என் மலர்
Recap 2024

2025 REWIND: மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநர்... ஜனாதிபதியின் 14 கேள்விகளும் சுப்ரீம் கோர்ட்டின் விளக்கமும்
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
- இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு இருந்தார்.
முக்கியமாக, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அறிவித்தார்.
இதனால் அந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவற்றை அவர் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.
எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீண்ட கால விசாரணைக்குப்பின் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றன.
அதேநேரம் இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்த கேள்விகள் தொடர்பாக 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சுந்துர்கர் அடங்கிய இந்த அமர்வில் நடந்த விசாரணை நிறைவடைந்து கடந்த செப்டம்பர் 11-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதன்படி மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்தனர்.
5 நீதிபதிகளும் ஒருமித்த வகையில் வழங்கிய தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-
மாநில சட்டசபைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை, ஆளுநர்கள் அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை மீறி நீண்ட காலம் கிடப்பில் போட முடியாது.
அந்தவகையில், மாநில அரசில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது என பஞ்சாப் அரசுக்கு எதிராக ராம் கபூர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உடன்படுகிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட அனுமதிப்பது என்பது சட்டசபை அதிகாரத்தை மதிப்பிழக்கச்செய்வதாகவும், கூட்டாட்சி கொள்கைக்கு எதிராகவும் அமையும் என கருதுகிறோம்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதாவது ஒப்புதல் அளிப்பது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, தனது கருத்துடன் சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது ஆகியவை.
இதில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும். இதில் மத்திய அரசு கூறுவது போல 4-வது வாய்ப்பு இல்லை. இதில் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் தன் விருப்புரிமையுடன் செயல்பட முடியும்.
நிதி மசோதாவாக இல்லாத பட்சத்தில் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியும் அல்லது கருத்துகளுடன் சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கலாம்.
அதேநேரம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கெடு விதிப்பது பொருத்தமாக இருக்காது.
மசோதாக்கள் சட்டமாகி நடைமுறைக்கு வராத நிலையில், அவை குறித்த ஆளுநர்கள், ஜனாதிபதியின் முடிவுகளை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. சட்டமாகாத மசோதாக்களின் பொருளடக்கம் குறித்து கோர்ட்டு விசாரிக்க முடியாது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கோர்ட்டு விசாரணைக்கு உட்பட்டதல்ல. எனவே, ஆளுநர்களின் முடிவுகளை கோர்ட்டுகள் ஆய்வு செய்ய முடியாது. இது மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கும் பொருந்தும்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு ஜனாதிபதியையும் கட்டுப்படுத்தாது.
இருப்பினும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் வகையில், ஆளுநர்களின் விருப்புரிமை குறித்து கருத்து தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்க அளவான உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பிக்க முடியும்.
ஆளுநர்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர முடியாத வகையில் அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இருப்பினும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது கோர்ட்டு அளவாக தலையிட முடியும்.
ஆளுநர்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற தேவையில்லை.
அதேநேரம் மசோதா குறித்த தெளிவில்லாதபோது அல்லது சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை தேவைப்படும்போது, ஜனாதிபதி அரசியலமைப்பு சாசனத்தின் 143-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை கேட்டுப்பெறலாம்.
ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களின் உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்புப்பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது.
அந்தவகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்ற கோட்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரம் அனுமதிக்கவில்லை.
ஆளுநர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மசோதா சட்டமாகுமா என்ற கேள்விக்கே இடமில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டமியற்றும் பணியை ஐகோர்ட்டுகளோ, சுப்ரீம் கோர்ட்டோ பறித்துக்கொள்ள முடியாது.
அரசியல்சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற விதி தொடர்பான கேள்வி நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அதிகாரம் குறித்து ஏற்கனவே விரிவாக பதில் அளித்து விட்டதால், குறிப்பிட்ட பாணியில் பதில் அளிப்பது சாத்தியமில்லை.
மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் தாவாக்களை தீர்வுகாணும் சுப்ரீம் கோர்ட்டின் வரம்பு எல்லை குறித்த கேள்வியும் நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.






