search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா"

    • பள்ளி வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு.
    • கல்வி அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்டு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நென்னல் மண்டலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு ஏற்பட்டது.

    தொடர் மழை காரணமாக பள்ளி வகுப்பறையில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்யும் போது பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் குடை பிடித்து அமர்ந்தபடி பாடம் கவனிக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வெளியானது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாவட்ட கலெக்டர் குமார் தீபக் மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர்.

    அப்போது பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மேற்கூறையில் கசிவு இருப்பதை கண்டனர். மேலும் அந்த பள்ளியில் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் இருந்தாலும் கூரையில் கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை வேண்டுமென்றே அமர வைத்து குடைபிடித்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நென்னல் மண்டல கல்வி அலுவலர் மற்றும் பள்ளி உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 

    • பிரசவத்திற்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், தும்முகுடேம் மண்டலம், டபிள்யூ ரெகுபள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்னா. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நேற்று ஸ்வப்னாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. பிரசவம் பார்ப்பதற்கு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால் அவர் பிரசவ வலியால் கதறி துடித்தார்.

    இதனைக் கண்ட அவரது உறவினர்கள் இதுகுறித்து தெள்ளம் எம்.எல்.ஏ. டாக்டர் வெங்கட்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த எம்.எல்.ஏ. வெங்கட்ராவ் ஸ்வப்னாவை பரிசோதித்தார். அப்போது ஸ்வப்னாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே பிரசவம் பார்க்க முடியும் என்பதை அறிந்து அவரது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஸ்வப்னாவை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்து எம்.எல்.ஏ. குழந்தையை வெளியே எடுத்தார்.

    ஸ்வப்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்த எம்.எல்.ஏ வெங்கட்ராவுக்கு ஸ்வப்னாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.
    • ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் ATM இயந்திரத்தில் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் பெவிகால் பயன்படுத்தி கொள்ளையடித்த சம்பவம் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சுபம் என்ற சிறுவன் தனது காதலிக்கு செலவு செய்வதற்காக ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்களை பெவிகால் கொண்டு சுபமும் அவனது நண்பனும் ஒட்டியுள்ளனர்.

    இதனால் ஏ.டி.எம். இல் பணம் வெளியே வராமல் இடையில் சிக்கி கொள்ளும். இதனால் வாடிக்கையாளர்கள் பணம் இல்லை என்று நினைத்து வெளியே சென்று விடுகின்றனர். பின்னர் உள்ளே வரும் சிறுவர்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்பை வெளியே எடுத்து ஏ.டி.எம். இல் சிக்கி கொண்ட பணத்தை வெளியே எடுக்கின்றனர்.

    இந்த சிறுவர்களின் டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.

    தொடர்ந்து வங்கிக்கணக்கில் இருந்து தங்களது பணம் திருடப்படுவதை அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிகளில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுவர்கள் ஏ.டி.எம். இல் திருடுவது பதிவாகியுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபம் மற்றும் அவரது காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
    • கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஸ்ரீராம் நகர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதலை குட்டி ஒன்று புகுந்தது. பிளாட்பாரத்தில் அதிக அளவில் பயணிகள் இல்லை. இதனால் முதலை குட்டி பிளாட்பாரத்தில் ஏறி ஊர்ந்து சென்றது.

    இதனைக்கண்ட ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து முதலை குட்டியை லாவகமாக பிடித்தனர்.

    இந்த குட்டிக்கு 6 மாதம் வயது என தெரிவித்தனர். முதலை குட்டியை பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    இந்த ரெயில் நிலையம் அருகே உள்ள கிராமத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரிய முதலை ஒன்று புகுந்தது. அதனை கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். அடுத்தடுத்து முதலைகள் புகுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது அமராவதி ஆந்திராவின் தலைநகராக உருவாக்கப்படும் என அறிவிப்பு.
    • பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி மூன்று இடங்களில் தலைநகர் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலம் ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது 10 வருடங்களுக்கு ஐதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும். அதன்பின் தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ தலைநகராக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த மாதம் 2-ந்தேதியுடன் 10 வருடம் முடிவடைந்தது. இதனால் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகிவிட்டது. ஆந்திர மாநிலத்திற்கு தலைநகர் இல்லாமல் உள்ளது.

    ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது அமராவதியை புதிய தலைநகரமாக உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டது. அதன்பின் ஜெகன்மோகன் ரெட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகர் என்ற திட்டத்தை உருவாக்கினார்.

    என்ற போதிலும் இதுவரை எந்த நகரும் இன்றும் தலைநகராக உருவாக்கப்படவில்லை. தலைநகரம் தேர்ந்தெடுக்கப்படும் வரை வெலகபுடி தற்காலிகமாக செயல்பட்டது.

    தலைநகரம் அரசு அதிகாரிகள் பணிபுரியும் முக்கிய முனையமாக செயல்படக் கூடியது. முக்கிய அரசு அமைப்புகளான நீதித்துறை, நிர்வாக அலுவலகங்கள், சட்டமன்றம் போன்றவை தலைநகரத்தில் இருக்கும். நிர்வாகத்தின் இந்த மையப்படுத்தல் திறமையான நிர்வாகம், கொள்கை உருவாக்கம் மற்றும் பொது சேவை வழங்கல் ஆகியவற்றை எளிதாக்குகிறது.

    குந்தூர் மாவட்டத்தின் கிருஷ்ணா நதியோரம் அமைந்துள்ள அமராவதி, சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

    51 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சிறந்த வகையில் தலைநகரை உருவாக்க கடந்த 2015-ல் மதிப்பீடு செய்யப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து சுமார் 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்தால் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், 2019-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி தோல்வியடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார்.

    அமராவதி தலைநகராக மாறுவதற்கான அனைத்து திட்டங்களுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தடைபோட்டார். திட்டங்களுக்கான பட்ஜெட்டை குறைக்க சிங்கப்பூர் நிறுவனம் வெளியேறியது. அத்துடன் மூன்று தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டார். இதனால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியது. நிலத்தை கொடுக்கக் கூடியவர்கள் உச்சநீதிமன்றததை நாடினர்.

    தற்போது சந்திரபாபு நாயுடன் மீண்டும் வெற்றி பெற்று முதல்வராகியுள்ளார். இதனால் அமராவதிதான் மாநில தலைநகர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். விசாகப்பட்டினர் பொருளாதார தலைநகராக உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    அமராவதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட சந்திரபாவு நாயுடு, தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு மக்களின் தலைநகர் மீண்டும் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    ஆந்திராவும் அமராவதியை மீண்டும் கட்டுவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடியுள்ளது. மத்திய அரசு நிலம் கையகப்படுத்துவதற்கான மொத்த தொகையான 2500 கோடி ரூபாயில் 1500 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

    அமராவதியை தலைநகர் திட்டம் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் ஆந்திரா தலைநகர் இல்லாமல் உள்ளது.

    • ஆசிரியர் சீனிவாஸ் தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார்.
    • கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.

    ஆசிரியப்பணி அறப்பணி... அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள், நாளைய இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள்.

    ஒரு மாணவனோ, மாணவியோ தங்களது பெற்றோர்களைவிட அதிக நேரம் ஆசிரியரின் கண்காணிப்பிலேயே அதிகம் உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

    பல ஆசிரியர்கள் தங்கள் பணியை மாணவர்களுக்காக அர்ப்பணித்து, மாணவர்களிடம் மட்டுமல்ல அந்த பகுதி மக்களிடமும் நன்மதிப்பை பெற்று விடுகிறார்கள்.

    குறிப்பாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள், வகுப்பறையில் பாடம் கற்றுக்கொடுப்பதையும் தாண்டி, ஒவ்வொரு மாணவர்களின் உயர்வுக்கும் தனிப்பட்ட முறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.

    இதனால் அவர்கள் அந்த பள்ளியில் இருந்து மாறுதலாகி செல்லும்போதோ, பணி ஓய்வு பெற்று செல்லும்போதோ மாணவர்கள் அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் நெகிழ்ச்சி சம்பவங்கள் பல முறை நடந்து உள்ளது.

    அதுபோன்ற நெகிழ்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்திலும் நடந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் பொனகல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜே.சீனிவாஸ் (வயது53).

    இவர் அந்த பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். அந்த பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலனில் அதிக கவனம் எடுத்து பணியாற்றினார். அவர் பணியில் சேர்ந்தபோது அந்த பள்ளியில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இருந்தனர்.

    தனது முயற்சியால் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தார்.

    தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார். மாணவர்களும் அவரை தங்களின் பாசத்துக்குரியவராகவே பார்த்தனர். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட அக்கறை எடுத்தார். கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆசிரியர் சீனிவாஸ் அக்கபெல்லிகுடாவில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

    இதனால் பொனகல் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த அந்த பிஞ்சு மாணவர்கள் மிகவும் தவித்துபோய்விட்டனர்.

    அவரை பிரிய மனமில்லாமல் அழுதனர். மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியரின் பணியிட மாறுதலை திரும்ப பெற அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    அதற்கெல்லாம் வழியில்லை. இடமாறுதல் உத்தரவை திரும்ப பெற வாய்ப்பு இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

    ஆசிரியர் சீனிவாசின் பிரிவால் ஏங்கிய மாணவர்களை தேற்ற முடியாமல் இருந்த பெற்றோர்கள் ஒரு முடிவு செய்தனர்.

    ஆம்... அந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த 250 மாணவர்களில் 133 பேர், அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்றுக்கொண்டு, 3 கி.மீ. தொலைவில் அக்கபெல்லிகுடாவில் உள்ள பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.

    இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தெலுங்கானா மாநில மக்களில் பலர், இப்படியும் ஒரு ஆசிரியரா... நமக்கு கிடைக்கவில்லையே என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

    • வாத்தியார்னா இப்படித்தான் இருக்கணும்.
    • பிடித்த ஆசிரியர் மாறி சென்றால் மாணவர்களிடம் வருத்தம் இருக்கும்.

    ஐதராபாத், ஜூலை.5-

    பள்ளியில் கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர் இட மாற்றம் செய்யப்பட்டால் மாணவர்கள் 'ஹையா... இனி ஜாலிதான்...' என்று உற்சாகமாக கொண்டாடு வார்கள்.

    ஆனால் ஒரு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்ட தும் நாங்களும் அவருடன் அந்த பள்ளிக்கு செல்கி றோம் என்று புறப்பட்ட 133 மாணவர்களை பார்த்ததும் வாத்தியார்னா இப்படித் தான் இருக்கணும் என்று ஒட்டுமொத்த கல்வித் துறையையும் கர்வப்பட வைத்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியில் மாவட்டம் பொனகல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்கள் ஸ்ரீனிவாசன் (53).

    அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு ஸ்ரீனிவாஸ் வெறும் ஆசிரியர் மட்டுமல்ல. பெற்றோர், பாதுகாவலர், குழந்தைகளின் மனம் கவர்ந்த ஆசிரியர் என்று பல முகங்கள் கொண்டவர். அரசு பள்ளிதானே... கட மைக்கு வேலை செய்தால் போதும். மாத கடைசியில் எப்படியும் சம்பளம் வந்து விடப் போகிறது என்று நினைக்காதவர்.

    மாணவர்கள் படிப்பு முதல் ஒழுக்கம் வரை கடைபிடிப்பதில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். அதே நேரம் ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு உறவினர் போல் பரிவுகாட்டி பழகுவார்.

    ஒரு மாணவர் ஒரு நாள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் உடனடியாக பெற்றோரை தொடர்பு கொண்டு விசாரிப்பார். ஏதாவது காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருந் தால் நேரடியாக வீடுகளுக்கு சென்று பேசி பிரச்சினை களை தீர்த்து பள்ளிக்கு வரவழைப்பார்.

    தினமும் ஆசிரியர் ஸ்ரீனி வாசை பார்த்தால் மாணவர் களுக்கு சந்தோசம். அதே போல்தான் ஸ்ரீனிவாசுக்கும்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் அக்காபெல்லிகுடா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு இடமாறுதல் செய்யப் பட்டார். தற்போது வேலை பார்க்கும் பள்ளியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அந்த பள்ளி உள்ளது.

    தங்கள் ஆசிரியர் இட மாற்றம் செய்யப்பட்டதும் மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறிவிட்டனர். நீங்கள் போக வேண்டாம் சார் என்று கெஞ்சினார்கள். இந்த தகவலை அறிந்த பெற்றோர்களும் பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இடமாற்றத்தை எதுவும் செய்ய முடியாது என்பதை மாணவர்கள் 133 பேரும் உணர்ந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆசிரியர் இடம் மாற்றம் செய்யப்பட்ட அதே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்கள்.

    மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியர் மாறி சென்றால் மாணவர்களிடம் வருத்தம் இருக்கும். சில நாட்களில் அதுவும் சரியாகி விடும். ஆனால் ஆசிரியர் மாறிச் சென்ற அதே பள்ளியில் இப்படி ஒட்டுமொத்த மாணவர்களும் விலகி அந்த ஆசிரியருடன் சென்று இருப்பது நாங்கள் எங்குமே இதுவரை கேள்விப்பட வில்லை என்று மாவட்ட கல்வி அதிகாரி யாதையா தெரிவித்தார்.

    வாத்தியார்னா இப்படித்தான் இருக்கணும் என்று அவர் பெருமையுடன் கூறினார்.

    ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் மிகவும் அடக்கத்துடன் கூறியதாவது:-

    பெற்றோர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக் கையை காட்டுகிறது. என திறமைக்கு ஏற்ப கற்பிப்பதை கடமையாக செய்தேன். அவர்கள் என்னை விரும்பி னார்கள். அரசு பள்ளிகளும் நல்ல தரமாக உள்ளன. எனவே பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    • தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.
    • கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெயில்களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியிடம் மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் கைதிகளின் குடும்பத்தினர் அளித்த மனுக்களை ஆய்வு செய்தனர். இதில் விடுதலை செய்ய தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.

    இந்த பட்டியல் அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு கவர்னரிடம் அளித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளி ஜெயிலில் இருந்து 213 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர். இந்த கைதிகளில் 205 பேர் ஆயுள் தண்டனை 8 பேர் அதற்கு குறைவான தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை
    • இலவசமாக மாடுகளை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சிர்சில்லா மாவட்டம், வெமுலவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக பசு மற்றும் எருதுக்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    தானமாக பெறும் மாடுகளை வளர்ப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோசாலை அமைக்கப்பட்டது. முதலில் 300 மாடுகளை பராமரிக்கும் அளவு கொட்டகை அமைத்தனர்.

    பக்தர்கள் கோவிலுக்கு தானமாக வழங்கும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் தற்போது 2500-க்கும் மேற்பட்ட பசு மற்றும் மாடுகள் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை.

    தற்போது உள்ள கோசாலையில் 450 முதல் 500 மாடுகள் வரை மட்டுமே பராமரிக்க வசதிகள் உள்ளது.

    எனவே மீதமுள்ள மாடுகளை, ஏழை விவசாயிகள் மற்றும் இந்து அமைப்புகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் வழங்கி வருகின்றனர். இலவசமாக மாடுகளை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இதற்காக கலெக்டர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கோவில் செயல் அலுவலர், உதவி கோட்ட அலுவலர், வேளாண்மை அலுவலர், நகராட்சி ஆணையர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    அவர்களின் பரிந்துரையின் பேரில் மாடுகளை இலவசமாக வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • ரூபா தேவி கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.வின் மனைவி எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம் சோப்தண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மெடிப்பள்ளி சத்தியம். இவரது மனைவி ரூபா தேவி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மெடிப்பள்ளி சத்தியம் ஐதராபாத் அடுத்த அல்வால் பஞ்சசீலா காலனியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ரூபா தேவி விகாரபாத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மெடிப்பள்ளி சத்தியம் எம்.எல்.ஏ. தனது மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் திருப்பதி மற்றும் பல்வேறு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ரூபா தேவி கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். நேற்று காலை தொகுதிக்குச் சென்ற எம்.எல்.ஏ. சத்தியம் மாலை வரை தொகுதியிலேயே இருந்தார்.

    நேற்று நள்ளிரவு எம்.எல்.ஏ. சத்யம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் ரூபா தேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட சத்தியம் எம்.எல்.ஏ. மற்றும் குழந்தைகள் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரூபா தேவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.வின் மனைவி எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
    • உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் துணை இயக்குநராகப் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.

    ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி பயிற்சி பெற்று வரும் உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.

    அப்போது ஐஏஎஸ் உமா ஹார்த்திக்கு அவரது தந்தை வெங்கடேஸ்வரலு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    • வாக்குவாதம் முற்றி இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்டனர்.
    • பிரச்சினை உள்ள பகுதிகளில் வன்முறை தலைதூக்குவதை தவிர்க்க முடியும்.

    இஸ்லாமியர்கள் சார்பில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தின் மெடாக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக இரு சமூகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே இடத்தில் நான்கிற்கும் அதிகமானோர் ஒன்றுகூட அனுமதி இல்லை. இதன் மூலம் பிரச்சினை உள்ள பகுதிகளில் வன்முறை தலைதூக்குவதை தவிர்க்க முடியும்.

    மோதல் தொடர்பாக ஏற்கனவே ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக இரு பிரிவினரை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து, அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    "மோதல் ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்," என்று மெடாக் பகுதிக்கான காவல் துறை கண்காணிப்பாளர் பி பால சுவாமி தெரிவித்துள்ளார். 

    ×