search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP LEADER REARRESTED"

    • ஜாமீனில் வெளியே வர இருந்த நிலையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்
    • திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக அடுத்தடுத்த கைது என நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் மதுபான கூடத்துடன் இணைந்த கேளிக்கை விடுதி திறக்கப்பட்டது. இதனை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க. சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் புத்தூர் 4 ரோடு பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது.

    இதையடுத்து ராஜசேகரன் உள்ளிட்ட 62 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்தப் போராட்டத்தின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தி.மு.க.வினரும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர், இளைஞரணி மாநில நிர்வாகி கௌதம் நாகராஜன், காளீஸ்வரன், நாகேந்திரன் உள்ளிட்ட 9 பேர் மீது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி கூடுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மற்றவர்களை மாலையில் விடுவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகரில் 9 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பா.ஜ.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட 9 பேருக்கும் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் இந்துக்களை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து கடந்த மாதம் பா.ஜ.க. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    அப்போது கைது செய்யப்பட்ட பா.ஜ.க.வினருக்கும் கே.கே.நகர் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதில் ராஜசேகர் உள்ளிட்ட 9 பேர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று மாலை ராஜசேகரை கைது செய்வதாக கூறி போலீசார் கைதுவாரண்டை சிறையில் சமர்ப்பித்தனர்.

    இதனால் சிறையில் இருந்து வெளியே வரும் நிலையில் மீண்டும் ராஜசேகர் கைது செய்யப்பட்டார். மீண்டும் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இது திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் தொடர்வதாக நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர்.

    ×