search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்"

    • வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
    • இன்றே விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    இதனையடுத்து நேற்று நடத்தப்பட்ட விசாரணையின்போது நீதிபதிகள், 'கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதில் பணமோசடி புகார் தொடர்புடைய கோப்பு இருந்ததையும் அமலாக்கத் துறை நிரூபிக்க வேண்டும்' என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் நீதிபதி அபய் எஸ்.ஒகா முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

    செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு ஆக. 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ஆக.5-ந்தேதிக்கு நீண்ட நாள் உள்ளது. இன்றே விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

    லோக் அதாலத் விசாரணை இருப்பதால் செந்தில் பாலாஜி மனுவை அடுத்த வாரம் விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் விசாரணையை ஒத்திவைத்தது.

    • மாநிலங்களில் உள்ள கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது.
    • நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

    கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

    மாநிலங்களில் உள்ள கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது. கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது.

    சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளில் மாநிலங்களுக்கான உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

    • கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கர்நாடக பகுதிகளில் மழை பெய்வதால் இப்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சென்னை:

    காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர முடியாது என்று கர்நாடக அரசு பிடி வாதமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 11-ந் தேதி கூடிய போது தமிழகத்துக்கு 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங் காற்று குழு பரிந்துரை செய்திருந்தது.

    ஆனால் 20 நாட்களுக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் வழங்க முடியாது என்று சொன்ன கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தமிழகத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி இருந்தார்.

    இப்படிப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32-வது கூட்டம் இன்று மதியம் கூடியது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தார் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கர்நாடகம் ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீர் ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய நீரின் அளவு பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

    கர்நாடக பகுதிகளில் மழை பெய்வதால் இப்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் போதிய தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்காது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும் ஆணையத்தில் வலியுறுத்தினார்கள்.

    இந்த கூட்டத்தில் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி, மாநில நீர்வளத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்கள் மாநில நிலவரங்களை எடுத்துக் கூறினார்கள்.

    • நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது.
    • பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது.

    புதுடெல்லி:

    நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டை தொடர்ந்து தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து இந்தியாவில் 4750 மையங்கள், 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 மையங்கள் வாரியான முடிவுகளை இணைய தளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

    நாடு முழுவதும் தேர்வு எழுதிய 23 லட்சத்து 33,162 பேரில், 2,321 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 30 ஆயிரத்து 204 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 81 ஆயிரத்து 550 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் எடுத்து உள்ளனர்.

    ராஜஸ்தானில் உள்ள சிகார் மையத்தில் 4297 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலும், 2037 பேர் 650-க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதிய 2250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை. 9,400-க்கும் அதிக மானவர்கள் நெகடிவ் மதிப்பெண் பெற்றனர். ஒரு மதிப்பெண் கூட பெறாததற்கு எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை என்று அர்த்தமல்ல. சில கேள்விகளுக்கு சரியான பதிலும், சில கேள்விகளுக்கு தவறான பதிலும் அளித்து இருக்கலாம். சரியான பதிலுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு, தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதே எந்த மதிப்பெண்ணும் பெறாததற்கு காரணமாகும்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையில் நீதிபதிகள் கே.பி, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டதாவது;-

    நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது. ஆனால் மே 3-ந் தேதி தான் வங்கி லாக்கருக்கு சென்றுள்ளது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில் தான் வினாத்தாள் இருந்துள்ளது.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றார்.

    அப்போது முக்கிய பிரச்சனையை விவாதிக்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    • கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும்.
    • பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.

    உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    பெயர் பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர் கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவிட்ட மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    உ.பி., உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவித்துள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ‘நீட்’ தேர்வு முடிவுகள், மையங்கள் வாரியாக நேற்று வெளியானது.
    • தமிழ்நாட்டில் எழுதியவர்களின் புள்ளிவிவரங்களில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    எம் பி பி எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை என்று அழைக்கப்படும் என்.டி.ஏ. நடத்துகிறது. அதன்படி, 2024, 25-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது.

    நாடு முழுவதும் 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த மாதம் (ஜூன்) 4-ம் தேதி வெளியானது.

    தேர்வு எழுதிய 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேரில், 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 மாணவர்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 மாணவிகள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்று தகுதி அடைந்திருந்தனர்.

    மேலும் இந்த தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல், 1,563 மாணவ-மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. இதுதவிர வினாத்தாள் விற்பனை, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதனைத் தொடர்ந்து இந்த தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அதோடு பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் இதுதொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். மேலும், 'நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும்போது, மாணவர்களின் பெயரை மறைத்து 'டம்மி' வரிசை எண்ணை பயன்படுத்தி வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டனர்.

    ஒரு மாணவர் தன்னுடைய மதிப்பெண் மட்டுமல்லாது, மற்றவர்களும் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும், ஒரு நகரத்தில் அல்லது தேர்வு மையங்களில் அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனரா? என்பதை அறிந்து கொள்ளும் வகையிலும் தேர்வு முடிவுகளை அப்படி வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று பிற்பகலில் மீண்டும் வெளியிட்டது.

    அதன்படி, 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் தேர்வை எழுதிய தேர்வர்கள் அனைவருடைய மதிப்பெண்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட்டப்போது, தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 449 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து, அவர்களில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தேர்வை எழுதியதாகவும், அவர்களில் 89 ஆயிரத்து 426 பேர் தகுதி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, நகரங்கள், தேர்வு மையங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்பட்டிருந்த புள்ளி விவரங்களின்படி, ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 664 பேரின் மதிப்பெண் பட்டியல் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சேலம், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட சில நகரங்களில் தேர்வு எழுதியவர்கள் 700-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தனர். 31 நகரங்களில் தேர்வு எழுதியவர்களில் பரவலாக 500 மற்றும் 600-க்கும் மேல் மதிப்பெண் பெற்றிருந்ததை பார்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக, இந்த தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால், சில மாணவர்கள் "மைனஸ்'' மதிப்பெண்ணையும் எடுத்திருந்தனர். உதாரணமாக ஒரு மாணவர், -28 மதிப்பெண் எடுத்திருந்ததும் நேற்று வெளியான மதிப்பெண் பட்டியலில் தெரியவந்தது.

    கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதி இருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வித்தியாசம் குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் கேட்டபோது, 'சில வெளிமாநில தேர்வர்கள் தமிழ்நாட்டில் தேர்வு மையங்களில் எழுதியிருக்கலாம். அப்படி எழுதியிருக்கும் பட்சத்தில் 50 அல்லது 100 எண்ணிக்கையில் தான் வித்தியாசம் வரும். ஆனால் 700-க்கு மேல் வருவது குளறுபடியை தான் காட்டுகிறது. கல்வியில் வெளிப்படைத்தன்மை அவசியம். சுப்ரீம் கோர்ட்டு இந்த விஷயத்தில் நல்ல தீர்வை கொடுக்க வேண்டும்' என்றார்.

    இதுமட்டுமல்லாமல், அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்களில் பலர் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதாகவும், அதிக மதிப்பெண் பெற்ற அந்தமான் நிக்கோபர் தீவைச் சேர்ந்த மாணவர் ராஜஸ்தான் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியிருப்பதாகவும் கல்வியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

    மேலும் தென் மாநிலங்களை காட்டிலும், வடமாநிலங்களில்தான் நீட் தேர்வு முறைகேடுகள் அதிகம் நடந்திருப்பதாகவும், கண்டிப்பாக இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு, தேசிய தேர்வு முகமையிடம் கேள்வி எழுப்பும் என்று நம்புவதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்.
    • நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும்.

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும், ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும் என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், மனுத்தாக்கல் செய்த மாணவர்களில் எத்தனை பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று  கேள்வி எழுப்பியது.

    நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மருத்துவ படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.
    • ஆன்லைன் மூலம் மனுவை அனுப்பி சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் மாதம் தோறும் திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க மறுத்து வருகிறது.

    சமீபத்தில் காவிரி நதி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் கூடி தமிழ்நாட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதையும் ஏற்க கர்நாடகா அரசு மறுத்து விட்டது.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னையில் நேற்று சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி தமிழ்நாடு பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.

    நாளை (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் மனுவை அனுப்பி சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நடவடிக்கை மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சட்டசபை கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தர தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து விவாதிக்க அனைத்து தமிழக சட்டசபை கட்சித்தலைவர்கள் கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் செல்வப் பெருத்தகை, பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு நீரை திறந்து விடாத கர்நாடக அரசின் முடிவை ஏற்க முடியாது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இதையடுத்து, கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தருவதற்கு தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுப்படி தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    காவிரி நடுவர்மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளுக்கு இணங்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என மற்றொரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

    • தற்போது காவிரி அணைகளில் 60 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது
    • சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது.

    சென்னை:

    கர்நாடகத்தில் இந்த முறை இயல்பான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அணைகளில் 28 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு பற்றாக்குறையாக உள்ளது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம். அதனால் இந்த மாத இறுதி வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என்று கூறினோம். ஆனாலும் அந்த குழு, தினமும் ஒரு டிஎம்சி நீர் தமிழகத்திற்கு திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    தற்போது காவிரி அணைகளில் 60 டி எம் சி நீர் இருப்பு உள்ளது. இது எங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. அதே நேரத்தில் கடந்த 3 நாட்களாக கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த உத்தரவை எதிா்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து ஆலோசிக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்துள்ளோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளார்.

    கர்நாடக அரசின் இந்த முடிவு தமிழக விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் காவிரிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

    காவிரியில் தினமும் ஒரு டிஎம்சி நீர் இந்த மாதம் (ஜூலை) இறுதி வரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

    இந்த ஒழுங்காற்று குழு என்பது தமிழ்நாடு குழு அல்ல. தமிழகம், கர்நாடகம் என 2 மாநிலத்திற்கும் பொதுவான குழு. இது சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழு.

    இந்த குழு கர்நாடக அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பை கணக்கெடுத்து கர்நாடகத்தின் தேவைக்கு போக தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்வது சிறுபிள்ளைகள் விளையாடுகிறபோது அழுகுணி ஆட்டம் ஆடுவதுபோல் இருக்கிறது. இதே ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு கூட பாதகமாக பலமுறை கருத்து சொல்லி இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டால் உருவாக்கப்பட்ட ஒழுங்காற்று குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் ஆணையை எதிர்த்து சொல்வது போன்றதாகும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு சொல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது.

    தமிழ்நாட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு வழி தெரியும். இந்த விவகாரத்தில் பிரச்சனை எழாமல் இருக்க ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்துவதுதான் அண்டை மாநிலங்களுக்கு இடையே நட்புறவை பலப்படுத்துவதாக இருக்கும். இது தெரியாதவரல்ல கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா. அதுபோலவே நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருக்கும் இது நன்றாக தெரியும்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    • குரானாவுக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது.
    • இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குரானா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பர்விந்தர் சிங் குரானாவுக்கு கடந்த ஆண்டு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    குரானாவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்யக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை அடுத்து டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குரானா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐகோர்ட் விதித்த தற்காலிக தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    இதுதொடர்பாக, நீதிபதிகள் கூறுகையில், குரானா மீது பயங்கரவாத குற்றம் சாட்டப்படாத நிலையில் ஐகோர்ட் ஜாமினில் தாமதம் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

    மேலும், பயங்கரவாத வழக்குகளில் யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது போன்ற அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே ஜாமின் உத்தரவை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க வேண்டும். அங்கு ஒழுங்கு முறைகேடு அல்லது சட்ட விதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இப்படி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இது பேரழிவை ஏற்படுத்தும். இப்படி தடை கொடுத்தால் பேரழிவுதான் ஏற்படும் என தெரிவித்தனர்.

    எந்தவொரு காரணமும் கூறாமல் இயந்திரத்தனமான முறையில் ஜாமின் உத்தரவுகளை நிறுத்தி வைப்பதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட காரணங்களை தெரிவிக்காமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக வழக்கமான ஜாமின் உத்தரவை நீட்டித்த டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.

    • மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது.
    • மெட்ராஸ் கிளப் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே குதிரை பந்தய மைதானம் உள்ளது. சுமார் 52.34 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஆகும். இந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தக்கோரி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் குத்தகை பாக்கியை செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகம் முன்வரவில்லை. அத்துடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குத்தகை பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும், செலுத்தாத பட்சத்தில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் (ஜூன்) 24-ம்தேதி உத்தரவிட்டது. அதன்பிறகும் குத்தகை தொகையான சுமார் ரூ.822 கோடியை அரசுக்கு செலுத்தாமல் இருந்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைத்தனர்.

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் கிளப் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ் வி என் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, குதிரை பந்தயம் மைதானத்திற்கு சீல் வைத்தது செல்லும் என தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது

    ×