என் மலர்tooltip icon

    உலகம்

    • அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என சமீபத்தில் கூறினார்.
    • வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றார்.

    லாகூர்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என்று சமீபத்தில் கூறினார்.

    இதற்கிடையில் அதிபர் டிரம்ப் கூறுகையில், ரஷியாவும் சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து அவர்கள் பேசமாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் முதலில் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை. தற்போதும் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் நாடாக பாகிஸ்தான் இருக்காது. நாங்கள் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க மாட்டோம் என தெரிவித்தார்.

    அணு ஆயுத சோதனை தொடர்பாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, நாங்கள் ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடு. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது என தெரிவித்தது.

    • அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி டிக் செனி.
    • ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக இருந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84)

    இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக இருந்தார்.

    வெள்ளை மாளிகையின் தலைமை தளபதி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

    இந்நிலையில், நிமோனியா மற்றும் இதயம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டிக் செனி நேற்று காலமானார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

    • குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு கொண்டு வந்துள்ளது.
    • இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைத்துள்ளது.

    டொரண்டோ:

    கனடாவில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் கொண்டு வந்தது. இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்தது.

    இந்நிலையில், தற்காலிகமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாணவர் விசாக்கள் தொடர்பான மோசடிகளைக் குறைக்கவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சர்வதேச மாணவர்களுக்கான அனுமதியை கனடா அரசு குறைத்துள்ளது.

    கனடாவின் உயர்கல்வி நிலையங்களில் படிக்க அனுமதி கோரிய இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களில் சுமார் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

    • பெரு நாட்டின் முன்னாள் பிரதமர் பெட்சி சாவேசுக்கு மெக்சிகோ அடைக்கலம் அளித்தது.
    • இதனால் மெக்சிகோ உடனான தூதரக உறவை துண்டிப்பதாக பெரு அறிவித்தது.

    லிமா:

    பெரு நாட்டின் முன்னாள் பிரதமர் பெட்சி சாவேஸ். இவர்மீது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இதற்கிடையே அவருக்கு மெக்சிகோ அடைக்கலம் அளித்தது. இதனால் மெக்சிகோ உடனான தூதரக உறவை துண்டிப்பதாக பெரு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பெருவின் வெளியுறவு மந்திரி ஹ்யூகோ டி ஜெலா கூறுகையில், முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக செயல்பட்ட முன்னாள் பிரதமர் பெட்சி சாவேசுக்கு பெருவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தின் இல்லத்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் ஆச்சரியத்துடனும், ஆழ்ந்த வருத்தத்துடனும் அறிந்தோம் என தெரிவித்தார்.

    • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.
    • கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிடுகிறார்கள்.

    அமெரிக்காவில் முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறை இருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:

    நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் அந்த நகரத்துக்ககு குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் நிறுத்துவேன்.

    ஏனென்றால் ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் இந்த சிறந்த நகரம் மோசமாகிவிடும். அந்த நகரத்தால் வெற்றி பெறவோ அல்லது உயிர் வாழவோ முடியாது.

    மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் பொருளாதார, சமூக பேரழிவை சந்திக்கும். ஒரு அதிபராக, கெட்டது நடந்து பிறகு அங்கு நல்ல பணத்தை அனுப்ப நான் விரும்பவில்லை. ஏனென்றால் தேசத்தை நடத்துவது எனது கடமை.

    மம்தானி திறமையானவர் இல்லை. உலகின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக அவரை கொண்டுவர முடியாது. நாம் இதையும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது.
    • பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள்.

    அமெரிக்காவில் இந்தியாவின் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் லாரி டிரைவர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி டிரைவர் விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதையடுத்து வெளிநாடுகளை சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்தார்.

    பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது. பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இந்திய வம்சாவளி லாரி டிரைவர்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்க லாரித் தொழிலில் லட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் டிரைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கம்சாட்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
    • ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ரஷியாவில் உள்ள கம்சாட்காவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கம்சாட்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 6.3,6.1 ஆக பதிவாகி உள்ளது.

    கம்சாட்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    • கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
    • மற்ற நாடுகளில் உள்ள தங்களது பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு அருங்காட்சியகம் வலியுறுத்தியது.

    நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச் நகரில் கலை மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது எகிப்துக்கு சொந்தமான ஒரு கல்சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த சிற்பம் எகிப்து மன்னர் மூன்றாம் துட்மோஸ் வம்சத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனவும், சட்ட விரோதமாக இங்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மற்ற நாடுகளில் உள்ள தங்களது பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு அருங்காட்சியகம் வலியுறுத்தியது.

    இந்தநிலையில் எகிப்துக்கு சொந்தமான கல்சிற்பத்தை நெதர்லாந்திடம் திருப்பி ஒப்படைப்பதாக பிரதமர் டிக் ஸ்கூப் தெரிவித்துள்ளார்.

    • புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற இலக்கு இருந்து கொண்டே இருந்தது.
    • பெருநிறுவன வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகி வெற்றிப்பெற தற்போது புதிதாக ரூ.3 ஆயிரத்து 100 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஹோசேவில் உள்ள பள்ளியில் படித்தவர்கள் சூர்யா மிதா (வயது 22), ஆதர்ஷ் ஹைரேமத் (22). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான இவர்களுடன் அமெரிக்காவை சேர்ந்த பிரெண்டன் பூடி (22) என்பவரும் படித்தார்.

    பள்ளியில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்த இவர்களுக்கு சிறுவயதிலேயே தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அந்த கனவை நனவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    இதனிடையே ஆதர்ஷ்சுக்கு பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கவும், சூர்யா, பிரெண்டனுக்கு ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் தற்போதைய தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அளவுக்கு திறன் வாய்ந்த அவர்கள் புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற இலக்கு இருந்து கொண்டே இருந்தது.

    இந்தநிலையில் அவர்கள் படித்து கொண்டிருக்கும் போதே சிலிக்கான் பள்ளத்தாக்கில் செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு தேவையான மென்பொருள் உரையாடு ஏ.ஐ.செயலியான 'மெட்கோர்'ரை உருவாக்கினர்.

    இது பெருநிறுவன வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகி வெற்றிப்பெற தற்போது புதிதாக ரூ.3 ஆயிரத்து 100 கோடி (350 பில்லியன் டாலர்கள்) முதலீட்டை ஈர்த்துள்ளது. இதனால் அந்த மெட்கோர் நிறுவனத்தின் தலா 22 சதவீத பங்குகளை கொண்டுள்ள சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹைரேமத் மற்றும் பிரெண்டன் பூடி ஆகியோர் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகிவிட்டனர். இதன்மூலம் சுயதொழில் மூலமாக கோடீஸ்வரர்கள் ஆன பட்டியலில் முதலிடத்தில் இருந்த 'பேஸ்புக்' நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை இவர்கள் முறியடித்தனர்.

    • அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
    • ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு காரணமாக கூறப்படுகிறது.

    உலகெங்கிலும் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

    அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன. 

    • ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர்.
    • சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன.

    ஆப்பிரிக்க நாடான சூடானில், உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், அங்கு அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வரும் துணை ராணுவத்தினரால் (RSF) இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

    அவர் ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான ஆதர்ஷ் பெஹெரா என்று தெரியவந்துள்ளது.

    அவரிடம் RSF போராளிகள் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், இரண்டு RSF போராளிகளுக்கு இடையில் உள்ள ஆதர்ஷ் -இடம் ஒரு போராளி, "ஷாருக்கானை  உனக்கு தெரியுமா?" என்று கேட்கிறார்.

    மற்றொருவர் RSF குழுவை வழிநடத்தும் தங்கள் தலைவரான முகமது ஹம்தான் டகலோ-வை புகழ்ந்து கோஷம் எழுப்பும்படி ஆதர்ஷ்-ஐ கட்டாயப்படுத்துகிறார்.

    ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர். அவர் 2022 முதல் சூடானில் உள்ள சுக்ரதி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    சூடான் தலைநகர் கார்ட்டூமில் இருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் உள்ள அல் ஃபாஷிர் நகரத்திலிருந்து பெஹெரா கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன. அங்கிருந்து அவர் நியாலா நகரத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து இந்தியாவிற்கான சூடான் தூதர் முகமது அப்துல்லா அலி எல்டோம் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அல் ஃபாஷிரில் உள்ள தகவல் தொடர்பு அமைப்பு முற்றிலுமாக சரிந்துவிட்டது.

    அங்கு அவர்களுடன் யாரும் பேச முடியவில்லை. பெஹெராவுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் அவர் பாதுகாப்பாகத் திரும்புவார் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.   

    • ரஷியா , சீனா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
    • எனவே அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

    சீனா ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதை சீனா மறுத்துள்ளது. 

    சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், பெய்ஜிங் எப்போதும் அமைதியான வளர்ச்சிப் பாதையில்தான் உள்ளது. அணு ஆயுத பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    எங்கள் அணு ஆயுதங்கள் தற்காப்பு ரீதியானதாகும். சர்வதேச விதிமுறைகளை மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்துவதில்லை என உறுதிபூண்டுளோம். சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்படும் சீனா, அணுசக்தி பிரச்சினைகளில் பொறுப்புடன் செயல்படும்.

    உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றும்" என்று கூறி சர்வதேச விதிமுறைகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்தார்.

    ரஷியா , சீனா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிப டிரம்ப் சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் குற்றம் சாட்டினார்.

    கடந்த காலங்களில், அணு ஆயுதங்களின் அழிவு சக்தி காரணமாக அந்த சோதனைகளை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது என்றும் டிரம்ப் கூறினார். எனவே அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். 

    மீண்டும் அணு ஆயுத சோதனைகளுக்குத் தயாராகத் தொடங்குமாறு பென்டகனுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×