கைகளைக் கயிற்றால் கட்டி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.

    நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.

    மாறாக, பலர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.

    இறுதியாக காவல் நிலையத்திற்கு அருகே வந்தபோது சிறுவனை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக சிறுவன் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில், நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

    • சரக்கு ரெயிலின் கீழ் கைகோர்த்தபடி அமர்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்தனர்.
    • சரக்கு ரயில், திடீரென பலத்த சத்தத்துடன் மெதுவாக நகரத் தொடங்கியது.

    காதலுக்கு கண்ணில்லை என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் கீழ் கைகோர்த்தபடி அமர்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்த ஜோடி மயிரிழையில் உயிர்தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

    அவர்கள் காதலில் மூழ்கியிருந்தபோது அதுவரை நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில், திடீரென பலத்த சத்தத்துடன் மெதுவாக நகரத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஜோடி சுயநினைவுக்கு திரும்பி, தண்டவாளத்தில் இருந்து தவழ்ந்துசென்று விலகி தங்கள் உயிரை காத்துக் கொண்டனர்.

    அவர்கள் விலகிய சில நிமிடங்களில், ரெயில் முன்னோக்கி நகர்ந்து சென்றது. ஒரு கணம் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களின் உயிர் பறிபோயிருக்கும்.

    இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். இது எங்கு எப்போது நடந்தது என்பது குறித்த விவரம் வெளியாவில்லை. எனினும் வீடியோ படு வைரலாகி வருகிறது.  

    • அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அவர் வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார்.
    • . இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.

    கேரளா மாநிலம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாலன்(56). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இந்த தம்பதியினருக்கு அஞ்சலி(27) என்ற மகளும் அகிலேஷ்(24) என்ற மகனும் இருந்தனர்.

    சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்தார். மகள் அஞ்சலி வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் விடுமுறைக்கு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அஞ்சலி தனது தந்தையின் கடைக்கு அருகில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த ஒருவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சலி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அஞ்சலி வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். இதனால் அஞ்சலியின் பெற்றோர் ஆத்திரடைந்தனர். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அஞ்சலியை கண்டித்து பெற்றோர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது ஆத்திரமடைந்த தாய் ஸ்ரீஜா, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.

    அப்போது அவர்களின் மீதும் தீப்பற்றி கொண்டது. இதனால் 3 பேரும் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்தனர். குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜாவின் மகன் அகிலேசும் பலத்த தீக்காயம் அடைந்தார்.

    வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தீயணைப்பு துறைக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து காயங்களுடன் கிடந்த 4 போரையும் மீட்டு கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீஜா பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியபாலனும், அஞ்சலியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த அகிலேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து எருமேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • வாலிபர் தனது காதலியை பெட்ரோல் டேங்கின் மீது உட்கார வைத்துக்கொண்டு எதிரும் புதிருமாக கட்டிப்பிடித்தபடி வித்தியாசமாக பைக்கை ஓட்டி சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து காதலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாடா வெம்பள்ளி நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். சமதா நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று விசாகப்பட்டினம் ஸ்டீல் சிட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர் தனது காதலியை பெட்ரோல் டேங்கின் மீது உட்கார வைத்துக்கொண்டு எதிரும் புதிருமாக கட்டிப்பிடித்தபடி வித்தியாசமாக பைக்கை ஓட்டி சென்றார்.

    பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் நெரிசல் மிகுந்த சாலையில் காதலர்கள் இருவரும் வித்தியாசமாக உட்கார்ந்தபடி பைக்கில் செல்வதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து ஸ்டீல் சிட்டி போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ், சப்-இன்ஸ்பெக்டர் சாமி நாயுடு ஆகியோர் காதலர்களை உடனடியாக மடக்கிப் பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் காதலர்களை விரட்டிச் சென்று இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக இப்படி பட்டப்பகலில் பைக்கில் செல்லக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
    • தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் திருமணம் செய்து கொண்ட நாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கோவை:

    திண்டுக்கல் ஜி.எஸ். நகரை சேர்ந்தவர் கனகவேல். இவர் திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஜெயசூர்யா (வயது 22). ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் டி. பாறைப்பட்டியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் உதயசூரியன் (23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் ஜெயசூர்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. உதயசூரியன் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10-ந் தேதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து 2 பேரும் பெற்றோருக்கு பயந்து வால்பாறைக்கு வந்தனர். சோலையாறு அணையில் ஒரு காட்டேஜில் அறை எடுத்து தங்கினர்.

    பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு வால்பாறை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் திருமணம் செய்து கொண்ட நாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வால்பாறை போலீசார் 2 பேரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து அவர்களை நேரில் வரவழைத்துள்ளனர். இருதரப்பினரும் வந்தபின்னர் பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர்.
    • காதல் ஜோடியின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில் நீண்ட நேரமாக கட்டிப்பிடித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாகன ஓட்டிகளுக்கு இடையூராக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து இருந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைக்கண்டு திகைத்துப்போன பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர்.

    இந்நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து ஜோடியை அப்புறப்படுத்த முற்பட்டார். பின்னர் அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர்.

    காதல் ஜோடியின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அதிர்ச்சியான காதலி, காதலனை காப்பாற்றுவதற்காக கையை கொடுத்து மீட்க முயன்றார்.
    • தப்பி வந்த கல்லூரி மாணவி தனது காதலனை மீட்க கோரி சத்தம் போட்டார்.

    வால்பாறை:

    கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சாஹர் (வயது21). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவருக்கும், இருகூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் காதலர்கள் 2 பேரும் நேற்று வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட்டில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அருகே அமர்ந்து அதன் அழகினை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாஹர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான காதலி, காதலனை காப்பாற்றுவதற்காக கையை கொடுத்து மீட்க முயன்றார். ஆனால் அவரும் நீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டார்.

    2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் கல்லூரி மாணவி அருகே இருந்த பாறையை பிடித்து உயிர்தப்பி கரையேறி வந்தார். ஆனால் சாஹர் நீர்வீழ்ச்சி தடாகத்தில் உள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    இதையடுத்து தப்பி வந்த கல்லூரி மாணவி தனது காதலனை மீட்க கோரி சத்தம் போட்டார். இதனை கேட்டு அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கல்லூரி மாணவரை மீட்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.

    தொடர்ந்து வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கல்லூரி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் இரவு வெகுநேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது நாளாக இன்று நீரில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவரை தேடும் பணி நடந்தது.

    இதுவரை அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×