என் மலர்tooltip icon

    உலகம்

    • செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    பீஜிங்:

    விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    • இன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் சதி செய்ததாக ஓபன் ஏஐ குற்றம்சாட்டியுள்ளது.
    • ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத்தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் சதி செய்ததாக ஓபன் ஏஐ குற்றம்சாட்டியுள்ளது.

    அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன்ஏஐ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவில் நடைபெற்று வரும் பொதுத்தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்திட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்ததை பயன்படுத்த முயற்சித்தது.

    இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை பாராட்டி மக்களிடம் கருத்துருவை உருவாக்கிடவும் முயற்சித்ததாக கூறியுள்ளது.

    ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத்தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
    • ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உண்மை தான் என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கடந்த வாரம் தெரிவித்தது.

    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, கடந்த மாதம் 19-ந் தேதி அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார்.

    பின்னர் அவர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்ட நிலையில், ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

    இதில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்ததால் இது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்கிற கேள்வி எழுந்தது.

    இந்த சூழலில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஈரான் ஆயுத படைகளின் தலைமை, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உண்மை தான் என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கடந்த வாரம் தெரிவித்தது.

    இந்த நிலையில் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஹெலிகாப்டரில் குண்டு வெடித்து இருக்கலாம் என்று எழுந்த யூகங்களுக்கு ஈரான் அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.

    இதுதொடர்பாக ஈரான் ஆயுத படைகளின் தலைமை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "ஹெலிகாப்டரின் சிதைவுகள் மற்றும் மீதமுள்ள பாகங்கள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் சிதைவுகள் சிதறிக் கிடந்த விதம் ஆகியவற்றின் சோதனை முடிவுகளை பார்க்கும்போது ஹெலிகாப்டரில் நாசவேலை குண்டு வெடிப்பு எதுவும் நிகழவில்லை என்பது உறுதியாகி உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஃபாவின் மத்திய பகுதியில் ஹமாஸ் சுரங்கங்களை அழிக்கப்பட்டது.
    • ஹமாஸ் ஆயுத கிடங்கு நகர் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனையில் இஸ்ரேல் எல்லையில் உள்ள காசாவின் வடக்குப் பகுதியில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது.

    கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி படைகளை நகர்த்தி வந்தது. தற்போது ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் சீர்குலைத்துள்ளது.

    ஹமாஸ்க்கு எதிராக போர் தொடுத்ததன் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்தது.

    எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் (சுமார் 10 லட்சம் பேர்) வசித்து வருகிறார்கள். இதனால் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என உலக நாடுகள் ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றமும் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தடைவிதித்தது, ஆனால் முழு அளவில் தரைவழி தாக்குதல் நடத்தமாட்டோம் ஒரு குறிப்பிட்ட அளவில் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கடந்த வார இறுதியில் தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இது துரதிருஷ்டவசமான தவறு என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இதனால் ரஃபா நகர் மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் யோசிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஃபாவின் மத்திய பகுதியில் ராணுவம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரஃபாவின் மத்திய பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்தோம். ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்கள் மற்றும் ஆயுத கிடங்கு நகரை அகற்றியுள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் கடந்த 6-ந்தேதி ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. எகிப்து எல்லையுடன் உள்ள கிழக்கு மாவட்டங்கள் மீது தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றன. தற்போது மேற்கு மாவட்டமான டெல் அல்-சுல்தானில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளது.

    இங்கு இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ்க்கும் இடையில் கடுமையான சண்டை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியள்ளது.

    மத்திய ரஃபாவின் எந்த பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

    • ரூ. 31 கோடி வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • அஷ்வானி குப்தா நிசான் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

    நிசான் மோட்டார் கம்பெனியின் முன்னாள் சி.இ.ஓ. அஷ்வானி குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேற நிசான் நிறுவனம் அவருக்கு 3.7 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 31 கோடி வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அஷ்வானி குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அஷ்வானி குப்தா நிசான் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

    நிசான் நிறுவனத்தின் எதிர்காலமாக கருதப்பட்ட நிலையில், அதன் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து வெளியேறிய சம்பவம் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2019 ஆம் ஆண்டு நிசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அஷ்வானி குப்தா செயல்பட்டு வந்தார்.

    தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து அஷ்வானி குப்தா விலகுவதாக நிசான் நிறுவனம் அறிவித்ததை அடுத்து, அவர் அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    • லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற சிறுவனின் கலைப்பயணம் கடந்த ஆண்டு விடுமுறையின் போது தொடங்கி உள்ளது.
    • சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் லிசா மகனின் படைப்புகளை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராமில் தனி பக்கம் உருவாக்கினார்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது திறமைகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடுகிறார்கள். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற அந்த சிறுவனின் கலைப்பயணம் கடந்த ஆண்டு விடுமுறையின் போது தொடங்கி உள்ளது. சிறுவனின் ஓவிய ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் சிறுவனுக்காகவே ஒரு பிரத்யேக ஸ்டூடியோவை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அந்த சிறுவன் டைனோசர்கள், குதிரைகள் போன்ற விலங்குகளின் ஓவியங்களை அசத்தலாக வரைந்தான்.

    தொடர்ந்து சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் லிசா மகனின் படைப்புகளை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராமில் தனி பக்கம் உருவாக்கினார். அதில், சிறுவன் வரைந்த ஓவியங்களை பதிவிட்டார். அவற்றை பார்த்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சிறுவனின் ஓவிய திறமையை பாராட்டி பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் நடந்த மிகப்பெரிய கண்காட்சியில் லாரண்டின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பிரபலமான அந்த சிறுவனின் ஓவியங்கள் 7 ஆயிரம் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.82 லட்சம்) விலை போய் உள்ளது.


    • ரிஷிசுனக் அணிந்திருந்த ‘முதுகு பை’அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலை உயர்ந்த பையுடன் ரிஷிசுனக் சென்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கிலாந்தில் பொது தேர்தல் ஜூலை 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ரிஷிசுனக் தனது கட்சிக்கு ஆதரவு திரட்டி நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரிஷிசுனக் சமீபத்தில் லண்டனில் இருந்து கார்ன்வால் வரை செல்லும் ஸ்லீப்பர் ரெயிலில் பயணம் செய்தார்.

    அப்போது ரிஷிசுனக் அணிந்திருந்த 'முதுகு பை'அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆர்.எஸ். என எழுதப்பட்டிருந்த அந்த 'முதுகு பை'யுடன் அவர் ரெயிலில் ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த 'முதுகு பை' தொடர்பான விபரங்களை அறிய மக்கள் ஆர்வம் காட்டி உள்ளனர். அந்த 'முதுகு பை' டுமி அரைவ் பிராட்லி நிறுவனத்தின் பேக் என்று கருதப்படுகிறது.

    இவை மிகப்பெரிய கடைகளில் விற்கப்படுகிறது. இந்த பையின் இந்திய மதிப்பு சுமார் ரூ.79 ஆயிரம் என கூறப்படுகிறது. இந்த பை தொடர்பான விபரங்கள் வைரலாகி வரும் நிலையில், பிரசாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலை உயர்ந்த பையுடன் ரிஷிசுனக் சென்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


    • தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ நிதி திரட்டும் இணைய பக்கத்தில் (FUNDRISING PAGE) தான் ஒரு 'அரசியல் கைதி' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
    • "நான் இப்போது அரசியல் சூனிய வேட்டையில் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு (இந்திய மதிப்பில்) ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.

    இதையடுத்து அவர் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மெர்க்கன், ஜூலை 11-ம் தேதி டிரம்ப்புக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

     

    விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு மோசடியான அவமானகரமான வழக்கு. இதற்கு உண்மையான தீர்ப்பு நவம்பர் 5 (அமெரிக்க அதிபர் தேர்தலில்) மக்களால் வழங்கப்படும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். நான் நிரபராதி, நமது தேசத்துக்காகவும் அரசியலமைப்புக்காகவும் போராடி வருகிறேன்" என்று தெரிவித்தார்.

     

    தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ நிதி திரட்டும் இணைய பக்கத்தில் (FUNDRISING PAGE) தான் ஒரு 'அரசியல் கைதி' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அதில், "நான் இப்போது அரசியல் சூனிய வேட்டையில் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "நான் உண்மையை பேசியதற்கு அரசியல் சூழ்ச்சியால் அவர்கள் என்னை சிறையில் அடைக்க விரும்பினால் நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று நாவீன காலத்தின் நெல்சன் மண்டேலாவாக மாறுவேன். அது எனக்கு மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

     

    இந்நிலையில் இந்த தீர்ப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கூட்டத்தில் கலந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் திடீரென பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
    • துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிராடிஸ்லா:

    ஐரோப்பிய நாடான சுலோவேகியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ (வயது 59). இவர் அங்குள்ள ஹேண்ட்லோவா நகரில் கடந்த 15-ந்தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் திடீரென பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையே துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாக துணை பிரதமரும், பாதுகாப்பு துறை மந்திரியுமான ராபர்ட் கலினாக் (71) தெரிவித்துள்ளார்.

    • ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் சிக்கினார்.
    • இதுதொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கினார். கடந்த 2016-ம் ஆண்டு டிரம்ப் அதிபர் தேர்தல் போட்டியின்போது அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.

    அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்பட்டார். அவர்மீது 34 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மெர்க்கன், ஜூலை 11-ம் தேதி டிரம்ப்புக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர்.
    • இம்ரான்கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதால் விடுதலை செய்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் (71). இவர்மீது பணமோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஒரு ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து போலீசார் கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இம்ரான்கானை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் ராவல்பிண்டியில் ராணுவ தலைமையகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    வன்முறையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கலவரத்தை தூண்டியதாக இம்ரான்கான் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடந்துவந்தது. இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்தது.

    இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறிய கோர்ட் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

    ஆனாலும், ஊழல் குற்றச்சாட்டு உறுதியாகி அவர் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அந்த வழக்குகளில் அவர் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கோவில் ஐ.நா. குழுவில் பணியாற்றி வருபவர் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்.
    • மேஜர் ராதிகா சென் ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க விருதை பெற்றார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் மே 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வரும் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்னுக்கு மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது அறிவிக்கப்பட்டது.

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார் மேஜர் சென்.

    அவர் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் பட்டாலியனுக்கான படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். மேஜர் சுமன் கவானிக்கு பிறகு இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் 2-வது இந்திய அமைதி காக்கும் வீரர் மேஜர் சென் ஆவார்.

    மேஜர் சென்னின் சேவையைப் பாராட்டிய குட்டரெஸ், அவர் ஒரு உண்மையான தலைவர் மற்றும் முன்மாதிரி. அவரது சேவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு உண்மையான வரவு. வடக்கு கிவுவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், அவரது துருப்புக்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தீவிரமாக ஈடுபட்டன. பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மேஜர் ராதிகா சென் கூறுகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி. சவாலான சூழலில் பணியாற்றும் அனைத்து அமைதி காக்கும் படையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதால் இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர தங்களால் இயன்றதை வழங்குகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று நடந்த விழாவில் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருதை மேஜர் ராதிகா சென் பெற்றார்.

    ×