search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர் பலி"

    • மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கல்லட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • சுற்றுலா பயணிகளை தடையை மீறி விடுதி நிர்வாகம் கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    ஊட்டி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி(வயது26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வார விடுமுறையை பொழுதுபோக்குடன் கழிப்பதற்காக மலைப்பிரதேசமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல கட்டா வினிதா சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று கட்டா வினிதா சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் ஊட்டிக்கு வந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களை அவர்கள் கண்டு ரசித்தனர்.

    பின்னர் கல்லட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சென்று அவர்கள் தங்கினர். இந்த நிலையில் நேற்று மாலை கட்டா வினிதா சவுத்ரி தனது நண்பர்களுடன் கல்லட்டி ஆற்றை பார்க்க சென்றனர்.

    கல்லட்டி சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஆற்றின் கரையோரம் இருந்த கல்லில் அமர்ந்தபடி ஆற்றின் அழகினையும், தண்ணீர் பாய்ந்து செல்வதையும் கண்டு ரசித்தனர்.

    பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டா வினிதா சவுத்ரி கல்லட்டி ஆற்றுக்குள் தவறி விழுந்தார்.

    மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கல்லட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கட்டா வினிதா சவுத்ரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

    இதை பார்த்ததும் நண்பர்கள் அதிர்ச்சியாகி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் சம்பவம் குறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புதுமந்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த கல்லட்டி ஆற்றுக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து இரவு நேரமானதாலும், ஆற்றில் வெள்ளம் அதிகமாக வருவதாலும் தேடும் பணியை போலீசார் நிறுத்தினர்.

    இன்று காலை 2-வது நாளாக ஐ.டி. பெண் என்ஜினீயரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கல்லட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து செல்லும் கல்லட்டி ஆறு சீகூர் வனப்பகுதி வழியாக சென்று பவானி சாகர் அணையை அடைகிறது. இதனால் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் 2 குழுவாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒரு குழுவினர் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து, ரேய்சன் வேலி வரையிலும், மற்றொரு குழுவினர் பர்சன்வேலியில் இருந்து வாழைத்தோட்டம் பகுதி வரையிலும் ஆற்றுப்பகுதி, கரையோரங்களில் தேடினர்.

    இந்த நிலையில் கட்டா வினிதா சவுத்ரி பிணமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டா வினிதா சவுத்ரியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே சுற்றுலா பயணிகளை தடையை மீறி விடுதி நிர்வாகம் கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விடுதியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கல்லட்டி சாலையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா வந்த நெல்லையை சேர்ந்த ஐ.டி.பெண் ஊழியர் உயிரிழந்தார். இந்தநிலையில் மற்றொரு ஐ.டி. பெண் ஊழியர் ஆற்றுக்குள் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 60 அடி உயரத்தில் இருந்து விழுந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     கோவை:

    சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் நவீன் ராமலிங்கம்(30). இவர் கோவை வடவள்ளியில் உள்ள நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புனிதா (29) சத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், நவீன் ராமலிங்கம் நேற்று முன்தினம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள சோலார் பேனலை ஆய்வு செய்ய சென்றார். அப்போது சுமார் 60 அடி உயர மேற்கூரையில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நவீன் மனைவி புனிதா மருத்துவமனை நிர்வாகம் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×