என் மலர்
அமெரிக்கா
- 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
- விண்வெளி வீரர்கள் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர்.
வாஷிங்டன்:
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர் (62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர். தற்போது அவர்களால் நடக்க முடியவில்லை என்றாலும், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, நால்வரும் பயணித்த டிராகன் கேப்சூல் படிப்படியாக வேகம் குறைந்து கடலில் விழுந்ததும், விண்வெளி வீரர்களை வரவேற்பது போல் கேப்சூலை சுற்றி டால்பின்கள் சூழ்ந்தன.
விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது கேமராக்களில் தெளிவாக தெரிந்தது. இதனை லைவ் செய்துகொண்டிருந்த நாசா விஞ்ஞானிகள் அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று கூறினர்.
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.
அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் நாசா அழைத்துக்கொண்டது.
விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா.
விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார். சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார். பூமி மேல் பறக்கணும் என்ற ஆசையை அவர் நிறைவு செய்துள்ளார்.
- 195 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை கடந்து வீடு திரும்பினர்.
- அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் ஒன்பது மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக அமெரிக்க வளைகுடாவில் தரையிறங்கியதை அடுத்து, விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ், நாசா மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் 286 நாட்கள் செலவிட்டனர், இது அவர்களின் உண்மையான திட்டத்தை விட 278 நாட்கள் அதிகம் ஆகும். அவர்களின் பயணம் முழுவதும், அவர்கள் பூமியை 4,576 முறை சுற்றி வந்து 121 மில்லியன் மைல்கள் (195 மில்லியன் கிலோமீட்டர்) தூரத்தை கடந்து வீடு திரும்பினர்.
"வாக்குறுதி அளிக்கப்பட்டது, வாக்குறுதி செய்து முடிக்கப்பட்டது: ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கினர், எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசாவுக்கு நன்றி!" என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 28-ம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து (ISS) இரண்டு விண்வெளி வீரர்களை மீட்டெடுக்க எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்-இடம் கூறியதாகக் தெரிவித்து இருந்தார்.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இரு நாசா விண்வெளி வீரர்களும், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை 3:27 மணி அளவில் புளோரிடா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கினர்.
- நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான கேடி கோல்மேன் பேட்டியளித்தார்.
- பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொள்கிறார்கள்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் கடந்த 9 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 நாள் பயணமாக விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொள்கிறார்கள். தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர் திரும்பி வருவதும் பல முறை தாமதமானது. இப்போது அவர் இறுதியாக இன்று அல்லது நாளைக்குள் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திட்டமிடப்பட்டதை விட அதிக நாட்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ்க்கு நாசா எவ்வளவு பணம் கொடுக்கும் என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை முன்னாள் விண்வெளி வீரர் ஒருவர் வழங்கியுள்ளார்.
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான கேடி கோல்மேன் கூறுகையில், விண்வெளி வீரர்கள் அமெரிக்க அரசு ஊழியர்கள் என்பதால், அவர்கள் விண்வெளியில் செலவிடும் நேரம் எந்தவொரு சாதாரண வேலையையும் போலவே கருதப்படுகிறது. அவர்கள் வழக்கமான ஊதியத்தைப் பெறுகிறார்கள். கூடுதலாக, விண்வெளி நிலையத்தில் அவர்களின் உணவு மற்றும் தங்குமிட செலவுகளை நாசா ஏற்கிறது.

விண்வெளி வீரர்கள் பெறும் ஒரே கூடுதல் இழப்பீடு, தற்செயலான செலவுகளுக்கான ஒரு சிறிய தினசரி கொடுப்பனவு மட்டுமே. இது ஒரு நாளைக்கு வெறும் 4 டாலர் தான் என்று கூறினார். அதாவது ஒரு நாளைக்குத் தோராயமாக 347 ரூபாய்.
2010-11 ஆம் ஆண்டில் கேடி கோல்மேன் 159 நாள் விண்வெளிப் பயணத்திற்குச் சென்றபோது, அவருக்கு மொத்தம் 636 டாலர், அதாவது அவரது சம்பளத்தைத் தவிர தோராயமாக ரூ.55,000 கூடுதலாகப் கிடைத்தது.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் விண்வெளியில் 285 நாட்களுக்கு மேல் செலவிட்டுள்ளனர். இதன்படி, சம்பளத்தைத் தவிர, அவருக்கு 1,100 டாலர்கள் மட்டுமே, அதாவது தோராயமாக 1 லட்சம் ரூபாய் கூடுதல் தொகையாகக் கிடைக்கும்.
அதன்படி, 9 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த இருவருக்கும் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை (93 ஆயிரத்து 850 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 4 அமெரிக்க டாலர் வரை) வளநாகமான சம்பளம் கிடைக்கும்.
கூடுதல் ஊக்கத்தொகையையும் சேர்த்து, அவர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் ரூ.82 லட்சம் முதல் ரூ.1.06 கோடி வரை (94 ஆயிரத்து 998 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 152 அமெரிக்க டாலர் வரை) இருக்கும் என தெரிய வந்துள்ளது.
- டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
- ஜோ பைடன் நிர்வாகத்தின் பல உத்தரவுகளை ரத்து செய்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பதவியேற்றதும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் பல உத்தரவுகளை ரத்து செய்தார்.
இந்த நிலையில் ஜோ பைடனின் மகன் ஹண்டர், மகள் ஆஷ்லே ஆகியோருக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, ஹண்டர் பைடனுக்கு நீண்ட காலமாக ரகசிய சேவை பாதுகாப்பு உள்ளது. இதற்கு அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் செலுத்தியுள்ளனர். அவர் இந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது பாதுகாப்புப் பிரிவில் 18 முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இது அபத்தமானது.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஹண்டர் பைடன் இனி ரகசிய சேவை பாதுகாப்பைப் பெறமாட்டார். அதேபோல் ஆஷ்லே பைடனுக்கு பாதுகாப்பு சேவை நீக்கப்படுகிறது என்றார்.
- உக்ரைன்- ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
- புதின் உடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் உடனான போர் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக வலியுறுத்த உள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.
இந்த நிலையில் நாளை ரஷிய அதிபர் புதின் உடன் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று புளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது "செவ்வாய்க்கிழமை சில அறிவிப்புகள் வெளியாகுவதை நாம் பார்க்கலாம். நான் புதின் உடன் செவ்வாய்க்கிழமை பேச இருக்கிறேன். கடந்த வாரத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்றன. நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எனப் பார்க்கிறோம்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு பகுதியாக நிலம் மற்றும் மின் நிலையங்கள் ஒரு பகுதியாக இருக்கும். நாங்கள் நிலங்கள் குறித்து பேச இருக்கிறோம். மின் நிலையங்கள் குறித்து பேச இருக்கிறோம்" என டிரம்ப் தெரிவித்தார்.
கடந்த வாரம் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அந்த தடையை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப்- புதின் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வோம் என ரஷியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் புதிய தேதியை அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்த நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
- இதன் இறுதிச்சுற்றில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, பிரிட்டிஷ் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜாக் டிராபர் 6-2, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
இதில் பெலாரசைச் சேர்ந்தவரும், நம்பர் 1 வீராங்கனையுமான அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட மிர்ரா ஆண்ட்ரீவா அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் தொடரிலும் மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவை சூறாவளி தாக்கிய சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மத்திய, தென் மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. அந்நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களை சூறாவளி தாக்கியது.
பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சரிந்தன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை சூறாவளியில் தூக்கி வீசப்பட்டது. சூறாவளியால் பல வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.
இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சூறாவளியால் அதிக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன.
ஏற்கனவே, அமெரிக்காவில் காட்டுத்தீ பரவல், புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இன்று நடந்த முதல் அரையிறுதியில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவிடம் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், இரண்டாவது அரையிறுதியில் தரவரிசையில் நம்பர் 2 வீரரும், ஸ்பெயினைச் சேர்ந்தவருமான கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டிஷ் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் டிராபர் முதல் செட்டை 6-1 என எளிதில் வென்றார். அடுத்த செட்டை அல்காரஸ் 6-0 என கைப்பற்றினார். வெற்றியாளரை
நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை டிராபர் 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அல்காரஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே, முன்னணி வீரர்களான ஜோகோவிச், மெத்வதேவ், சிட்சிபாஸ் உள்ளிட்டோரும் தொடரில் இருந்து வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை அதிகாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜாக் டிராபர், ஹோல்ஜர் ரூனேவுடன் மோதுகிறார்.
- 2024-ஆம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இந்தியாவும், சீனாவும் வலுவான வா்த்தக விரி வாக்கத்தை பெற்றுள்ளன.
- அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது.
ஐ.நா. வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சா்வதேச வா்த்தக தரவுகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2024-ம் ஆண்டில் உலக அளவிலான வா்த்தகம் ரூ. 104 லட்சம் கோடி அளவுக்கு விரிவடைந்து சுமாா் ரூ. 2,869 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது. அதன்படி சேவைத் துறை வா்த்தகம் 9 சதவீத அளவுக்கும், சரக்கு வா்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் சா்வதேச அளவில் விரி வடைந்துள்ளது.
பல வளா்ந்த நாடுகள் வா்த்தகத்தில் சற்று சரிவைச் சந்தித்து வரும் சூழலில், வளரும் நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா சராசரியை விட சிறந்த வா்த்தக விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளன. 2024-ஆம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இந்தியாவும், சீனாவும் வலுவான வா்த்தக விரி வாக்கத்தை பெற்றுள்ளன.
இந்தியாவிலும், சீனா விலும் வா்த்தகம் அதிகரித் துள்ளது. குறிப்பாக ஏற்று மதி சராசரியைவிட அதி கரித்து காணப்பட்டது. தென் கொரியாவில் ஏற்று மதி வளா்ச்சி சரிந்திருந்த போதும் வருடாந்திர அடிப்படையில் வளா்ந்த நாடுகளில் வா்த்தக விரிவாக்கத்தில் முன்னிலை வகித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது. ஆனால் ஏற்றுமதி எதிா்மறை வளா்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தியாவில் சரக்கு வா்த்தகத்தில் இறக்குமதி 8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 6 சதவீதமாக இருந்தது. அதுபோல, சரக்கு வா்த்தகத்தில் ஏற்றுமதி வளா்ச்சி 7 சதவீத வளா்ச்சி யையும், வருடாந்திர அடிப்படையில் 2 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
உலக வா்த்தகம் 2025-ஆம் ஆண்டின் தொடக் கத்தில் நிலையானதாக இருக்கும்.
ஆனால் அதிகரித்து வரும் புவிசாா் பொருளா தார பதற்றங்கள், உலக நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்ளிட்ட வற்றால் வரும் காலாண்டு களில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதை காட்டுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன.
- கனடா எல்லையில் இருந்து டெக்சாஸ் நோக்கி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன. இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 26 பேர் வரை பலியாகி உள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மிசவுரி உள்ளது. சூறாவளி பாதிப்புக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதில், பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் கவிழ்ந்து கிடந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளும் இடிந்து விழுந்தன. சுவர்கள் மீது மக்கள் நடந்து செல்லும் அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது.
அர்கான்சாஸ் மாகாணத்தில் 3 பேர் பலியானார்கள். 8 கவுன்டி பகுதிகளை சேர்ந்த 29 பேர் காயமடைந்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் அமரில்லோ பகுதியில் புழுதி புயலின்போது, கார் விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருவதுடன், கடுமையான புழுதி புயலும் வீசி பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன. வானிலை பாதிப்புகளால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கனடா எல்லையில் இருந்து டெக்சாஸ் நோக்கி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், குளிரான பகுதிகளில் குளிர் காற்றும், வெப்ப பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் ஆபத்தும் காணப்படுகின்றன. மின்னசோட்டா மற்றும் தெற்கு டகோடா பகுதிகளில் அதிக குளிருடன் கூடிய பனி சூறாவளி பாதிப்புக்கான எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. ஓரடி வரையிலான பனிப்படலம் ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டுத்தீயால் 689 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான நிலம் எரிந்து போயுள்ளது. டெக்சாஸ், கன்சாஸ், மிசவுரி மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்கள் அதிக பாதிப்படைந்து உள்ளன. இதேபோன்று, கிழக்கு லூசியானா, மிஸ்ஸிஸ்ஸிப்பி, அலபாமா, மேற்கு ஜார்ஜியா மற்றும் புளோரிடா பான்ஹேண்டில் உள்ளிட்ட பகுதிகள், சூறாவளி மற்றும் புயல் பாதிப்புக்கு இலக்காகும் பகுதிகளாக அறியப்பட்டு உள்ளன. டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளன.






