search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rangasamy instructions"

    • மத்திய மின் அமைச்சக ஒருங்கிணைப்புடன், புதுவை அரசின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை மற்றும் மின்துறை ஒருங்கிணைந்து மின்சார வாகன கண்காட்சியை நடத்துகிறது.
    • வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்று அரங்குகள் அமைத்துள்ளன.

    புதுச்சேரி:

    மத்திய மின் அமைச்சக ஒருங்கிணைப்புடன், புதுவை அரசின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை மற்றும் மின்துறை ஒருங்கிணைந்து மின்சார வாகன கண்காட்சியை நடத்துகிறது.

    மின்சார வாகனங்களின் பயன்பாடை ஊக்குவிக்கும் வகையில் 5 நாட்கள் நடைபெறும் கண்காட்சியின் தொடக்க விழா  காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்து குத்து விளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., போக்குவரத்து செயலர் முத்தம்மா, மின்துறை செயலர் அருண், மின்துணை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், எரிசக்தி முகமை தொழில்நுட்ப உதவியாளர் குமரேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சி  தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட இரு, 3 சக்கர வாகன விற்பனையாளர்கள், கார் டீலர்கள் தங்கள் தயாரிப்புகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப் படுத்தியிருந்தனர். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்று அரங்குகள் அமைத்துள்ளன.

    கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்சார வாகன கண்காட்சியில் 20 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புகையில்லாத சூழலை இந்த வாகனங்கள் உருவாக்கும். சுற்றுலா நகரமாக உருவாகும் புதுவையில் புகையில்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

    மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மின் வாகன கண்காட்சியை நடத்துகிறோம். இந்த வாகனங்களில் பராமரிப்பு செலவு குறைவு. குறைந்த மெகாவாட்டில் அதிக தூரம் செல்லும். பாதுகாப்பான உணர்வு இருக்கும். புதுவையில் மின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

    இதை மேலும் அதிகரிக்க வங்கிகள் மூலம் எளிதாக கடன் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் மின் வாகனங்களை பயன்படுத்தி புதுவையை புகையில்லாத நகரமாக மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×