search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sethiyathopu car accident"

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் சென்னையை சேர்ந்த டிரைவர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மா.குடிக்காடு பகுதியில் நேற்று அதிகாலையில் சாலையோரம் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.

    அந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த டிரைவர் உடல்கருகி பலியானார். மேலும் அந்த கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சோழத்தரம் சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று காருக்குள் உடல் கருகி கிடந்த டிரைவரின் உடலை மீட்டனர்.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத் துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் உடல் கருகி இறந்த டிரைவர் யார் என்று அடையாளம் தெரிய வந்தது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை வளசரவாக்கம் சுரேஷ் நகரை சேர்ந்தவர் புவனேஷ் (வயது 31). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    புவனேஷ் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இவர் சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு காரில் புறப்பட்டார்.

    நேற்று அதிகாலை 5 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மா.குடிகாடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. உடனே காரை சாலையோரம் நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்தார்.

    அவர் காரின் கண்ணாடியை மூடி விட்டு ஏ.சி.யை போட்டு தூங்கினார். அப்போது ஏ.சி.யில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. கார் முழுவதும் புகை மூட்டமானது.

    தூங்கி கொண்டிருந்த புவனேஷ் திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அவரால் காரின் கண்ணாடியை திறக்க முடியவில்லை. இதனால் காருக்குள்ளேயே சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்து விட்டார்.

    புவனேஷ் காரில் புறப்படும் போது தனது மனைவி சித்ராவிடம், நான் சவாரிக்கு கும்பகோணம் செல்கிறேன். சவாரியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தவுடன் நாம் குழந்தையுடன் ஜவுளிக்கடைக்கு சென்று தீபாவளிக்கு புத்தாடை எடுப்போம் என்று கூறியுள்ளார்.

    ஆனால், சவாரி முடிந்து சென்னை செல்வதற்குள் காரில் தீப்பிடித்து புவனேஷ் பரிதாபமாக இறந்துள்ளார்.

    தனது கணவர் இறந்த தகவல் அறிந்ததும் சித்ரா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
    ×