என் மலர்
நீங்கள் தேடியது "டிடிவி தினகரன்"
- எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
- ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
இது தொடர்பாகவும் சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்க போகிறீர்களா? என்பது பற்றி நிருபர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.
இதனிடையே அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் விமர்சித்துள்ளாரே என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் இப்போதும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அது பற்றி எல்லாம் எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.
- விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள்.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது.
சென்னை:
அண்ணா நினைவிடத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று கூறிக்கொண்டு அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார்.
இது பற்றி அவரது கட்சியில் சேர்ந்து உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் அவர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 1988-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுபட்ட போது 1989-ம் ஆண்டு தேர்தலில் எங்கள் வாக்குகள் ஜெயலலிதா அணிக்கும் ஜானகி அணிக்கும் தான் சென்றது.
இப்போதும் அ.தி.மு.க. வாக்குகள் என்றும் எங்களுக்குதான் கிடைக்கும். விஜய் நினைப்பதை போல அவருக்கு கிடைக்காது. விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதே நேரத்தில் அதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கப்போவது இல்லை.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் எனது அருமை அண்ணன்தான். எடப்பாடி பழனிசாமி எப்படி எனக்கு அருமை அண்ணனோ அதே போன்று தான் ஓ.பன்னீர் செல்வமும். செங்கோட்டையன் கூட எனக்கு அருமை அண்ணன் தான்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது. தமிழகம் கஞ்சா சந்தையாக விளங்கி வருகிறது. போதை பொருள் புழக்கம் பட்டி தொட்டி எங்கும் இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
வருகிற தேர்தலில் உறுதியாக தி.மு.க. ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவுக்கு கொண்டு வரும். தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள். தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என தி.மு.க.வினர் எண்ணுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறதா? இல்லையா? என்பதே தெளிவாக தெரியவில்லை. ஆனால் தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
எங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்தவே அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் முழு மனதுடன் இணைந்துள்ளோம்.
விஜய் தி.மு.க.வை வீழ்த்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். விஜய் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான்.
தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எங்களுக்கும் சொல்லி கொடுத்த பாடம். அதை தான் நாங்கள் செயல்படுத்த உள்ளோம்.
இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.
- பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம்.
பெரியகுளம்:
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ள நிலையில் மேலும் சிலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., த.வெ.க.வில் இணைந்து வந்த நிலையிலும் ஓ.பி.எஸ். மவுனமாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2வது நாளாக ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் பலர் தமிழகம் முழுவதிலும் இருந்து இதில் கலந்து கொண்டனர்.
ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இணைந்தாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது என்றும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்து வருவதால் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதப்படுத்தி வந்தார். அ.ம.மு.க. அணியில் குக்கர் சின்னத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேருக்கு சீட்டு வழங்கப்பட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம், போடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு இதுவரை தோல்வியே காணாத தலைவராக ஓ.பி.எஸ். உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எனவே வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது தமிழக வெற்றிக்கழகம் ஆகிய அணிகளில் ஓ.பி.எஸ். இணைவார் என்று பரவலாக கருத்துகள் வெளியாகின. இன்று பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது நிர்வாகிகள் அனைவரும் நாம் அடுத்து எந்த அணியில் இடம்பெற வேண்டும்? எவ்வாறு தேர்தலில் பங்காற்ற வேண்டும்? என்ற கருத்தை துண்டுச்சீட்டில் எழுதி தருமாறும், பெரும்பான்மையான நிர்வாகிகள் அளிக்கும் ஆலோசனைகளின் முடிவை வைத்து தான் முடிவு எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வதாகவும், துண்டுச்சீட்டு மூலம் கருத்தை வைத்து முடிவு எடுக்க தங்களுக்கு விருப்பமில்லை என கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ராமநாதபுரம் தொகுதியில் நான் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டது தொண்டர்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க மட்டுமே.
ஆனால் அங்கும் என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டனர். தற்போது வரை அ.தி.மு.க. வலிமையாகவே உள்ளது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும். இதைத்தான் நான் இன்றும் வலியுறுத்தி வருகிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் ஒரு சில யூடியூப் சேனல்களில் நான் வெவ்வேறு அணியில் இணையப்போவதாக அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம். மீண்டும் நான் இணைய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரது நல்லெண்ணைத்தை காட்டுகிறது. அதைத்தான் நானும் கூறி வருகிறேன். அவர் நினைத்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வில் என்னை இணைக்க முடியும். அண்ணன் எடப்பாடி பழனிசாமி இதற்கு ரெடியாக உள்ளாரா? என்று கேட்டுச் சொல்ல வேண்டும். நான் இணைய தயாராகத்தான் உள்ளேன். எனவே ஒன்றிணைப்புகான முயற்சியில் டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள வேண்டும். ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வர முடியாது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைவர் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைவரும், நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்ற விடக்கூடாது என்பது தான் டி.டி.வி. தினகரன் மாறி மாறி பேசி வருகிறார். தமிழகத்தில் எந்த நடிகருக்கு வேண்டுமானாலும் விசிலடியுங்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை.
நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது. கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்பது விஜய்யின் பேராசையை காட்டுகிறது. தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாததை தமிழகம் மறக்கவில்லை.
இ.பி.எஸ். மீது எவ்வளவு குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என கூறி வந்த டி.டி.வி. தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லையென்று கூறுகிறார். பங்காளி சண்டை என்று கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. படர் தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம். பா.ஜ.க.வின் தாமரை நாட்டுக்கே நாசம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வரமுடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினால் டெல்லியில் இருந்து வந்து விடுகின்றனர் .
- கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும்.
தமிழக வெற்றிக்கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம், ஓ.பன்னீர் செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன்,
யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினால் டெல்லியில் இருந்து வந்து விடுகின்றனர் . என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தானே தெரியும். யாருடன் கூட்டணி பேச்சு என்பதை சொல்லாமல் இருப்பது தான் சரி.
டி.டி.வி. தினகரன் சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம்.
ராமதாசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இப்போதுதான் செய்தி வந்தது. கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும் என்றார்.
- தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது.
- நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அ.தி.மு.க.வின் ஒரு பகுதியும், அதேபோல பா.ஜ.க.வும் இணைந்ததை தவிர அதை நாங்கள் வலுவாக பார்க்கவில்லை, அது பலவீனமான கூட்டணி. எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க. வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியுமே தவிர, கூட்டத்தைக் கூட்டி காட்டி யாராலும் வெல்ல முடியாது.
தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையை இன்றைக்கு ஒவ்வொரு சர்வே மூலமாக நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், அதன் மூலமாக தங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களுடைய விருப்பம். அந்த விருப்பத்தை மோடியாலோ, வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
கிரைம், மாபியா, கரப்ஷன் எல்லாம் பிரதமர் மோடியின் கட்சிக்கும், அவர்களது கூட்டணிக்கும் தான் பொருந்துமே தவிர எங்களுக்கு ஒரு துளியும் பொருந்தாது. 11 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 நிச்சயமாக தரும். துணை முதலமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொண்டி ருக்கிறார். தமிழ்நாட்டில் யாராலும் அசைக்க முடியாத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொல்லுகின்ற அளவிற்கு பலவீனமான ஆட்சி கிடையாது. பலமான ஆட்சியில் இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள், அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பது தெரியும். தங்களுக்கு எந்த ஆட்சி உதவி செய்யும் என்பது தமிழ்நாடு மக்களுக்கு தெரியும். மோடி ஆயிரம் குற்றச்சாட்டுகளை சொல்லலாம், குறைகளை சொல்லலாம். ஆனால் அவர் தனக்கு முன்னால் இருக்கக்கூடிய மாநிலங்களை எல்லாம், குறிப்பாக பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் பார்த்துவிட்டு அதைவிட தமிழ்நாட்டில் ஏதாவது குற்றங்கள் கூட என்று சொன்னால் அப்போது நாங்கள் பதில் அளிக்கிறோம்.
யார் வந்தாலும் வந்தவர்களை வரவேற்கின்ற இயக்கம் தான் தி.மு.க. அவர்களுக்கு உரிய மரியாதை தருகிற தலைவர் தான் மு.க.ஸ்டாலின். எங்களை நம்பி வருகின்றவர்கள் கெட்டுப் போபவர்கள் கிடையாது. மற்றவர்களை நம்பி செல்பவர்கள் மோசம் போவதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு. தேசிய ஜனநாயக கூட்டணி காட்டும் ஒட்டுமொத்த கூட்டத்தையும் நாங்கள் மகளிர் அணி கூட்டத்தின் மூலமாகவே பீட் செய்து விடுவோம். பகுதி பகுதியாக மக்கள் அலையை கொண்டு செல்கின்ற சக்தி இந்தியாவிலேயே தி.மு.க.வுக்கு இருப்பதைப் போல வேறு எந்த இயக்கத்துக்கும் கிடை யாது.
நாங்கள் எப்போதும் எதிரிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இறுமாப்பு கொண்டவர்கள் கிடையாது. எதிரிகள் இருக்கிறார்கள், ஆனால் எங்களோடு மோதும் அளவிற்கு அவர்கள் வலிமையாக இல்லை. நாங்கள் சொன்னதை செய்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை தருகிறோம் என்று கூறினோம், அதை தந்துள்ளோம்.
நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் தருகிறோம் என்று கூறி ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்புவார்களா, அல்லது ஒரு கோடியே 32 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையைக் கொடுக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்புவார்களா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கள் வெற்றிக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்களுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை, கட்சி பிரச்சனை, அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம்.
- அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
டிடிவி தினகரன் கூறியதாவது:-
எங்களுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை, கட்சி பிரச்சனை, அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். நானும் எடப்பாடி பழனிசாமியும் முன்பு எப்படி இருந்தோமோ அதோபோல் ஒன்றிணைந்துவிட்டோம். எப்போதும்போல் அண்ணன், தம்பி போல் நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவோம். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. திமுக பற்றி விமர்சித்து பேசிய வைகோ மீண்டும் திமுக உடன் கூட்டணி வைத்துள்ளாரே அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வரும்போது நிச்சயம் தெரிவிப்போம்.
அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும், அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்.
- துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துணைப் பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.
பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார். தற்போது மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.
இந்நிலையில், டிடிவி தினகர் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை வரவேற்கிறேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
டிடிவி தினகரன் அவர்கள் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன்.
திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இபிஎஸ் பெயரை சொல்லவே டிடிவி தினகரன் தயங்குகிறார்.
- தற்போதுவரை பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை கொடுக்கவில்லை.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை கடந்த 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று புத்தக கண்காட்சியை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கண்காட்சி பலருக்கும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் அ.ம.மு.க. தே.ஜ.கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,.
"இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாடு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருநாளும் மக்கள் அந்தக் கூட்டணியை ஏற்கமாட்டார்கள். நேற்றுவரை இபிஎஸ்-க்கு துரோகி பட்டத்தை கொடுத்துவந்தார் டிடிவி தினகரன். இனி எப்படி அவருடன் வாக்கு கேட்பார், களம் காண்பார்? இன்று அவரது பெயரை சொல்லவே தயங்குகிறார். தற்போதுவரை பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை கொடுக்கவில்லை. ரூ.3400 கோடி வரை நிலுவையில் உள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் இந்த நிதி விடுவிக்கப்படும் என கூறுகிறார்கள். அவர்கள் எப்படி தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்பார்கள்? இந்த கூட்டணியின் படையெடுப்பை தமிழ்நாடு மக்கள் முறியடிப்பார்கள்." என தெரிவித்தார்.
- கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.
சென்னை:
அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்று இணைந்தது. இணைப்புக்கு பிறகு மத்திய மந்திரியும், பா.ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் பேட்டி அளித்தனர். அப்போது அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த அ.ம.மு.க. உறுதுணையாக இருக்கும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று 2021-ம் ஆண்டிலேயே அமித்ஷா விரும்பினார்.
2021-ம் ஆண்டு அமைக்க தவறிய ஜெயலலிதா ஆட்சியை இந்த முறை அமைத்தே தீருவோம். நாங்கள் எங்கள் பங்காளி சண்டைகளை ஓரம் வைத்து விட்டு அனைத்தையும் மறந்து சேர்ந்திருக்கிறோம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்ற நோக்கில் இணைந்திருக்கிறோம்.
எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தூக்கி எறிந்துவிட்டு முழு மனதோடு கூட்டணிக்கு வந்து இருக்கிறோம். கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என உங்களுக்கே தெரியும்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். இந்த கூட்டணி ஆட்சியில் அ.ம.மு.க. இடம் பெறும். தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்து உள்ளதற்கும் பேரை குறிப்பிடாமல் அவருக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.
- டி.டி.வி. தினகரனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், NDA கூட்டணியில் இருந்து அமமுக விலகியிருந்த சமயத்தில், "பழனிசாமியுடன் கூட்டணி போறதுக்கு பதில் தூக்கு மாட்டி தொங்கிட்டு போயிடலாம்" என்று டிடிவி தினகரன் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






