search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli Youth"

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே கிளினிக்கில் ஊசி போட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சித்தா டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள கோவன்குளத்தை சேர்ந்தவர் பேச்சித்துரை. இவரது மகன் மாரி (வயது24), கூலித் தொழிலாளி. கடந்த 2-ந்தேதி மாரிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் சளி தொந்தரவாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மூன்றடைப்பில் செயல்பட்டு வரும் பாலிகிளினிக் ஒன்றில் மாரி சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் மாரிக்கு ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டு புண்ணாகி உள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளான மாரியை அவரது பெற்றோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பப்பட்டார்.

    ஆனால் அங்கு அவரது நிலை கவலைக்கிடமானது. இதனால் மீண்டும் மாரி நேற்று மாலை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே மாரியின் உறவினர்கள் பாலி கிளினிக்கில் போடப்பட்ட ஊசி மற்றும் தவறான சிகிச்சை காரணமாகவே அவர் இறந்ததாக மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பாலி கிளினிக்கில் பணியாற்றி வந்த சித்தா டாக்டர் ஊசி போட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சித்தா டாக்டர் சக்தி (வயது32) மற்றும் நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவருமான தேனியை சேர்ந்த அருண் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×