search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College bus clash"

    • மகளிர் கல்லூரி பேருந்து கரூரிலிருந்து 60 மாணவிகளுடன் இன்று காலை கரூரை அடுத்த வெண்ணைமலை பகுதியில் சென்று கொண்டிருந்தது
    • வெண்ணைமலை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான அரிசி லாரியின் மீது கல்லூரி பேருந்து மோதியது.

    கரூர்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரி பேருந்து வழக்கம்போல கரூரிலிருந்து 60 மாணவிகளுடன் இன்று காலை கரூரை அடுத்த வெண்ணைமலை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    டிரைவராக மகேஷ் (43) என்பவர் பணியில் இருந்தார். அப்போது வெண்ணைமலை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான அரிசி லாரியின் மீது கல்லூரி பேருந்து மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 கல்லூரி மாணவிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்த மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் கரூர் அண்ணா வளைவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதற்கிடையில், தொடர்ந்து தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் ஏற்கனவே முறையாக பேருந்தை இயக்காத காரணத்தால் சிறு விபத்துகள் இரண்டு முறை ஏற்பட்டுள்ளதாகவும், மதுபோதையில் பேருந்து ஓட்டுனர் வாகனத்தை இயக்குவதாகவும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். எனவே, போக்குவரத்து துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×