search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegan"

    • உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
    • இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

    உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.

    முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.

    இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.

    குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.

    மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.

    உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீபகவத் கீதை உணவு பழக்கத்திற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினை விளக்குகிறது
    • அசைவ உணவு பழக்கத்தை கைவிடுவது கடினமான செயல் அல்ல

    இந்தியாவில் பெரும்பாலானோர்கள் அசைவம், சைவம் இரண்டையும் உண்பவர்களாகவும், குறைந்தளவில் சில பேர் சைவ உணவை மட்டுமே உண்ணும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். பிற நாடுகளில் பெரும்பாலும் அசைவ உணவே அன்றாட உணவு.

    சைவ உணவு பழக்கத்திலேயே பால் மற்றும் பாலினால் தயாரிக்கப்படும் பொருட்களையும் உணவில் தவிர்க்கும் முறை வேகனிசம் எனப்படுகிறது. வேகனிசத்தை கடைபிடிப்பவர்கள் மிகவும் குறைவானவர்கள்.

    இன்று அக்டோபர் 1, 'உலக சைவ தினம்' என கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு மனிதரும் கடைபிடிக்கும் உணவு பழக்கம், அவர்களின் உடல் பலம், மன உறுதி மட்டுமின்றி ஆன்மிக தேடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இந்தியாவில் பண்டைய காலம் முதல் சைவ உணவு பழக்கம் பெரிதும் போற்றப்படுகிறது. இந்திய கலாச்சாரம் போர், உயிர் கொலை, மிருக வதை உட்பட பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்து அதனால் பெறப்படும் எந்த வெற்றியையும் இன்பத்தையும் ஆதரிப்பதில்லை.

    அசைவத்தை அறவே ஒதுக்குமாறு கூறாவிட்டாலும் இந்திய கலாச்சாரத்திலும், இந்து மத நூல்களிலும் சைவ உணவு மிகவும் உயர்வாக பேசப்படுகிறது. இந்து மத புனித நூல்களில் ஒன்றான ஸ்ரீபகவத் கீதையில் உணவு பழக்கத்திற்கும் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பது விளக்கப்படுகிறது.

    நாம் கொண்டாடும் பண்டிகைகளிலும், பழக்க வழக்கங்களிலும் சில தினங்களுக்கு அசைவத்தை ஒதுக்கி வைப்பது நமது குடும்பங்களில் காலம் காலமாக நடக்கிறது.

    உடலாரோக்கியத்தில் செரிமானமே முக்கிய பங்கு வகிக்கிறது என அனைத்து மருத்துவ முறைகளும் ஏற்கின்றன. நல்ல செரிமானத்திற்கு சைவ உணவு உதவுவதை ஆங்கிலேய மருத்துவர்களே ஒப்பு கொள்கின்றனர்.

    குழந்தைகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், திருமணமானவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்பட்டவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனைவருக்கும் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சைவ உணவிலேயே தேவைக்கு அதிகமாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நம்மில் பலர் அசைவ உணவு வகைகள் எங்கெங்கு கிடைக்கின்றன என்பதை தேடி தெரிந்து கொண்டு அங்கு சென்று ஒரு பிடி பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு உயிரை பலவந்தமாக கொன்று அதன் மாமிசத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவினால் நாவிற்கு கிடைக்கும் சுவைக்கு அடிமையாகி அசைவத்தை உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் பலர் தவிக்கின்றனர்.

    ஆனால், அது அத்தகைய கடினமான செயல் அல்ல.

    மீன்கள், கோழிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் மனிதர்களை போன்றே உணர்வுள்ள ஜீவன்கள்தான். தன்னிடம் சிக்கி கொண்ட மனிதர்களை பிற மனிதர்கள் கொல்லும் போது, சிக்கியவர்களுக்கு ஏற்படும் வலியும், அச்சமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு மிக தீவிரமானது.

    உணவுக்காக கொல்லப்படும் உயிரினங்களும், அவை கொல்லப்படும் சில நொடிகள் இதே போன்றுதான் பரிதாபமாக தவிக்கும் என்பதை சில வினாடிகள் உணர்ந்து சிந்தித்தால், நம் மனதில் தோன்றும் இரக்கமே அசைவ உணவு பழக்கத்திலிருந்து நம்மை விடுபட வைக்கும்.

    தன்னூன் பெருக்கற்கு தான்பிறிது ஊனுண்பான்

    எங்ஙனம் ஆளும் அருள்

    தன் உடம்பை பெருக்க செய்வதற்காகவே மற்றோரு உயிரின் உடம்பை தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும் எனும் திருக்குறள் வாசகங்களை உணவு மேசைக்கருகே சுவற்றில் மாட்டி வைத்தால், தட்டில் அசைவம் இருந்தாலும் எடுத்து உண்ண மனம் வருமா?

    • 10 வருடங்களுக்கு மேலாக இத்தகைய உணவு முறை சிறப்பானது என கூறி வந்தார்
    • சாம்சோனோவா சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை

    சைவ உணவு உண்பவர்களை வெஜிடேரியன்கள் என்றும் சைவ உணவுகளிலும் கூட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், யோகர்ட், மோர், பாலாடை கட்டி மற்றும் வெண்ணெய் போன்றவற்றையும் உண்ணாதவர்கள் வேகன் என அழைக்கப்படுவார்கள்.

    இந்த வேகன் உணவுகளை சமைக்காமல், பச்சை காய்கறிகளாகவும், கனிகளாகவும் மட்டும் உண்டு வந்து, பிறரையும் உண்ண பிரசாரம் செய்து வந்தவர் ரஷியாவை சேர்ந்த ஜன்னா சாம்சோனோவா (39).

    சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இத்தகைய உணவு முறை சிறப்பானது என கூறி சமூக வலைதளங்களில் ஜன்னா டார்ட் எனும் பெயரில் பிரச்சாரம் செய்து வந்தார்.

    "என் உடலும், மனமும் தினமும் மாறுவதை நான் காண்கிறேன். இப்பொழுது உள்ள என் புதிய 'என்னை' நான் விரும்புகிறேன். பழைய உணவு பழக்கங்களுக்கு போக விரும்பவில்லை" என வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். கடந்த 7 வருடங்களாக சாம்சோனோவா, பலாப்பழமும், டூரியன் பழங்களும் மட்டுமே உண்டு வந்தார்.

    இந்நிலையில் சாம்சோனோவா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்தார்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தபோது, சில மாதங்களுக்கு முன் அவர் மிகுந்த களைப்புடன் இருந்தார். அவர் கால்கள் வீங்கி இருந்தன. நீண்ட சிகிச்சைக்காக அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.

    பிறகு அவர் தாய்லாந்து சென்றார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமாகியது. அவரை சிகிச்சை எடுத்து கொள்ள சொல்லி அவரது நண்பர்கள் வற்புறுத்தியும் அவர் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் அவர் பட்டினியால் உயிரிழந்தார்.

    பட்டினியால் ஏற்பட்ட களைப்பினாலும், முழுவதும் வேகன் உணவாகவே உண்டு வந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தாலும், காலரா நோயால் பாதிக்கப்பட்டவரை போல் மாறி தன் மகள் இறந்ததாக அவரின் தாயார் தெரிவித்தார்.

    சாம்சோனோவாவின் இறப்பிற்கான அதிகாரபூர்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கான வல்லுனர்களின் ஆலோசனையின்படியே உணவு பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், தகுந்த மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் செய்து கொள்ளும் இதுபோன்ற மாறுதல்கள் உடல்நலத்தை மோசமடைய செய்து உயிருக்கும் ஆபத்தாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×