என் மலர்
உலகம்
- 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது.
- இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.
இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை தலைநகர் கொழும்பு உட்பட 7 மாவட்டங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது. மொத்தம் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
4000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளுக்காக படகுகளுடன் கூடிய 7 குழுக்களை இலங்கை ராணுவம் அனுப்பி உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி அவசர நடவடிக்கைக்காக விமானப்படை 3 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. மழை நீடிக்கும் என்பதால், இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
- தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.
பெர்லின்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை ஜனநாயக முறைப்படி சிறப்பாக நடத்தி முடித்துள்ள இந்தியாவுக்கு ஜெர்மனி, நைஜீரிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை வெற்றிகரமாக முடித்த இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், இந்தியா உடனான நமது ஒத்துழைப்பை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.

இதேபோல், நைஜீரிய வெளியுறவுத்துறை மந்திரி யூசுப் மைதாமா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தில் உலகின் கோட்டையாக விளங்கும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டு, 44 நாட்கள் நீடித்த இந்த தேர்தல் வரலாற்றிலேயே மிகப் பெரியது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக நாங்கள் உங்களுடன் இணைந்து கொள்கிறோம். வெற்றிகரமான தேர்தல் காலத்திற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்க ஒரு ரோபோ பணியை தொடங்கும்.
- நிலவின் தொலைதூரப் பயணங்கள் மிகவும் கடினமானவை.
நிலவில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்கலங்களை அனுப்பி வருகின்றன. நிலவில் மண்,பாறை மாதிரிகளை கொண்டு வர சீனா, சாங்-இ விண்கல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த மே 3-ந்தேதி சாங்-இ 6 விண்கலத்தை லாங் மார்ச்-5 ராக்கெட்டில் நிலவுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் சாங்-இ 6 விண்கலம் இன்று காலை நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அந்த விண்கலம் நிலவின் தொலைதூர பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கியதாக சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்தது. இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் பாதி பகுதியான தென் துருவ எய்ட்கன் படுகையில் உள்ள ஒரு பள்ளத்தில் விண்கலம் தரையிறங்கி உள்ளது.
விண்கலம் தரையிறங்கிய 48 மணி நேரத்திற்குள் துளையிடத் திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்க ஒரு ரோபோ பணியை தொடங்கும். சாங்-இ 6 விண்கலம் மூலம் சேகரிக்கப்படும் மண்,பாறை மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படும்.
சாங்-இ 6 விண்கலம் தரையிறங்கியுள்ள அப்பல்லோ பேசின் என அழைக்கப்படும் பள்ளத் தாக்கு பகுதி நீர் பனியைக் கொண்டிருக்கலாம். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நிலவின் இரு பக்கங்களின் சிறப்பியல்புகள் மற்றும் வேறுபாடுகளை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கும், நிலவின் ரகசியங்களை வெளிப்படுத்துவதற்கும் நிலவின் தொலைதூரப் பகுதியில் இருந்து நேரடி மாதிரிகள் எடுப்பது அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நிலவின் தொலைதூரப் பயணங்கள் மிகவும் கடினமானவை. இது தகவல் தொடர்புக்கு மிகவும் கடினமான பகுதியாகும். , நிலவில் அரிதாக ஆராயப் பட்ட பகுதியிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே அனுப்பப்பட்ட சாங்-இ -5 விண்கலம் நிலவில் இருந்து எரிமலைப் பாறை மாதிரிகளை கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
- பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பெற்றவர்களே நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் 400 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 29-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. கடந்த 2 நாட்களாக வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் இன்று காலை முடிவுகள் வெளியாகின.
இதில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சி முதல் முறையாக பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை இழந்துள்ளது. பதிவான வாக்குகளில் 99.8 சதவீதம் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 40 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
ஜனநாயகக் கூட்டணி 22 சதவீத வாக்குகளையும், முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவின் புதிய கட்சி 15 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. பொருளாதார சுதந்திரப் போராளிகள் கட்சி 9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு வெள்ளை நிறவெறியிலிருந்து விடுதலை பெற்று தந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 1994-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பெரும்பான்மையை இழந்துள்ளது. முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நிறுவிய அக்கட்சி மற்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சியையும் ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேவேளையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் முடிவு குறித்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத் தலைவர் டுமிசோ கூறும் போது, தேர்தல் முடிவு ஒரு கற்றல் புள்ளியாக நாங்கள் பார்க்கிறோம். எங்களை ஊக்குவிக்கும் ஒரு பாடம் என்றார்.
பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பெற்றவர்களே நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 பேரில் 6 பேர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
வாஷிங்டன்:
உலகப்புகழ் பெற்ற ஸ்பெல்லிங் பீ' எனப்படும் சொற்களை சரியாக உச்சரிக்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் 1.1 கோடி பேர் பங்கேற்றனர். அவர்களில் இருந்து தகுதிச்சுற்றுக்கு 228 பேரும், இறுதிப்போட்டிக்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ-2024 இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
இந்த போட்டியின் இறுதியில் நடந்த டை பிரேக்கர் சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது மாணவர் புருகத் சோமா 90 விநாடிகளில் 29 வார்த்தைகளைச் சரியாக உச்சரித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
வெற்றி பெற்ற புருகத் சோமாவிற்கு 50,000 டாலர் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த பைஜன் ஜகி என்ற மாணவர் 2-வது இடமும், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஷ்ரேய் பரேக் 3-வது இடமும் பிடித்தனர்.
இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 பேரில் 6 பேர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 4 பேர் கொண்ட குடும்பம் இவ்வளவு குறைந்த செலவில் சுவிட்சர்லாந்து நகரங்களை சுற்றி பார்த்ததாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது பலருக்கும் கனவாக உள்ளது. ஆனாலும் அதற்கான செலவு அதிகமாகும் என்பதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஒரு தம்பதி வெறும் ரூ.90 ஆயிரம் செலவில் 25 சுவிட்சர்லாந்து நகரங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
இந்தியரான மெஹூல்ஷா தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் 11 நாட்களில் 25 சுவிட்ஸ் நகரங்களுக்கு சென்று வந்துள்ளார். அவர் தினமும் சுவிட்சர்லாந்தில் எந்தெந்த நகரங்களுக்கு சென்றனர் என்ற விபரங்களையும், 11 நாட்களும் சுற்றுலாவை எவ்வாறு மகிழ்ச்சியாக கழித்தனர் என்ற விபரங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 4 பேர் கொண்ட குடும்பம் இவ்வளவு குறைந்த செலவில் சுவிட்சர்லாந்து நகரங்களை சுற்றி பார்த்ததாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. அவரது இந்த பதிவை சுமார் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
No travel agency will take you to this route but here's how we travelled Switzerland with 25+ cities in 11 Days including 4 Boat Cruises for total price of Rs. 90k for family of 2 Adults and 2 Kids using Swiss Travel System
— The Startup CA (@mehulshahca) May 28, 2024
A thread ( 1/n ) pic.twitter.com/k2kSkwpUB4
- மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
துருக்கியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரை இளமையாக காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.
அதில், சிகிச்சைக்கு முன்பு அவரது தோற்றம் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவரது தோற்றம் குறித்த படங்கள் உள்ளன.
புகைப்படங்களுடன் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த நிபுணர்கள் வெளியிட்ட பதிவில், மைக்கேலுக்கு பேஸ் லிப்ட், நெக் லிப்ட், கீழ் கண் இமை உள்ளிட்ட இடங்களில் முடி மாற்று செயல்முறைகளை நாங்கள் செய்தோம். அவர் நம்பமுடியாத மாற்றத்தை பெற்றார். அதை நீங்கள் புகைப்படங்களில் காணலாம். நாங்கள் எப்போதும் முழுமையானதாக எடுத்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றத்தை நம்ப முடியவில்லை என ஒரு பயனரும், துருக்கியில் அற்புதங்களை செய்கிறார்கள் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். இதேபோல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட இந்த பதிவு விவாதமாக மாறி உள்ளது.
- மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
- 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
சமூக வலைதளங்களில் வன விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில வீடியோக்கள் மட்டுமே பயனர்களை ரசிக்க செய்யும். அந்த வகையில் யூ-டியூபில் 'லேட்டஸ்ட் சைட்டிங்ஸ்' என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சிங்கங்கள் நீச்சல் அடித்து ஆற்றை கடந்த காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.
அந்த வீடியோ கென்யாவில் உள்ள மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வன பகுதிக்குள் ஒரு ஆறு கடந்து செல்கிறது. வனப்பகுதியில் 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
அப்போது ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்வதற்காக சிங்கங்கள் வரிசையாக வருகின்றன. பின்னர் ஆற்றில் குதித்து சிங்கங்கள் நீச்சல் அடித்தவாறு மற்றொரு கரையை கடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
- மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள சுனிதா வில்லியம்ஸ் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.
- தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.
இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது.
இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார். இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ் (58), புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர்.

இதற்காக, போயிங் நிறுவனம் தயாரித்துள்ள விண்கலம் மூலம் கடந்த மே மாதம் 7-ந்தேதி சர்வதேச விண்வெளிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், விண்கலம் ஏவப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் தொழில்நுட்ப பிரச்சனையால், இந்த பயணம் திடீரென நிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்தது.
இதையடுத்து மீண்டும் நேற்று புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கென தனி நீதிமன்றம் உள்ளது.
- அதற்கென தனி அரசியமைப்பு உள்ளது- பாகிஸ்தான் கூடுதல் அட்டர்னி ஜெனரல்.
பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டியில் வசித்து வந்த கவிஞரும், பத்திரிகையாளருமான அகமது பர்ஹத் ஷா பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளால் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அகமது பர்ஹத் ஷாவின் மனைவி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், அகமது பர்ஹத் ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது என நீதிபதி அக்தர் கயானி தெரிவித்தார்.
இது தொடர்பாக விசாணை நேற்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பாகிஸ்தான் கூடுதல் அட்டார்னி ஜெனரல், "அகமது பர்ஹத் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போலீஸ் காவலில் உள்ளார். அவரை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் முன் ஆஜர்படுத்த முடியாது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பகுதி. அதற்கென தனி அரசியமைப்பு, தனி நீதிமன்றம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு, வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்பாக கருதப்படும் என கூடுதல் அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்தியாவில் கூறப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எங்களுடைய என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் கூடுதல் அட்டர்னி ஜெனரல் இவ்வாறு கூறியது வியப்பதாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அது இந்தியாவுடன் இணைக்கப்படும் என தொடர்ந்து கூறி வருகிறது.
இதற்கிடையே நீதிபதி, "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் நிலைகள் எப்படி அந்த நிலத்தில் நுழைய முடியும்" என கேள்வி எழுப்பியுள்ளார்.
அகமது பர்ஹத் ஷா திர்காட் போலீசால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- இது அரசியல் சூனிய வேட்டை என்று தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், தான் நிரபராதி என்றும் அரசியல் கைதியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் இருந்த ரகசிய உறவவை மறைக்க ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு (இந்திய மதிப்பில்) ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து அவர் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நேற்று (மே 31) நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறையாகும்.
இது அரசியல் சூனிய வேட்டை என்று தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், தான் நிரபராதி என்றும் அரசியல் கைதியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அமரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனுக்கு எதிராக வலுவான போட்டியாளராக டிரம்ப் பார்க்கப்படுகிறார். தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த மோசடியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். தான் நிரபராதி என நிரூபிக்க முக்கியமான சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வர அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான தண்டனை விபரங்கள் வரும் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- "முதற்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும்"
- அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ஜோ பைடன் உள்ளார்
பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஹமாஸை முற்றிலுமாக துடைத்தெறிவதாக சூளுரைத்த இஸ்ரேல்,பாலஸ்தீனிய மக்கள் அதிகம் வாழும் காஸா மீது தாக்குதல் நடந்தி வந்த நிலையில் சமீபத்தில் ரஃபா நகரம் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

கடந்த மே 26 ஆம் தேதி நடத்திய ரஃபா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்க்கிடையில் ஹமாஸிடம் இஸ்ரேலிய பிணைக்கைதிகளும், இஸ்ரேலிடம் பாலஸ்தீனிய பிணைக்கைதிகளும் அதிக அளவில் உள்ள நிலையில் தங்கள் நாட்டவரை விடுவித்தால் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள பலஸ்தீனியர்களை விடுவிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பல பலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில், இந்த போரில் ஆரம்பம் முதல் இஸ்ரேலுக்கு ஆதரவாக அனைத்து வகை உதவிகளையும் செய்து வரும் அமெரிக்கா சார்பில் போர் நிறுத்ததுக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
8 மாதங்களை கடந்து நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். நேற்று (மே 31) வெள்ளை மாளிகையில் செய்தி நேரலையில் பேசிய ஜோ பைடன், இஸ்ரேலின் இந்த உடன்படிக்கையை ஹாமாஸ் ஏற்று இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு முதற்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தற்போது வரை இஸ்ரேல் நடத்தியுள்ள வலுவான தாக்குதலில் ஹமாஸால் இனிமேல் பெரிய அளவில் செயல்பட முடியாது என்றும் தெரிவித்தார்.

"இந்த தருணத்தை நேதன்யாகு விட்டுவிடக் கூடாது. 6 வார கால போர் நிறுத்தத்துக்கு ஏற்பட்டு ஹமாஸுடன் பேச்சுவார்த்தை வெற்றி பெரும் பட்சத்தில் அதை மேலும் நீட்டித்து போரை முடிவுக்கு கொண்டுவருவோம். அதன்பிறகு உலக நாடுகள் சேர்ந்து போரில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணியில் ஈடுபவோம்" என்று பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ஜோ பைடன் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.






