என் மலர்tooltip icon

    உலகம்

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
    • நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) மற்றும் 2 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரி உள்ளது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும்போது, நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம் என்றார்.

    • எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
    • சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் தீவில் எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலையானது நள்ளிரவில் இருந்து 5 முறை பயங்கரமாக வெடித்தது. அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.

    ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. எரிமலை வெடிப்பையடுத்து சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2,378 அடி உயரமுள்ள ருவாங் எரிமலையில் இருந்து குறைந்தது 6 கி.மீ. தொலைவில் இருக்குமாறு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

    மேலும் எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலையின் வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்தியது. அதன்பின் மலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து 430 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் போராட்டம்.
    • அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்.

    கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

    இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன், கூகுள் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

    இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்ற ஊழியர்களை வேலை செய்யவிடாமல் இடையூறு செய்வது, அலுவலகத்திற்குள் வர விடாமல் தடுப்பது நிறுவன கொள்கைகளை மீறும் செயலாகும். இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    அதனால், போராட்டம் செய்தவர்களை அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. அதனால், விசாரணைக்கு பிறகு 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்" என்றார்.

    • அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி, கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார்.
    • ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.

    நேபிடாவ்:

    தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தவர் ஆங் சான் சூகி. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அவர் கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார். இருப்பினும் கிளர்ச்சியாளர்களால் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. இதனிடையே ஆங் சான் சூகிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் உள்பட 3300 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், கஜகஸ்தானிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.
    • கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு இதுவரை 66 பேர் பலியானதாக பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கைபர் பக்துங்குவா மாகாணத்தில் கனமழை, கட்டிட இடிபாடு, மின்னல் விழுந்து சாவு உள்பட 46 பேர் இறந்தனர். கிழக்கு பஞ்சாபில் 21 பேர், பலூசிஸ்தானில் 10 பேர் உள்பட 80 பேர் இறந்தனர்.

    பருவநிலை மாற்றம் காரணமாகவே பாகிஸ்தானில் கனமழை வெளுத்து வாங்குவதாகவும் பலூசிஸ்தானில் இயல்பை விட 256 சதவீதம் கனமழை பதிவாகி உள்ளதாகவும், பாகிஸ்தான் முழுவதும் 61 சதவீதம் இயல்பை மீறி மழை பெய்து உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், கஜகஸ்தானிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஊருக்குள் வெள்ளம் புகுந்து 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் செத்தன. 63 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சேதமாகின. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் கனமழை காரணமாக 60 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் நாட்டிலும் கனமழை பெய்ததால் ஆற்றோரம் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் இருந்து 2 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    • நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    • இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கை இல்லை.

    ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் நேற்று இரவு 6.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஜப்பானின் மேற்கே கியூஷூ மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கையோ வெளியாகவில்லை.

    யுவாஜிமாவிற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    • உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
    • இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

    உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.

    முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.

    இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.

    குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.

    மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.

    உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் மின்சார உற்பத்தி நிலையம் மீது தாக்குதால் நடத்தியது.
    • உக்ரைனிடம் தற்போது வான்பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லாததால் இழப்புகளை சந்தித்து வருகிறது.

    உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள செர்னிஹிவ் நகர் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இன்று காலை ரஷியா 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் மீது நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செர்னிஹிவ் ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் உள்ளது. இங்கு சுமார் 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் 3-வது ஆண்டாக நீடித்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனால் ரஷியாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்வதற்கு தடுமாறி வருகிறது. இதனால் உக்ரைன் இழப்புகளை சந்தித்து வருகிறது.

    கடந்த வாரம் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 11 ஏவுகணைகளில் ஏழு ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது. மேலும், தாக்குதல் நடத்த ஏவுகணை இல்லாததால் தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    குளிர்காலத்தில் ரஷியா உக்ரைனை நோக்கி முன்னேறாமல் இருந்தது. ஆனால் ஆயுத உதவி கிடைக்காமல் உக்ரைன் திணறி வரும் நிலையில், இதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி வருவதாக ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    60 பில்லியன் அமெரிக்க டாலர் அளிவிலான ஆயுத உதவிகளுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இதனால் உக்ரைனுக்கு ஆயுத உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    வான்பாதுகாப்பு ஆயுதங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவி கேட்டு வருகிறார். உக்ரைன் போதுமான பாதுகாப்பு ஆயுதங்களை பெற்றிருந்தால் செர்னிஹிவ் தாக்குதல் நடைபெற்றிருக்கிறாது எனவும் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

    • சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • பதிலடியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எங்கள் நாட்டின் இரண்டு தளபதிகள் உயிரிழந்ததால் அதற்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரைத்தது. சூளுரைத்ததுபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தியது. அதேபோல் ஈரான் நேரடியாகவும் தாக்குதல் நடத்தியது.

    ஈரான் தாக்குதலை எதிர்பார்த்த இஸ்ரேல் அமெரிக்கா உதவியுடன் அனைத்து ஏவுகணைகளையும் வான் எல்லையிலேயே எதிர்த்து வெற்றிகரமாக அழித்து தாக்கியது. இதனால் இஸ்ரேல் நாட்டில் பெரும் சேதம் ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. தாங்களும் தயார் என நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    அதேவேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

    ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- ஈரான் மோதல் காரணமாக உலகப்போர் மூளும் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் டெலிபோன் மூலம் பேசினார். அப்போது ஈரான் தாக்குதலை தொடர்ந்து நிதானத்த கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், ஈரான் தவறான கணக்கு போட்டுள்ளது. உலகளாவிய அளவில் தனிமைப்படுத்துதலை அதிகப்படுத்தியுள்ளது. பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் நலன் இல்லை மற்றும் மத்திய கிழக்கில் பாதுகாப்பின்மையை மேலும் தீவிரமாக்கும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது" எனத் தெரிவித்துள்ளார்.

    ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் இங்கிலாந்தின் விரைவான மற்றும் வலுவான ஆதரவு நன்றி என நேதன்யாகு ரிஷி சுனக்கிடம் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவின் வளர்ச்சி 2024-ம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • உள்நாட்டுத் தேவை மற்றும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் தொடர்ந்து வலுப்பெறுவதைப் பிரதிபலிக்கிறது.

    வாஷிங்டன்:

    சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர் கூறியதாவது:-

    இந்தியா வலுவான செயல்திறன் கொண்ட நாடாக உள்ளது.

    இதன் மூலம், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. 2023 முதல் 2024 வரையிலான நிதியாண்டில் நாங்கள் திருத்தம் செய்துள்ளோம். 2024-ம் நிதியாண்டில் இருந்து 2025-ம் ஆண்டிற்கு 0.3 சதவீத புள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா நன்றாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.

    மேலும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் மதிப்பில், இந்தியாவின் வளர்ச்சி 2024-ம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது வலிமையானது. உள்நாட்டுத் தேவை மற்றும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் தொடர்ந்து வலுப்பெறுவதைப் பிரதிபலிக்கிறது.

    அதே நேரத்தில், வளர்ந்து வரும் மற்றும் வளரும் ஆசியாவின் வளர்ச்சி 2023-ம் ஆண்டு மதிப்பிடப்பட்ட 5.6 சதவீதத்தில் இருந்து 2024-ம் ஆண்டில் 5.2 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டில் 4.9 சதவீதமாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2023-ம் ஆண்டில் 3.2 சதவீதமாக மதிப்பிடப்பட்ட உலகளாவிய வளர்ச்சி, 2024 மற்றும் 2025-ல் அதே வேகத்தில் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    • மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது.
    • விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    • ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
    • ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மஸ்கட்:

    மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அதேபோல் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வெள்ளப்பெருக்கில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது.

    இதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகினர்.

    மேலும் பலர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ×