என் மலர்
உலகம்
- கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு.
- கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை நாளை வரை நீடிக்கும் என ஐக்கிய அரபு அமீரக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
நாளை வரை கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும், கனமழை நீடிக்கும் என்பதால் துபாய்க்கு வரவிருந்த 100க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
- லெபனானின் தெற்கே குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதலை தொடுத்தனர்.
- 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த தளபதிகள் அந்தஸ்திலான 3 முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேர் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும், இதனை இஸ்ரேல் முறியடித்தது. ஈரானின் தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி அரசுகள் 99 சதவீதம் வழிமறித்து தடுத்து நிறுத்தியது. இவற்றில், 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது.
தொடர்ந்து, ஈரான் மீது இஸ்ரேல் பதிலடியாக தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காசாவை இஸ்ரேல் தாக்கியது. பணய கைதிகளாக உள்ள தன்னுடைய நாட்டின் குடிமக்களை மீட்கும் பணியை தொடர்ந்தது. இந்நிலையில், லெபனானின் தெற்கே குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதலை தொடுத்தனர். இதில், மேற்கு பகுதியை சேர்ந்த ரத்வான் படைகளின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவுகளின் தளபதி முகமது உசைன் ஷாஹவுரி கொல்லப்பட்டார்.
அவர், லெபனானின் மத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளில் இருந்து கொண்டு இஸ்ரேல் நிலப்பகுதியை நோக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்தது.
இதேபோன்று, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவை சேர்ந்த மஹ்மூத் இப்ராகிம் பத்லல்லா என்பவரும் கொல்லப்பட்டார்.
லெபனானின் தெற்கு பகுதியில் நடந்த தாக்குதலில், லெபனானின் எயின் ஈபெல் பகுதியில் கடலோர பிரிவை சேர்ந்த தளபதியான இஸ்மாயில் யூசெப் பாஜ் என்பவர் கொல்லப்பட்டார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.
- பாகிஸ்தானுக்கு அதிகப்படியான கொள்கை பரிந்துரைகள் தேவையில்லை.
- தற்போது தெரிவித்துள்ள கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.
பாகிஸ்தான் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. தற்போது அமைந்துள்ள புதிய அரசு பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகளை நாடி வருகிறது.
பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த 2 முதல் மூன்று வருடங்கள் ஆகும் என பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள முகமது அவுரங்கசீப் உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் புதிய கடன் பெறுவது தொடர்பான ஆலோசனை பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில்தான் ஐ.எம்.எஃப். ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து முகமது அவுரங்கசீப் கூறியதாவது:-
பாக்கிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒரு பெரிய மற்றும் நீண்ட திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஏனெனில் எங்களுக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தேவை.
ஐ.எம்.எஃப். உடன் 24 திட்டங்களில் பாகிஸ்தான் நுழைந்துள்ளது. கட்டமைப்பு சீரமைப்பு நோக்கி செல்லாவிட்டால் நாடு மற்றொரு திட்டத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும்.
இந்த அம்சங்களின் செயல்பாட்டினை நாம் உண்மையில் நகர்த்தத் தொடங்குவதற்கான நேரம் இது. ஒரு பெரிய மற்றும் நீட்டிக்கப்பட்ட திட்டத்தைத் தேடுகிறோம். எனவே நாங்கள் செயல்படுத்தியவுடன், கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு இரண்டு முதல் மூன்று வருட கால அவகாசம் தேவைப்படும்.
பாகிஸ்தானுக்கு அதிகப்படியான கொள்கை பரிந்துரைகள் தேவையில்லை. தற்போது தெரிவித்துள்ள கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் நகரத் தொடங்க வேண்டிய நேரம் இது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சரியான முடிவுகள், சரியான நேரத்தில் செயல்படுத்துதல் தேவை, ஏனெனில் செயல்படுத்தாமல் எந்த மூலோபாயமும் செயல்படாது.
இவ்வாறு அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிட்டத்தட்ட அனைத்து பெரிய பொருளாதார இலக்குகளையும் இழக்கும் அபாயத்தை உலக வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரித்தனர்.
- ரஷியா 11 ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்தியது.
- ஏழு ஏவுகணைகளை வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டது.
ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ந்தேதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம் நோக்கி வீசியது. அதில் உக்ரைன் ராணுவம் ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. 4 ஏவுகணைகள் டிரிபில்லியா மின்சார நிலையத்தை தாக்கிவிட்டது. ஏனென்றால் எங்களிடம் ஏவுகணைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் இல்லை. மின்சார நிலையத்தை பாதுகாப்பதற்கான ஏவுகணை அனைத்தும் தீர்ந்துவிட்டன" என்றார்.
இந்த மின்சார உற்பத்தி நிலையம் கீவ் நகரின் தெற்குப்பகுதியில் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கீவ், ஜிடோமிர், செர்காசி ஆகிய நகரங்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது.
ரஷியாவின் தாக்குதலில் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் இடமாக உக்ரைன் தலைநகர் விளங்குகிறது. ஆனால், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் விவகாரம் அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளதால் வான்பாதுகாப்பில் சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளது.
- 2024-ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதம் வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளது சீனா.
- முதல் காலாண்டில் 4.8 சதவீதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.
உலகப் பொருளாதாரத்தில் சீனா 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. தற்போது மெல்லமெல்ல அதன் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதாரம் 5.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 4.8 சதவீதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், அதையும் தாண்டியுள்ளது. கடந்த காலாண்டு வளர்ச்சியை காட்டிலும் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
முந்தைய ஆண்டைவிட மார்ச் மாதத்தில் சீனாவில் ஏற்றுமதி 7.5 சதவீதமாக சரிந்துள்ளதாகவும், அதேவேளையில் இறக்குமதியும் குறைந்துள்ளதாகவும் சீனா தெரிவித்திருந்த நிலையில் இந்த சிறந்த தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டு இந்த காலஅளவில் இருந்ததை விட 6.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சில்லறை விற்பனை 4.7 சதவீதமாக உள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களில் நிலையான முதலீடு, முந்தைய ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024-ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதம் வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளது சீனா. இத்தகைய வலுவான வளர்ச்சி பொதுவாக பிராந்தியம் முழுவதும் பங்கு விலைகளை உயர்த்தும். ஆனால் செவ்வாயன்று, வால் ஸ்ட்ரீட்டில் பங்குகள் பின்வாங்கியதை அடுத்து ஆசிய பங்குகள் கடுமையாக சரிந்தன.
- டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனையை நடத்தி வந்தது.
- ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.
பிஜிங்:
செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.
இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.
தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.
- தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேபிடோவ்:
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் நடைபெற்ற திங்யான் திருவிழாவில் ராணுவ ஆட்சியின் தளபதி மின் ஆங் ஹலைங்கும் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதில் அங்குள்ள புத்த மடாலயம் மற்றும் ஓட்டல் போன்றவை இடிந்து தரைமட்டமாகின.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- மற்றொரு பயனர் இசை கருவிகளை மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பிரபல பஞ்சாபி பாடகரான ஏ.பி. தில்லான் கோச்செல்லா மேடையில் கிடாரை உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது.
பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்ட அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், 'சம்மர் ஹை' ஹிட்மேக்கர் என்ற பயணத்தின் ஒரு பகுதியாக மேடையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும் காட்சி உள்ளது. அதில் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்திய அவர் முடிவில் தனது கிடாரை மேடையிலேயே வீசி உடைப்பது போன்று காட்சி உள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த விசயங்களை மதிக்கவும். இது உங்களுக்கு அழகல்ல என கூறியுள்ளார். மற்றொரு பயனர் இசை கருவிகளை மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- நாட்டின் 3-வது பிரதமரான லீ சியென் லூங் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
- பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் என லீ சியென் லூங் கூறி உள்ளார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக இந்த கட்சியின் மந்திரி மற்றும் எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன்காரணமாக 2 எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்தநிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் கூறி உள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் `எந்தவொரு நாட்டுக்கும் தலைமை மாற்றம் ஒரு முக்கியமான தருணம்' என அவர் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ஜி 7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
- ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றம் குறைந்தது.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் நள்ளிரவு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 170 டிரோன்கள் மற்றும் 150 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் நாட்டு தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முக்கிய ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 90 சதவீத டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்க படை உதவியுடன் நடுவானில் தடுத்து அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சில ஏவுகணைகள் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்தது.
இதில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டதே தவிர உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இஸ்ரேல் மீது முதன் முதலாக ஈரான் இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை தொடரும் எண்ணம் இல்லை என ஈரான் பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் முகமது ஹூசைன் பகோரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹாகாரி கூறினார்.
இந்த சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ஈரான் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஈரான் நாட்டின் மீது எந்த விதமான பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கும் என்றும், பதில் நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தால் கவனத்துடன் இருக்குமாறும் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் கூறினார். ஜி -7 நாடுகளின் தலைவர்களுடன் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ஜி 7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜோ பைடன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றம் இன்று குறைந்தது. இதையடுத்து இஸ்ரேலில் இன்று இயல்பு வாழ்க்கை திரும்பியது. பள்ளிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டது.
இதற்கிடையில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் இந்த பிரச்சனையை இரு நாடுகளும் தூதரகம் மூலம் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் டெல் அவிவ் நகருக்கு ஏர் - இந்தியா விமான சேவை தற்காலிமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.
ஒட்டாவா:
அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
சிராஜ் அந்தில் கனடா நாட்டின் வான்கூர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் வெளியில் சென்றார்.
இந்த நிலையில் அவர் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிராஜ் அந்தில் சகோதரர் ரோஹித் கூறும்போது எனது அண்ணனுக்கு யாருடனும் பகை கிடையாது. எல்லோரிடமும் அவர் பாசமாக தான் பழகுவார். அவருடன் நான் தினமும் செல்போனில் பேசுவேன். சம்பவத்தன்று இரவு கூட நான் பேசினேன். அதற்குள் இப்படி நடந்து விட்டது என சோகத்துடன் தெரிவித்தார்.
- இஸ்ரேல் தொடர்புடைய கப்பல் என ஈரான் சிறைப்பிடித்துள்ளது.
- சிறைப்பிடித்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்ளனர்.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியதில் இரண்டு முக்கிய ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் பயங்கர கோபம் அடைந்தது. இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. தெரிவித்ததுபோல் நேற்று டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
முன்னதாக ஓர்முஸ் ஜலசந்தியில் போர்ச்சுக்கல் நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவத்தின் கப்பற்படை வீரர்கள் சுற்றிவளைத்து சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பினோ, பாகிஸ்தான், ரஷியா மற்றும் எஸ்டோனியா நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 17 பேர் இந்தியர்கள்.
இவர்களை மீட்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அமிர்-அப்டோலாஹியன் உடன் டெலிபோன் மூலம் பேசினார்.
அப்போது சிறைப்பிடித்து வைத்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களை உடனடியாக விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
"சிறைப்பிடித்துள்ள கப்பல் தொடர்பான விவரங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய அரசின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு விரைவில் அனுமதிப்போம்" என ஈரான் மந்திரி தெரிவித்தார்.
அப்போது இந்தியர்கள் குறித்து ஜெய்சங்கர் தனது கவலையை தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஈரானிடம் உதவி கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.






