என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி"
- மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
- தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் பட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கழிவறையை அங்கு படிக்கும் மாணவிகள் சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளங்களில் பரவியது.
அந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவரின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் சிலரை நடிக்க வைத்து இந்த வீடியோ எடுத்ததாகவும் பரபரப்பானது. இதுகுறித்து தெரியவந்ததும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி சாந்தி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா கூறுகையில், "இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தொடக்கக்கல்வி அதிகாரிகளின் அறிக்கையை தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.
- விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
- தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனை தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. இது பொய்யான செய்தி என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டாடும் பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 உறுதிமொழிகளை எடுக்க வேண்டும் என்றே பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். இதை திரித்து அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதாக பரப்பி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- புதிய பஸ்சை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பஸ்சில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவிகள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த வெற்றியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கருங்குளம் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 184 மாணவ, மாணவிகள் வந்து படித்து வருகின்றனர்.
மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வர வசதியாக முன்னாள் மாணவர் டாக்டர் முருகேசன், அவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகியோர் ரூ.27 லட்சத்தில் பள்ளிக்கு புதிய பஸ் வாங்கிக்கொடுத்தனர். இந்த பஸ் தொடக்க விழா சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். புதிய பஸ்சை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பஸ்சில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவிகள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் இளமாறன் நன்றி கூறினார்.
இதுதொடர்பாக கலெக்டர் கூறும்போது, "மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான டீசல் செலவு, டிரைவர் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை டாக்டர் முருகேசன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். அவரது சேவையை பாராட்டுகிறேன்," என்றார்.
- பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும்.
- பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.
பண்ருட்டி:
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பல்வேறு மாவட்டங்களுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல் நிலைப்பள்ளி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
முன்னதாக அவரை பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜேப்பியார் ஸ்டீல்ஸ் ஜாகிர் உசேன்,பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆடிட்டர் தியாகராஜன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்றனர்
இதில் மாவட்ட, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வுசெய்தார். அப்போது பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும். எனவே பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
- வகுப்பறை முழுவதும் ரசாயனத்தின் நெடி பரவியதால் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 13 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
- மாணவிகளை சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 9-ந்தேதி காலையில் பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவர் கொண்டு வந்திருந்த வாசனை திரவிய பாட்டில் எதிர்பாராதவிதமாக தவறி தரையில் விழுந்து உடைந்தது. இதனால் அந்த வகுப்பறை முழுவதும் பயங்கர நெடியுடன் கூடிய வாசனை பரவியது. இதில் 2 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
ரசாயனத்தின் நெடி வகுப்பறை முழுவதும் பரவி இருந்ததால் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 13 மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள், மயங்கிய மாணவிகளை சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும், தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். பின்னர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பிறகு மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வகுப்பறையில் வாசனை திரவியம் தரையில் விழுந்து உடைந்த போது அதன் நெடி வகுப்பறை முழுவதும் பரவி இருந்தது. இது தொடர்பாக வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அங்கிருந்து வெளிறே அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சம்பவம் குறித்து உடனடியாக மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறியும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் இன்று காலை பள்ளியின் முன்பு சாலையோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்தற்கு செங்கோட்டை இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். என்னும் ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுதுதி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆடி மாதம் என்பதால் காலை முதலேயே காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது.
- பலத்த சூறைக்காற்றினால் பல இடங்களில் விளம்பர பலகைகள் விழுந்து வருவதுடன் காய்ந்த நிலையில் உள்ள மரங்களும் விழுந்து வருகின்றன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
ஆனால் ஆடி மாதம் என்பதால் காலை முதலேயே காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் புழுதியை வாரி இறைத்தபடி காற்று வீசுவதால் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும், மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கூட காற்றின் வேகம் தன்வசப்படுத்தி நிலைகுலைய செய்து விடுகிறது. இதனால் சிறிது கவனம் சிதறினாலும் வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குண்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காம்பவுண்டு சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்து கிடந்தது. காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினாலும் தற்போது வீசிய சூறைக்காற்றினாலும் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பலத்த சூறைக்காற்றினால் பல இடங்களில் விளம்பர பலகைகள் விழுந்து வருவதுடன் காய்ந்த நிலையில் உள்ள மரங்களும் விழுந்து வருகின்றன. மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மரக்கிளைகள் முறிந்து விழுவதால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைகின்றனர்.
ஏறிச்சாலையையொட்டி உள்ள கீழ்பூமி பகுதியில் முறிந்து விழுந்த மரத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இதே நிலை நீடிக்கும் என்பதால் நகராட்சி மற்றும் மலை கிராமங்களில் சேதம் அடைந்து சாலையோரம் இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்.
- மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை வளர்க்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம், உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்; உடற்கல்வி வகுப்புகளை வேறு ஆசிரியர்கள் யாரும் கடன் வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார். ஆனால், அவரது நண்பர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக இருக்கும் பள்ளிக்கல்வித் துறையோ, உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆணையிட்டுள்ளது. இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா?
பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும்.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார்.
- மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து 60 சதவீதத்துக்கு கீழ் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார். மேலும் 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:-
பள்ளிகளில் மாதந்தோறும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தி நன்றாக படிக்கும் மாணவர்கள், மிதமான முறையில் படிக்கும் மாணவர்கள், சரியாக படிக்காத மாணவர்கள் என கண்டறிந்து அவர்களை அட்டவணைப்படுத்த வேண்டும். பின்னர் அவர்களுக்கு ஏற்றார் போல் கல்வி பயிற்சி அளித்து தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கலாம். 10 மற்றும் 12-ம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளை தனித்தேர்வுகள் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ், மற்றும் கேடயத்தை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
- மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது
- மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இதுவரை 63,433 ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து உள்ளனர்.
தொடக்க கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,078 பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 7,106, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 4,309, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 822 என 26,075 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
இதே போல் பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 719, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 20,466, முதுநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,308, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 913, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
அதன்படி ஒட்டுமொத்தமாக 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது 90 சதவீத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை வெகுவாக பாதிக்கும் என ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு முன்பு கலந்தாய்வு நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.
- மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசு 3 ஆண்டாக ஜி.எஸ்.டி. உட்பட வரிகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் வேதனையாக உள்ளது. வீதிகள் தோறும் ரெஸ்டோ பார்களை திறப்பது சமுதாய சீரழிவை உண்டாக்குகிறது. போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். போதைப் பொருட்களை தடுக்க சிறப்பு காவல்பிரிவு அமைக்க வேண்டும்.
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். இதனால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. இதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் பணிபுரியும் யூ.டி.சி.க்களுக்கு பதவி உயர்வு வழங்க உதவியாளர் பணிக்கு துறை சார்ந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே மதிப்பெண் பட்டியல், விடைத்தாளர் வெளியிட்டு தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் சி.பி.ஐ. வசம் புகார் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ந்தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
- இந்த எண்ணிக்கையை மே இரண்டாவது வாரத்துக்குள் 4 லட்சமாக உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள், உயா்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 ஊக்கத்தொகை, இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கான ஊக்கத்தொகை திட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ந்தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தீவிர முயற்சிகள் காரணமாக அரசு பள்ளிகளில் புதிய மாணவா் சோ்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 940 மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையை மே இரண்டாவது வாரத்துக்குள் 4 லட்சமாக உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
- இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
- கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 5-ந்தேதி நடை பெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும், சென்னையில் 827 மாணவா்களும், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா்.
அவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீா் மற்றும் மதிய உணவு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்