என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் அரையிறுதி சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இன்று நடந்த முதல் அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே ஹோல்ஜர் ரூனே அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டை ரூனே 6-4 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.

    இதில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, குரோசிய வீரர் மேட் பவிக்-அமெரிக்காவின் பெத்தானிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 6-7 என இழந்த இத்தாலி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-3, 10-8 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஹார்வர்டில் முதுகலைப் பட்டம் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடல் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
    • கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார்.

    அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    அதாவது தன்னை சுயமாக அவர் நாடு கடத்திக்கொண்டார். இதற்கு அர்த்தம், அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பூட்டி நாடு கடத்துவதற்கு முன்பாக அவரே அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    அவரின் பெயர் ரஞ்சனி ஸ்ரீனிவாசன். செய்த குற்றம், பால்ஸ்தீனதுக்கு ஆதரவாக போராடியது. விளைவு, கடந்த மார்ச் 5 ஆம் தேதி அவரது மாணவர் விசா ரத்து. இதன் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    அகமதாபாத்தில் உள்ள CEPT பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், ஃபுல்பிரைட், நேரு மற்றும் இன்லாக்ஸ் உதவித்தொகைகளுடன் ஹார்வர்டில் முதுகலைப் பட்டமும் பெற்ற ரஞ்சனி ஸ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

    200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாகி பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 56,000 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேலிய குண்டுகளால் மொத்த நகரமும் நிர்மூலம் ஆக்கப்பட்டது. இதை இனப்படுகொலை என குற்றம்சாட்டி உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நியூ யார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்களில் ரஞ்சினி ஸ்ரீனிவாசனும் ஒருவர்.

    பல்கலைக்கழக கட்டடம் ஒன்றை போராட்டக்குழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு பிரச்சனை தீவிரமானது. பின் பேச்சுவார்த்தை மூலம் இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்பின் அரசு, பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாட தொடங்கியது.

    கொலம்பியா பல்கலைக்கழக போராட்டத்தில் ஈடுபட்ட பல வேற்று நாட்டு மாணவர்கள் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர். கடந்த வாரம், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த கொலம்பியா முன்னாள் மாணவர் மஹ்மூத் கலீல் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் தற்போது ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இந்த நாடுகடத்தலுக்கு இரையாகி உள்ளார்.  

     அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ரஞ்சனி சீனிவாசன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 5, 2025 அன்று, வெளியுறவுத்துறை அவரது விசாவை ரத்து செய்தது.

    இந்நிலையில் மார்ச் 11 அன்று சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CPB) அமைப்பு செயலியைப் பயன்படுத்தி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் சுயமாக நாடு கடத்தப்பட்ட வீடியோவை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியதாவது, "அமெரிக்காவில் படிப்பது ஒரு "பாக்கியம்", ஆனால் நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகை பறிக்கப்பட வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

    ரஞ்சனி ஸ்ரீனிவாசன் தற்போது இந்தியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அரசு அவர் குறித்தும், இந்த விசா ரத்து குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. 

    • இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    • 7 பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாக மட்டத்தில் இருந்து கிடைத்த வரைவு அறிக்கை தகவலின்படி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழு பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையை எதிர்கொள்கிறது. மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ராய்ட்டர்ஸ்கு கிடைத்த வரைவின்படி முதல் குழுவில், ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளின் குடிமக்கள் முழு விசா தடையை எதிர்கொள்ள நேரிடும்.

    இரண்டாவது குழுவில் இடம்பெற்ற எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் மீது சுற்றுலா, மாணவர் விசாக்கள் புலபெயர்வு விசா வழங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மூன்றாவது குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தான் உள்ளிட்டவை தங்கள் குறைபாடுகளை சரி செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    டிரம்ப் 2016-20 பதவிக்காலத்தில், ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை விட தற்போது விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் பெரிய அளவிலிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியது.
    • ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

    நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில், ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள சாலையில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியதால் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. மொத்தம் 17 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.

    சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.

     

    மேலும் காயமடைந்த 11 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 18 சக்கர டிரக் வாகன ஓட்டுநர் சாலமன் அரயா என்ற 37 வயது நபரை ஆஸ்டின் போலீசார் கைது செய்தனர்.

    போதையில் அவர் வாகனம் ஒட்டியதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.
    • வட கொரிய அதிபருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன் என தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

    அதன்பின், வடகொரிய அதிபர் குறித்து அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை பல முறை சந்தித்து உச்சி மாநாடு நடத்தியுள்ளேன்.

    வட கொரியா அணு சக்தியை கொண்ட நாடு தான். அவருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன்.

    வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.

    இருப்பினும் வடகொரியாவின் அணு ஆயுத எண்ணிக்கையைக் குறைக்க முடிந்தால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    • துரிதமாக செயல்பட்டு விமானத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.
    • விமானம் 1006-இல் எஞ்சின் சார்ந்த பிரச்சனை எழுந்தது.

    டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் உருவானது. விமானம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் கேட் சி38 பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்து முதலில் கரும்புகை வெளியேறியது. அதன்பிறகு தீப்பிடிக்க தொடங்கியது.

    விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும், விமான நிலையத்தில் இருந்த தீயனைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு விமானத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் 1006 பாதை மாற்றப்பட்டு டென்வெர் விமான நிலையத்தின் வேறொரு ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (எஃப்.ஏ.ஏ.) தெரிவித்தது.

    இது குறித்து எஃப்.ஏ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரமாக தரையிறங்கியதோடு டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாக நிறுத்தப்பட்டதும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறவனத்தின் விமானம் 1006-இல் எஞ்சின் சார்ந்த பிரச்சனை எழுந்தது. அதன்பிறகு, விமானத்தில் இருந்த 172 பயணிகள், ஆறு பணியாளர்கள் என அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்."

    "பணியாளர்கள், விமான நிலைய குழு மற்றும் அவசர பாதுகாப்பு படையினரின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் அதிவேக பணி காரணமாக அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டில் மெத்வதேவ் 6-4 என வென்றார். 2வது செட்டை ஆர்தர் பில்ஸ் 6-2 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 7-6 (9-7) வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூரை 5-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் ஹோல்ஜர் ரூனே, மெத்வதேவைச் சந்திக்கிறார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், சீனாவின் குய்ன்வென் ஜெங் உடன் மோதினார்.

    இதில் இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் மிர்ரா அலெக்சாண்ட்ரோ, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் அலெக்சாண்ட்ரோ 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டி இன்று நடந்தது.

    இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக்-பிரேசில் பெர்னாண்டோ ராம்போலி ஜோடி உடன் மோதியது.

    இதில் ஜான் பாட்ரிக்-ராம்போலி ஜோடி முதல் செட்டை 7-6 (7-5) என கைப்பற்றியது. இரண்டாவது செட்டை யூகி பாம்ப்ரி 6-3 என வென்றது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 8-10 என இழந்து காலிறுதி சுற்றில் இருந்து வெளியேறியது.

    • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு வரி விதிக்க ஐரோப்பிய யூனியன் பரிந்துரை.
    • ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் தங்கள் நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது என்கிறார்.

    குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், கனடா, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கு அதிக வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு சீனா பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.

    தற்போது டொனால்டு டிரம்பின் பார்வை மதுபானங்கள் மீது திரும்பியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

    ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரும்பு, அலுமினியம் இறக்குமதிக்கு டிரம்ப் அதிக விரி விதித்துள்ளதால், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு ஐரோப்பிய நாடுகள் வரிவிதிக்க பரிந்துரை செய்துள்ளது. ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின்ஸ், ஷாம்பெயின், பிரான்ஸ் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும். இது அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஷாம்பெயின் தொழிலுக்கு சிறப்பானதாக இருக்கும்" டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதனால் அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் மதுபானம் விசயத்தில் வர்த்த போர் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்துவர உள்ளது.
    • ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் 9 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் தான் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவர உள்ளது.

    ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இன்றைய திட்டம் தாமதமாகி உள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நாசா விண்வெளி வீரர்களான ஆனி மெக்லைன், நிகோல் ஏயர்ஸ், ஜப்பான் விண்வெளி துறையை சேர்ந்த தகுயா ஒனிஷி மற்றும் ரோஸ்கோமோஸ் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி விட்டனர். மேலும், இந்த ராக்கெட்டும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இன்றைய திட்டப்படி ஸ்பேக்ஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்வெளிக்கு புறப்பட்டு இருந்தால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19-ம் தேதி பூமிக்கு திரும்பியிருப்பர். தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதமாகி உள்ளது.

    ×