என் மலர்tooltip icon

    உலகம்

    • ரஃபா நகரில் காசாவின் 50 சதவீத பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது காசாவின் தெற்கு பகுதியில் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. முழு அளவில் இல்லாத ஒரு குறைந்த அளவிலான தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. காசாவின் வடக்கு பகுதியில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் ரஃபா நகரில் குவிந்துள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 13 லட்சம் மக்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில்தான் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஏவுகணைகள் தற்காலிக முகாம் மீது விழுந்தது. இதில் தற்காலிக முகாம் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காசா மீது அனைத்து கண்களும் என்ற வாசகத்துடன் போட்டோ ஒன்று வெளியானது.

    இந்த போட்டோவை ஷேர் செய்து காசா மக்களுக்கு (பாலஸ்தீன மக்கள்) பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால், ஏவுகணை தாக்குதலின்போது ஹமாஸ் வெடிப்பொருட்கள் தீப்பற்றி எரிந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்க இன்னும் ஏழு மாதங்கள் தாக்குதல் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது உங்களுடைய கண்கள் எங்கே இருந்தன என்ற வாசகத்துடன் ஒரு குழந்தை முன் ஹமாஸ் பயங்கரவாதி துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோவை வெளியிட்டு இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது.

    அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் 1200 பேரை கொலை செய்த ஹமாஸ், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தற்போது வரை இந்த தாக்குதலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    • இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
    • ஒரு கப்பலை சிறைப்பிடித்த நிலையில், ஒரு கப்பலை மூழ்கடித்துள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமன் நாட்டியில் செயல்பட்டு வரும் ஹவுதி குழு செயல்பட்டு வருகிறது.

    இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஹவுதி குழுவினருக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் ஏவுகணைகள் மூலம் ஹவுதி தனது தாக்குலை தொடர்கிறது.

    அப்படித்தான் கீரிஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற கப்பல் மீது நேற்று முன்தினம் ஹவுதி தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பல் சேதமாகி, தண்ணீர் கப்பலுக்குள் சென்றது. ஆனால், கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை.

    இந்த நிலையில் லாக்ஸ் என்ற தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஈரானுக்கு தானியங்கள் ஏற்றி சென்றது எனத் தெரியவந்துள்ளது. கப்பல் முழுவதும் தானியங்கள் நிரம்பியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஹவுதி குழுவுக்கு ஈரான்தான் முழு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆதரவு அளித்த நாட்டிற்கு தானியங்கள் கொண்டு சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு கப்பலை சிறைப்பிடித்தது. மற்றொரு கப்பலை மூழ்கடித்தது.

    நேற்று ஏமன் மீது பறந்த டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க விமானப்படை டிரோன் ஏதும் மாயமாகவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    • லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும்.
    • வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

    உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

    கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.

    சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஒவ்வொரு பக்கமும் 10 சென்டி மீட்டர் (4 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளது. லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.

    லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும்.

    வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. லிக்னோசாட் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு விண்வெளியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தொவித்தனர்.

    • பாகிஸ்தானில் இந்தியா மீது வெறுப்பு எதுவும் கிடையாது.
    • பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் பாகிஸ்தான் மீது வெறுப்பைத் தூவுகின்றன.

    இஸ்லாமாபாத்:

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இதில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

    ஓட்டு எண்ணிக்கை 4-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் தேர்தலில் பிரதமர் மோடி தோற்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்து வரும் பாராளுன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்க வேண்டும்.


    இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்தியா, பாகிஸ்தானில் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டுமானால் இந்தியாவும், பாகிஸ்தானும் நெருங்கி வரவேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானில் இந்தியா மீது வெறுப்பு எதுவும் கிடையாது. ஆனால் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் பாகிஸ்தான் மீது வெறுப்பைத் தூவுகின்றன. இந்தியாவிலுள்ள வாக்காளர்கள் முட்டாள்கள் அல்ல. முன்னேறிய, வளர்ச்சி பெற்ற நாடாக இந்துஸ்தானம் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம்.

    மோடியைத் தோற்கடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்த்துகள். அது ராகுல் காந்தியோ அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலோ அல்லது மம்தா பானர்ஜியோ அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காசாவின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
    • இஸ்ரேல் ஏற்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    டெல் அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். காசாவின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

    காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி கூறும்போது, ஹமாஸ் அமைப்பையும், அதன் அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும். இதனால் போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும். எகிப்து எல்லையில் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்படுத்துகிறது.

    ஹமாசின் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்தையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காசாவில் சண்டை குறைந்தது இந்த ஆண்டு முழுவதும் தொடரும். பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் பணயக்கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் கோரியபடி போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. காசாவின் ரபா நகரில் சண்டையிடுவது அர்த்தமற்ற போர் அல்ல. காசாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதையும், அதையும் அதன் கூட்டாளிகளும் இஸ்ரேலை தாக்குவதையும் நிறுத்துவதே நோக்கம் என்றார்.

    இதற்கிடையே காசா மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுக்கான தூதரை பிரேசில் திரும்ப பெற்றுள்ளது. மெக்சிகோ நாட்டில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தூதரகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.
    • 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை மேயர்ஸ் பெற்றுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. உலகளவில் உள்ள 2,781 பில்லியனர்களில் 2024-ம் ஆண்டில் மொத்த பில்லியனர் எண்ணிக்கையில் 13.3 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இது முந்தைய ஆண்டில் 12.8 சதவீதமாக இருந்தது.

    இந்தப் பட்டியலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் பெற்றுள்ளார். இவர் லாரியல் நிறுவனரின் பேத்தி ஆவார். இவரது சொத்து மதிப்பு 98.2 பில்லியன் டாலராகும். அவரின் சொத்து லாரியல் குழுமத்தின் கிட்டத்தட்ட 35 சதவீத பங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அவரை தொடர்ந்து, 2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ் வால்டன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 77.2 பில்லியன் டாலராகும்.

    இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் ஜூலியா கோச் 66.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். கோச் இண்டஸ்ட்ரீசில் 42 சதவீத பங்குகளைப் பெற்ற அவர் எண்ணெய் சுத்திகரிப்பு, மருத்துவத் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    தனியார் நிறுவனமான மார்ஸ் இன்க்கின் வாரிசான ஜாக்குலின் மார்ஸ் 39.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    மார்ஸ் இன்க் உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

    இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் 38 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 5-வது இடம்பிடித்துள்ளார். ஜிண்டால் குழுமம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் வருவாய் 15 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

    6-வது இடத்தில் ரஃபேலா அபோன்டே-டயமண்டும், 7வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கென்சி ஸ்காட்டும், 8-வது இடத்தில் ஜினா ரைன்ஹார்ட்டும், 9-வது இடத்தில் அபிகாயில் ஜான்சனும், 10-வது இடத்தில் மிரியம் அடெல்சனும் உள்ளனர்.

    • கரடுமுரடான மலைகள் அதிகளவு கொண்ட இந்த பகுதி போக்குவரத்துக்கு தகுதியற்றதாக விளங்கி வருகிறது.
    • சாலை தடுப்பில் அந்த பஸ் நேருக்கு நேர் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமாக பலூசிஸ்தான் விளங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய மாகாணமாக விளங்கும் பலூசிஸ்தான் பொதுவாக வறண்ட மாகாணமாக கருதப்படுகிறது. கரடுமுரடான மலைகள் அதிகளவு கொண்ட இந்த பகுதி போக்குவரத்துக்கு தகுதியற்றதாக விளங்கி வருகிறது. இருந்தாலும் உள்ளூர் பொதுமக்கள் பெரிய நகரங்களுக்கு சென்று வருவதற்காக மலைகளை குடைந்து சாலைகளை ஏற்படுத்தி உள்ளனர். இருப்பினும் சரியான அளவில் இந்த சாலைகளை அமைக்கப்படாததால் விபத்து அபாயம் அதிகம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

    இந்தநிலையில் பலூசிஸ்தானின் ஒதுக்குபுறமான சிற்றூரான டர்பட்டிலிருந்து இருந்து தலைநகரான குவெட்டாவுக்கு பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. தினசரி சேவைக்காக ஒருதடவை மட்டுமே இயக்கப்படும் இந்த பஸ்சில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இதனையடுத்து நேற்று இயக்கப்பட்ட அந்த பஸ்சில் சுமார் 54 பயணிகள் பயணித்தனர். கூட்ட நெரிசலுடன் மலைபாங்கான சாலையில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. வாசுக் அருகே சென்றபோது திடீரென அதன் முன்பக்க டயர் வெடித்து பஞ்சரானது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை அந்த பஸ் இழந்தது.

    இதனையடுத்து சாலை தடுப்பில் அந்த பஸ் நேருக்கு நேர் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் அந்த பாய்ந்தது. தரையில் மோதிய வேகத்தில் அந்த பஸ் அப்பளம்போல் நொறுங்கி தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்து கொண்டிருந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 28 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 22 பேரை உள்ளூர் பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

    • காசா மீதான தாக்குதலை பிரேசில் அதிபர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
    • காசா மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிரான இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    பிரேசில் அதிபர் இனாசியோ லுலா டா சில்வா தொடர்ந்து இஸ்ரேலை விமர்சனம் செய்து வந்தார். காசா மீதான தாக்குதலை ஹொலோகாஸ்ட் உடன் ஒப்பிட்டு விமர்சித்தார்.

    இதனால் பொது கண்டனம் தெரிவிக்க பிரேசில் தூதருக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி சம்மன் அனுப்பியிருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கான பிரேசில் பிரதமரை திரும்பப் பெறுவதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரேசில் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    காசா மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராகவும், தற்போது வரை அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதால் பிரேசில் தூதரை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி ஈரான் வான்தாக்குதல் நடத்தியது.
    • அதற்கு பதிலடியாக ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தான்- ஈரான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் ஈரான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுளளது.

    இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தெஹ்சில் மஷ்கில் பச்சா ராய் என்ற இடத்தில் நடைபெற்றது. பலுசிஸ்தான் துணை ராணுவப் படை அதிகாரிகள், இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால், ஈரான் அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை.

    ஈரான் படைகள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி ஈரான் வான்தாக்குதல் நடத்தியது.

    அதற்கு பதிலடியாக ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. பின்னர் இருநாட்டு டிப்ளோமேட்டிக் மூலமாக பதற்றத்தை கட்டுப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    • அமெரிக்காவுடன் இணக்கமாக உள்ளதாகல் தென்கொரியா மீது வடகொரியா கோபத்தில் உள்ளது.
    • இரு நாட்டின் ராணுவ ஒத்திகைக்கு எதிராக ஏவுகணை சோதனை நடத்துவது வழக்கம்.

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவின் எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம்.

    தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. அதிலும் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைந்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது.

    இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த பலூன்கள் சுமந்து கொண்டு வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்தாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது.

    வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெளிவாக தெரிகிறது. மேலும், தென்கொரிய மக்களுக்கு எதிராக தீவிரமான பாதுகாப்பு மிரட்டல் எனவும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம்தாழ்ந்த செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம் எனவும் தென்கொரியா தெரிவித்தள்ளது.

    எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசு நிர்வாகிகள், அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    அந்த பொருட்கள் வீடுகள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தற்போது தரையிறங்கியுள்ள பலூன்களால் சேதம் ஏதும் ஏற்பட்டது குறித்து தென்கொரியா தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    • பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
    • உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த தாக்குதல் துரதிஸ்டவசமான தவறு என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

    மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நிற்கின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்கிறது. 

     

     

    பல்ஸாதீனம் மீது இஸ்ரேல் நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். சர்வதேச சமூகம் இன்னும் எத்தனை காலத்துக்கு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறது என்பதே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. 

     

    • காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வருபவர் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்.
    • உண்மையான தலைவர் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பாராட்டினார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் மே 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வரும் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென், மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது பெறுகிறார்.

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார் மேஜர் சென். இங்குள்ள உலக அமைப்பின் தலைமையகத்தில் நாளை நடைபெறும் விழாவில் குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருதை பெறுகிறார்.

    அவர் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் பட்டாலியனுக்கான படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். மேஜர் சுமன் கவானிக்கு பிறகு இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் 2-வது இந்திய அமைதி காக்கும் வீரர் மேஜர் சென் ஆவார்.

    மேஜர் சென்னின் சேவையைப் பாராட்டிய குட்டரெஸ், அவர் ஒரு உண்மையான தலைவர் மற்றும் முன்மாதிரி. அவரது சேவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு உண்மையான வரவு. வடக்கு கிவுவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், அவரது துருப்புக்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தீவிரமாக ஈடுபட்டன. பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மேஜர் ராதிகா சென் கூறுகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி. சவாலான சூழலில் பணியாற்றும் அனைத்து அமைதி காக்கும் படையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதால் இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர தங்களால் இயன்றதை வழங்குகிறது என தெரிவித்தார்.

    ×