search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilanka parliament"

    • பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
    • நாளை இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. மேலும் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.

    இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார்.

    அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

    இதனால் கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதத்தை அனுப்பினார்.

    இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் புதிய அதிபரை 20-ந்தேதி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

    புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ஜெ.வி.பி. கட்சி தலைவர் அனுராகுமாரதிசநாயக, இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமா ஆகிய 4 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

    255 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

    பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

    ஆனால் இலங்கை மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி.எல்.பிரீஸ் அணியினர் முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனுவை 19-ந்தேதி (இன்று) வரை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இதில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    நாளை இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து அதி பரை தேர்வு செய்கிறார்கள்.

    ரணில் விக்ரமசிங்கே வுக்கு ஆளுங்கட்சி ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் டல்லஸ் அழகப்பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் டல்லஸ் பெருமாவை ஆதரிப்பதாக இன்று அறிவித்துள்ளது.

    இதனால் அங்கு நடக்கும் அதிபர் பதவி தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாக நேற்று இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். இதையடுத்து ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுவதாலும், நாளை அதிபர் தேர்வு நடப்பதாலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் அவர்களை தடுக்கவும் கலைந்து செல்லவும் விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    கலவரத் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் ரணில் விக்மரசிங்கேவுக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை பிரதமர் ராஜபக்சே அரசுக்கு எதிராக இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூர்யா தெரிவித்துள்ளார். #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

    ஆனால், அவருக்கு போதிய மெஜாரிட்டி எம்.பி.க்கள் இல்லை. எனவே பாராளுமன்றத்தையே அதிபர் சிறிசேனா  கலைப்பதாக அறிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    அதைத்தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தை சபாநாயகர் கருஜெயசூரியா கூட்டினார். அதில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த ஓட்டெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதனால் அவர் பிரதமர் பதவியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

    இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். இதனால் அரசியல் குழப்பம் உருவானது. நான்தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று ராஜபக்சே கூறினார். நேற்று மீண்டும் பாராளுமன்ற கூட்டம் நடந்த போது எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரியா மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் அதிபர் சிறிசேனாவை  நேற்று மாலை சந்தித்து பேசினார்கள். ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்களும் சென்றிருந்தனர்.

    மேலும், தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரகுமார திசநாயகே, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத்பதியூதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.



    அப்போது ஐக்கிய தேசிய கட்சி மெஜாரிட்டியை நிரூபித்து இருப்பதால் ஜனநாயக முறைப்படி ஆட்சியை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், இலங்கையில் சுமூகமாக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபரிடம் கேட்டுக் கொண்டனர்.

    ஏற்கனவே நடந்த ஓட்டெடுப்பு பாராளுமன்ற விதிகளின்படி நடத்தப்படவில்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கிறேன். எனவே புதிய ஓட்டெடுப்பை பாராளுமன்ற விதிகளை பின்பற்றி நடத்துங்கள் என்று அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார்.

    ஏற்கனவே கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபையில் கொண்டு வந்து விவாதிக்கலாம். அதில் உள்ள முதலாவது ஷரத்தை நீக்கிவிட வேண்டும். ஓட்டெடுப்பின் போது ஒவ்வொரு எம்.பி.யையும் பெயர் சொல்லி அழைத்து அவர் யாருக்கு ஆதரவு அளிக்கிறார் என்று கேட்டு பதிவு செய்து அதன்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சிறிசேனா கூறினார்.

    இந்நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரியா வரலாறு காணாத அளவில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் இன்று பாராளுமன்றத்துக்கு வந்தார். இன்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.

    நிலைமையை சமாளிக்க இயலாமல் அவை காவலர்களும், போலீசாரும் திணறினர். கடுமையான கூச்சல், குழப்பத்துக்கு இடையே பாராளுமன்றத்தை 19-ம் தேதி பிற்பகல் ஒருமணி வரை தள்ளிவைப்பதாக அறிவித்த சபாநாயகர் ஜெயசூரியா,  இன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார். #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment
    இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜபக்சே பதவி பறிப்பு தீர்மானம் செல்லாது என இன்று ரகளையில் ஈடுபட்ட அவரது ஆதரவு எம்.பி.க்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை தாக்கச் சென்றனர். #MahindaRajapaksa #Srilankaparliament
    கொழும்பு:

    இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று  ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  இதை ஏற்க மறுப்பதாக அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் அறிவித்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது.  பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

    இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து ராஜபக்சேவின் ஆதரவு உறுப்பினர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றனர்.

    அப்போது உரையாற்றிய ராஜபக்சே, நான் சிறு வயதிலிருந்தே பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். மந்திரி பதவிக்காகவோ, பிரதமர் பதவிக்காகவோ நான் சபைக்கு வரவில்லை. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என ஆவேசமாக குறிப்பிட்டார்.



    அவரது பேச்சை ஆதரவு எம்.பி.க்கள் ஆவேசத்துடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஓடிச்சென்று அவரை தாக்க முயன்றதால் பாராளுமன்றத்தில் கூச்சலும், குழப்புமும் நிலவி வருகிறது.

    இருதரப்பு எம்.பி.க்களும் ஒருவரையொருவர் திட்டியும், மிரட்டியும் கைகலப்புக்கு தயாராகி வருவதால் பாராளுமன்றம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. #MahindaRajapaksa #Srilankaparliament

    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. #SriLanka #SriLankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. பாராளுமன்றத்தில் இந்த கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ளன.


    அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் இந்த கட்சிகள் தங்கள் மனுவில் கூறியுள்ளன.  #SriLanka #SriLankaParliament
    இலங்கை அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். #SrilankaParliament #Sirisena
    கொழும்பு:

    இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. அதன் காரணமாக ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதற்கு எதிர்ப்பு கிளம்பவே மெஜாரிட்டியை நிரூபிக்க பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார். ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் பாராளுமன்றத்தை நேற்று முன்தினம் இரவு கலைத்து விட்டார்.

    ஜனவரி 5-ந்தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இது சட்டவிரோதமானது. எனவே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

    ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதிபர் சிறிசேனாவின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. அதே கருத்தைதான் அனைத்து சிலோன் மக்கள் காங்கிரசும் தெரிவித்துள்ளது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக அறிவித்துள்ளது. அதுகுறித்து அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவும், கலைக்கவும் அதிபருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் 19-வது திருத்த சட்டத்தின் ஊடாக அது நீக்கப்பட்டு விட்டது. பாராளுமன்றத்தை அதிபர் கலைப்பதாக இருந்தால் 4½ ஆண்டுகளின் பின்னரே கலைக்க முடியும்.

    அதிபர் சிறிசேனா தன்னிச்சையாகத்தான் எடுத்த முடிவு படுதோல்வி அடைய போகின்றது என்ற அச்சத்தாலே பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச சமூகத்துக்கும் இந்த உண்மை தெரியும்.

    அதிபர் சிறிசேனாவின் அண்மைய செயல்பாடுகளை பார்க்கும்போது ரனில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருக்கக்கூடாது என்பதிலும், தான் நியமித்த புதிய பிரதமர் ராஜபக்சே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் தோற்கக்கூடாது என்பதிலுமே குறியாக இருந்தார்.

    ஆனால் அவரின் திட்டம் படுதோல்வியை நோக்கி செல்கையில் அந்த அவமானத்தில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக பாராளுமன்றத்தை திடீரென கலைத்துள்ளார். அவர் தனது தன்னிச்சையான முடிவுக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வழங்கிய ஆணையை மீறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

    சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு முரணானது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடினாலும் கூட அதற்கு சாதகமான முடிவு கிடைக்காது என்று பல சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஏனெனில் இலங்கை அதிபருக்கு அனைத்து அதிகாரங்கள் உண்டு. அவரால் ஒரு பெண்ணை ஆணாகவோ, ஆணை பெண்ணாகவோ மாற்ற முடியாது. அது தவிர அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு.

    நடைமுறையில் உள்ள பாராளுமன்றத்துடன் நாட்டின் செயல்பாடுகளை நடத்த முடியாது என அவர் கருதினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். இத்தகவலை அதிபரின் சட்ட ஆலோசகர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    அத்துடன் 19-வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் எந்தவொரு இடத்திலும் அதிபருக்குரிய அதிகாரம் குறைக்கப்படவில்லை. அவ்வாறு இருக்க அதிபரின் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளார். #SrilankaParliament #Sirisena
    இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி இன்று பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார். #MahindhaRajapaksha #Rajapakshajoins
    கொழும்பு:

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சே தற்போது அக்கட்சியின் ஆலோசகராக மட்டும் இருந்து வருகிறார்.

    அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவால் சமீபத்தில் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பாராளுமன்றத்தை கலைத்து மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி இன்று பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார். அவருடன் சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 50 முன்னாள் எம்.பி.க்களும் பொதுஜன முன்னணியில் இணைந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ராஜபக்சேவின் இந்த முடிவு அதிபர் மைத்ரிபாலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது. #MahindhaRajapaksha #Rajapakshajoins 
    இலங்கை பாராளுமன்றம் கலைப்பு ஜனநாயக படுகொலை மட்டுமல்ல, அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #SriLankaParliament #Sirisena #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்” என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், அந்த அரசியல் சட்டத்தினைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, பாராளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது.

    மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.



    கடந்த அக்டோபர் 26-ந்தேதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மாற்றி, வருகின்ற 14-ந்தேதி புதிய பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல, அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல். தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ “அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்” என்று ஒதுக்கி வைத்து விட முடியாது என்றாலும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு துவக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கிறது.

    முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளை அடியோடு நசுக்குவதிலும், இனப்படுகொலை- மனித உரிமை மீறல்கள்- சர்வதேச நெறிகளுக்கு எதிரான போர்க்குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதிலும், தனது ஆட்சிக் காலம் முழுவதும் கங்கணம் கட்டிக் கொண்டு “ஹிட்லர்” போல் செயல்பட்ட ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்ட போது மத்திய அரசு அமைதி காத்தது.

    ஈழத்தமிழர்கள் கண்ணியமாகவும், சுய மரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ “இந்திய-இலங்கை” ஒப்பந்தப்படி கொண்டு வரப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டத்தின் “13 ஆவது திருத்தத்தையும்” தாண்டி அதிக அதிகாரங்களை ஈழத்தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை எள்ளி நகையாடிய ராஜபக்சேவும் அதிபர் சிறிசேனா வும் கைகோர்த்து கூட்டணி அமைத்து ஜனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை, 14 நாட்களுக்கு மேல் வேடிக்கை பார்த்தது மத்திய பா.ஜ.க. அரசு.

    ஈழத் தமிழர்களுக்கு எதிராக “பலாத்காரத்தையும்” “படுகொலையையும்” கட்டவிழ்த்து விட்டு, இந்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போர் மோசடிகளுக்காக, சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற வாளியாக நிறுத்தப்பட்டு கடுந்தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ராஜபக்சே, திட்டமிட்டு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை செயற்கையாக உருவாக்கியதையும் கண்டு கொள்ளாமல் மத்திய பா.ஜ.க. அரசு கண் மூடிக் கொண்டிருந்தது. மத்திய அரசின் மவுனம் இன்றைக்கு இலங்கை பாராளுமன்றக் கலைப்பில் முடிந்து விட்டது.

    தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை பணிகளும் தடைபட்டு விட்டது. அது மட்டுமின்றி தமிழர்கள் மீது திடீர் தேர்தலை, சிறிசேனா-ராஜபக்சே சூழ்ச்சிக் கூட்டணி திணித்திருப்பதற்குக் காரணமாக அமைந்து விட்டது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய அநியாயத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கண்டும் காணாமலும் தட்டிக் கேட்காமலும் இருந்ததையும், தங்களின் உயிருக்கும், உரிமைகளுக்கும் ஆபத்து உருவாகிய நேரத்தில் கூட இந்திய அரசு இப்படி இனம் புரியாத மவுனம் காத்ததையும் பார்த்து ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும்- ஏன் உலகத் தமிழர்களும் இன்றைக்கு அதிர்ச்சியுடன் உறைந்து போயிருக்கிறார்கள்.

    ஆகவே, விபரீத சூழல் இலங்கையில் உருவாகி, அரசியல் நெருக்கடியும், ஸ்திரத்தன்மையும் ஆபத்திற்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தாமதமாகவேனும் உணர வேண்டும் என்றும், இலங்கையில் பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு, இந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #SriLankaParliament #Sirisena #MKStalin
    இலங்கையில் பாராளுமன்றத்தை கலைத்திருப்பது அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka
    வாஷிங்டன்:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது.



    இதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, நேற்று இரவு திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இலங்கையில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலக டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று வெளியாகும் செய்திகளால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும். இலங்கையின் மிகச்சிறந்த கூட்டாளி நாடு என்ற அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு ஜனநாயக அமைப்புகள் மதிக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது. உங்களுடைய (சிறிசேனா) சமீபத்திய நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், உங்கள் நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும் சமீப வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகளை தடம் புரளச்செய்யும் வகையிலும் அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளிவிவகாரக் குழு, இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka
    இலங்கையில் நடைபெற்று வரும் குழப்பதிற்கிடையில் பாராளுமன்ற முடக்கம் உத்தரவை தளர்த்தினார் அதிபர் சிறிசேனா. #SriLankanParliament #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் அதிபராக சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரமங்சிங்கேவும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் இலங்கை அரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

    நான்தான் இன்னும் இலங்கையின் பிரதமர் என்று கூறிய ரணில், விரைவில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கும்படி உத்தரவிட்டார். இது சபாநாயருக்கு அதிருப்தியை ஏற்பட்டது.

    கோப்புப்படம்

    பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்திய சபாநாயகர் இதுகுறித்து அதிபர் சிறிசேனாவிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்க உத்தரவிட்டதை இன்று தளர்த்தினார்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலையில் வருகிற 5-ந்தேதி இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது. #SriLankanParliament #Sirisena 
    உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. #SrilankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் ‘தனிஈழம்’ கேட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்துடன் போராடியது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது.

    உள்நாட்டு போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். அங்கு நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சே ஆட்சி வீழ்ச்சியடைந்தது. கடந்த 2015-ம் ஆண்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது.

    அதன்பிறகும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. அதைத்தொடர்ந்து உள்நாட்டு போரின்போது 1 லட்சம் பேர் மாயமாகி விட்டதாக கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு அறிவித்தது.

    இந்நிலையில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வகை செய்யும் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்தது. அந்த சட்ட வரையறை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இது விவாதத்துக்கு வந்த நிலையில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எதிராக 43 வாக்குகள் கிடைத்தன. அதன்மூலம் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட 1 லட்சம் தமிழர்கள் பலனடைகின்றனர்.

    இந்த சட்டத்துக்கு எதிராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் ஓட்டு போட்டனர். அதன் மூலம் ராணுவ நடவடிக்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் போராளிகள் பலனடைவார்கள் என குற்றம் சாட்டினர்.

    இந்த சட்டம் குறித்து பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கூறும்போது, ‘‘நாங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளோம். உள்நாட்டு போரின்போது வடக்கு பகுதி மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. தெற்கு பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களும் திரட்டப்படும்’’ என்றார். #SrilankaParliament
    ×