என் மலர்
உலகம்
- கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது பெரிய விருது வழங்கப்பட்டது.
மூன்று நாடுகள் பயணமாக நைஜீரியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நைஜீரிய அதிபர் டினுபுவை சந்தித்து பேசினார். இந்தியா மற்றும் நைஜீரியா இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு பின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது பெரிய விருதான "நைஜரின் கிராண்ட் கமாண்டர் ஆஃப் ஆர்டர்"-ஐ வழங்கி நைஜீரியா கௌரவித்தது. விருது பெற்றது குறித்து பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
இது பற்றி பேசிய அவர், "நைஜீரியாவின் தேசிய மரியாதையை எனக்கு வழங்குவதற்கான உங்கள் முடிவிற்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெருமை என்னுடையது மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் உரியது. இது பல நூற்றாண்டுகள் பழமையான இந்தியா-நைஜீரியா உறவுகளுக்கு கிடைத்த மரியாதை. இந்த மரியாதைக்காக, நைஜீரியா, உங்கள் அரசு மற்றும் குடிமக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.
- வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டுள்ளது.
- இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது
லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 17) இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. குடியிருப்பு கட்டடங்களில் தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லத்தின் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் வீட்டின் தோட்டத் பகுதி தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியானது.
முன்னதாக கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது 2 வது தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா குடியிருப்பு கட்டடம் மீது தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இதுவரை 3,452 பேரும், காசாவில் இதுவரை 43,846 பேர் உயிரிழந்துள்ளனர்.
- நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபுவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
- நைஜீரியத் தலைநகருக்கு பிரதமர் மோடி இன்று அதிகாலை வந்தார்.
மூன்று நாடுகள் பயணமாக நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மோடி வர்த்தகம், முதலீடு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-நைஜீரியா இடையே கூட்டணியை மேம்படுத்துவது குறித்து நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபுவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
17 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டிற்கு முதல் முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நைஜீரியத் தலைநகருக்கு பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வந்தார்.
டினுபுவுடன் நேரில் சந்தித்துப் பேசிய பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "தற்போது கூறப்பட்டது போல், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வருகிறார். எனது மூன்றாவது பதவிக் காலத்தின் தொடக்கத்திலேயே நைஜீரியாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது."
"கடந்த மாதம் நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு 140 கோடி இந்தியர்கள் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, இந்தியா 20 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்புகிறது."
"நைஜீரியாவுடனான எங்கள் மூலோபாய கூட்டாண்மைக்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். பாதுகாப்பு, எரிசக்தி, நிதி சிக்கல்கள், தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் போன்ற பல துறைகளில் எங்களுக்கு வலுவான ஒத்துழைப்பு உள்ளது. எங்கள் உறவுகளில் பல புதிய வாய்ப்புகள் இணைக்கப்பட்டுள்ளன."
"பயங்கரவாதம், பிரிவினைவாதம், கடற்கொள்ளையர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்களை சமாளிக்க நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். வரும் காலங்களில் இதை இன்னும் வலுவாக செய்வோம்."
"இன்றைய உரையாடல்களால், நமது உறவுகளுக்கு ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன். ஒன்றாக, உலக அளவில் குளோபல் சவுதின் முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்துவோம், மேலும் ஒருங்கிணைந்த முயற்சியால் வெற்றியை அடைவோம்," என்றார்.
- செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீடு குறிவைக்கப்பட்டது.
- இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் கண்டனம் தெரிவித்ததார்.
பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சேதம் ஏதும் பதிவாகவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நேதன்யாகு வீட்டை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேதன்யாகு வீட்டின் தொட்டப் பகுதி திடீரென தீப்பிடித்து பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த சம்பவம் நடக்கும்போது, நேதன்யாகு மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு இல்லை என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் கண்டனம் தெரிவித்ததுடன், பொதுவெளியில் வன்முறை அதிகரித்து இருப்பதற்கு எதிராக கடும் எச்சரிக்கையும் தெரிவித்து இருக்கிறார். இதுவரை இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாக்குதல் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.
- பிரேசில் நாட்டில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
- தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து பயமில்லை என்ற பிரேசில் அதிபரின் மனைவி தெரிவித்தார்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் வரும் 18, 19 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பிரதமர் மோடியும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதனையொட்டி ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டா சில்வா பேசினார்.
அப்போது திடீரென அங்குக் கப்பலின் ஹார்ன் சத்தம் கேட்டது. உடனே ஜன்ஜா டா சில்வா, "இது எலான் மஸ்க் தான் என்று நினைக்கிறேன்" என்று கிண்டல் செய்தார். தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து பயமில்லை என்ற கூறிய அவர், மஸ்க்கை கெட்ட வார்த்தையிலும் திட்டினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், எலான் மஸ்க் தனது மற்றொரு பதிவில், "ஜன்ஜா டா சில்வாவின் கணவரும் பிரேசில் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூயிஸ் அடுத்த தேர்தலில் தோற்கப் போகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரேசிலில், இந்தாண்டு ஒரு மாதத்திற்கு மேலாக எக்ஸ் சமூக வலைத்தளம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனால், பிரேசில் அரசுக்கும், மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலைமையில் எலான் மஸ்க்கை பிரேசில் அதிபரின் மனைவி கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை 19 வயதான ரியா சிங்கா வென்றார்.
- பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் டென்மார்க் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
மெக்சிகோவில் 73வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை டென்மார்க் நாட்டை சேர்ந்த 21 வயதான விக்டோரியா கிஜேர் கைப்பற்றினார்.
இதன் மூலம் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் டென்மார்க் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
2023 ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் விக்டோரியாவிற்கு பிரபஞ்ச அழகி பட்டம் சூட்டினார்.
2024 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோவின் மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் முதல் ரன்னர்-அப் ஆகவும், நைஜீரியாவின் சினிடிம்மா அடெட்ஷினா இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்ற 19 வயதான ரியா சிங்கா, இந்தியா சார்பில் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்ப சுற்றுகளில் ரியா சிங்கா அசத்தினாலும் முதல் 12 இடங்களை பிடிக்க முடியாததால் இறுதிசுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்.
இப்போட்டியில் முதல் 12 இடங்களை பெற்ற இறுதிப் போட்டியாளர்களில் 7 பேர் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
- நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதிய எம்.பி.க்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிப்பெற்று அதிபரானார்.
அந்த சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததால் அவர் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.
இந்த நிலையில் 225 இடங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 159 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் மந்திரி சபையை அதிபர் திசநாயகா நாளை (திங்கட்கிழமை) நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் மூத்த செய்தி தொடர்பாளர் டில்வின் சில்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் திங்கட்கிழமை ஒரு மந்திரிசபையை நியமிப்போம். அதன் பலம் 25-க்கும் குறைவாக இருக்கும். பொது செலவை குறைக்க சிறிய அளவிலான மந்திரி சபையை தேசிய மக்கள் சக்தி கூட்டணி பரிந்துரைக்கிறது. அதே வேளையில் துணை மந்திரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். மந்திரிகளுக்கு துறைகளை ஒதுக்குவதில் அறிவியல்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும்" என கூறினார்.
இலங்கை அரசியலமைப்பின் 46-வது பிரிவின்படி, மொத்த கேபினட் மந்திரிகளின் எண்ணிக்கை 30 ஆகவும், துணை மந்திரிகளின் எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்கும் எனவும், அப்போது அதிபர் திசநாயகா தனது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 225 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பாராளுமன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்காக நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதிய எம்.பி.க்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடியாக செல்லும் விமானத்தின் பயண தூரம் 15 மணி நேரம் ஆகும்.
- ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் சென்று விட முடியும்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல்-டீசலுக்கு மாற்றாக தனது டெஸ்லா காரை பேட்டரிகள் மூலம் இயக்கி வருகிறார். அதுவும் இந்த கார் டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும்.
உலகம் முழுவதும் இந்த டெஸ்லா காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல் தற்போது தண்ணீர் மூலம் கார் என்ஜின்கள் தயாரிக்கும் பணியினை அவரது நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் மனித சிந்தனைகளை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் மனித மூளையில் சிப் வைத்து பரிசோதனை செய்து வருகிறார். அதன் ஆரம்பகட்ட பரிசோதனை வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கி அதனை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார்.
அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாசாவிற்கு இணையாக விண்ணில் ராக்கெட்டுகள் மற்றும் சாட்டிலைட்டுகளை செலுத்தி வருகிறது. அவரது சாட்டிலைட் மூலம் உலகின் எந்த பகுதியிலும் இணையதள வசதிகளை பெற முடியும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க், டிரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு அதிக நன்கொடையும் வழங்கினார். அதற்கு பிரதிபலனாக எலான் மஸ்க்-கிற்கு டிரம்ப் ஆட்சியில் சிறப்பு திறன் துறை என்ற ஒரு துறை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்திற்கு லோகோ வடிவமைப்பு செய்த டெஸ்லா என்ஜினீயர் அலெக்ஸ் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான அனுமதி சில ஆண்டுகளில் கிடைக்கும். இதன்மூலம் மக்கள் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் நியூயார்க் நகரில் காலை 6.30 மணிக்கு பயணிகள் ஒரு கப்பலில் ஏறுகின்றனர். அந்த கப்பல் அவர்களை அழைத்து கொண்டு கடலில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு வருகிறது. பின்னர் பயணிகள் ராக்கெட்டில் ஏற்றப்பட்டு, விண்ணில் புறப்படுகின்றனர். அந்த ராக்கெட் 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து ஷாங்காய் நகரை 39 நிமிடத்தில் அடைந்து விடுகிறது.
அந்த வீடியோவில் இந்த ராக்கெட் மூலம் பயணம் செய்தால் ஒவ்வொரு நகரங்களுக்கு இடையே எவ்வளவு மணிக்குள் சென்றுவிடலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி டெல்லி-சான்பிரான்சிஸ்கோ 40 நிமிடங்கள், லண்டன்-நியூயார்க் 29 நிமிடங்கள், டோக்கியோ-டெல்லி 30 நிமிடங்கள் என பல நகரங்களுக்கான பயண நேரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
தற்போது டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடியாக செல்லும் விமானத்தின் பயண தூரம் 15 மணி நேரம் ஆகும். ஆனால் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் சென்று விட முடியும். இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் எலான் மஸ்க், "இது இப்போது சாத்தியம்" என பதில் அளித்துள்ளார்.
அவரின் எதிர்கால திட்டத்திற்கான முன்னோட்டம் தான் இந்த வீடியோ வெளியீடு என்று எக்ஸ் பக்கத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
- அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் நைஜீரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி.
- 17 ஆண்டில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
அபுஜா:
நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று அதிகாலை அபுஜா சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினரும் வரவேற்பு அளித்தனர்.
கடந்த 17 ஆண்டில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்தியா, நைஜீரியா இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடம் அவர் உரையாற்றுகிறார்.
இதைத் தொடர்ந்து, பிரேசில் செல்லும் பிரதமர் மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் 18-ம் தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார். மாநாட்டுக்கு இடையே பிரேசில் அதிபர் உள்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து, கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 19ம் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார். 20ம் தேதி அதிபர் இர்பான் அலியை சந்தித்து பேச உள்ளார். இதையடுத்து கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
- சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது.
- இந்த தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீஜிங்:
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வுக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் 21 வயது வாலிபர் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.
இந்த கோர தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றும், மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 12-ம் தேதி சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணைய கட்டடத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரஷியவுக்கு நெருக்கமான நாடாக உள்ள ஜார்ஜியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி 53.93 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளது. ஜார்ஜியா தலைநகர் திப்லிசி [Tbilisi] - இல் உள்ள மத்திய தேர்தல் ஆணைய கட்டடத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகளை அறிவிக்கப்பட இருந்த நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த டாவிட் [Davit Kirtadze] என்ற தலைவர் திடீரென அனைவர் முன்னிலையிலும் தலைமை தேர்தல் ஆணையர் ஜியோர்ஜி [Giorgi Kalandarishvili] மீது கருப்பு மையை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பெண்களிடம் கண்ணியம், அடக்கம், கற்பு மற்றும் ஹிஜாப் அணிதல் ஊக்குவிக்கப்படும்
- குறிப்பாக, இளம் வயது பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
ஈரானில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மன நல சிகிச்சை மையங்களை திரிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பிரதான இஸ்லாமிய நாடுகளுள் ஒன்றான ஈரானில் குடியரசு ஆட்சி முறை இருந்தாலும் இஸ்லாமிய சட்டங்களின் படியே ஆட்சி நடந்து வருகிறது. மதத் தலைவர் அலி ஹொசைனி கமேனி அந்நாட்டின் உயர்மட்ட தலைவராக உள்ளார்.
பொது இடத்தில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சமீப காலமாக அங்குள்ள பெண்கள் மத்தியில் இதுபோன்ற ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது. எனவே ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மன நோய் இருப்பதாக கருதப்பட்டு அவர்களின் மனநிலையை சரிசெய்ய 'மனநல சிகிச்சை மையம்' அமைக்கபட உள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய மகளிர் மற்றும் குடும்பத் துறையின் தலைவரான மெஹ்ரி தலேபி தரேஸ்தானி, ஹிஜாப்பை துறப்பவர்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சை இங்கு வழங்கப்படும். குறிப்பாக, இளம் வயது பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

பெண்களிடம் கண்ணியம், அடக்கம், கற்பு மற்றும் ஹிஜாப் அணிதலை ஊக்குவிப்பதே இந்த க்ளினிக்கின் நோக்கம் " என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது மனித உரிமை மீறல் என இந்த இந்த அறிவிப்புக்கு மனித உரிமை மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
சமீபித்தில் ஈரானில் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி ஒருவர் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளாடைகளுடன் பல்கலைக்கழகத்தில் வந்து அமர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் அந்த பெண் மனநலம் சரியில்லாதவர் என்று நிர்வாகம் தரப்பில் முத்திரை குத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது






