என் மலர்tooltip icon

    உலகம்

    • தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகிறது.
    • தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.

    பையன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தொழில்நுடபத்துறையில் வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்து வருகின்றனர். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் பலர் இதில் அடங்குவர்.

    இந்நிலையில் வெளிநாட்டு தொழிநுட்ப ஊழியர்கள் அமெரிக்க ஊழியர்களின் வேலை வாய்ப்பை பரிக்கிறார்களா என்றும் அமெரிக்காவின் வேலை சந்தையில் வெளிவந்தவர்களின் தாக்கம் குறித்தும் Replit நிறுவனத்தின் CEO அம்ஜத் மசாத் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

    தொழில்நுட்பத் துறையில் தகுதிவாய்ந்த அமெரிக்கர்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

     வெளிநாட்டினர் அனைத்தையும் எடுத்துக்கொண்டதால், தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகி வருகிறதா என்று மசாத் தனது பதிவில் சந்தேகம் தெரிவித்தார். இது உண்மை என்றால் ஆச்சர்யம் தான், ஏனெனில் தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், சிறந்த பொறியியல் திறமைகளுக்கு இங்கு நிரந்தர பற்றாக்குறை உள்ளது. இது சிலிக்கான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடிப்படை காரணியாகும் என்று பதில் அளித்துள்ளார்.

    சிலிகான் பள்ளத்தாக்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கும் பிரதான இடமாகும். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய மஸ்க்கின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க அதிபராகும் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் மஸ்க் முக்கிய பங்காற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பினர்.
    • டிசம்பர் 14 ஆம் தேதி தற்காலிக அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

    பட்ஜெட் மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

    மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உள்ளிட்டவை பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். முதல் தீர்மானம் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தோல்வி அடைந்தது.

     

    ஆனால் மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பினர். எனவே இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீது கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. எனவே யூன் பதவிநீக்க தீர்மானம் வெற்றி பெற்றது.

    தென் கொரிய சட்டப்படி, இந்த வெற்றி பெற்ற தீர்மானம் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், பதவி நீக்கம் முற்றிலுமாக செயல்பாட்டுக்கு வர பல வாரங்கள் ஆகும். எனவே அதுவரை, டிசம்பர் 14 ஆம் தேதி இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் திடீர் அவசர நிலை பிரகடனத்தில் ஹான் டக்-சூ -க்கும் முக்கிய பங்கு இருப்பதாக கூறி அவரையும் பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    தற்காலிக அதிபர் ஹான் டக்-சூ பதவிநீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக 300 இல் 192 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதால் தீர்மானம் வெற்றி பெற்றது.

    இதனை கண்டித்து சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முந்தைய அதிபர் குறித்த பதவிநீக்கம் குறித்து முடிவெடுக்க அரசியலமைப்பு நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 6 நீதிபதிகளே உள்ள நிலையில் புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்க ஹான் மறுத்துள்ளார்.

    இதனால் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த பதவிநீக்கத்தில் வந்து முடிந்துள்ளது. மேலும் அவசர நிலை குறித்த குற்ற விசாரணையில் முந்தைய அதிபரோடு ஹான் மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

     

    ஹானின் பதவி நீக்கத்திற்குப் பிறகு, தென் கொரிய சட்டத்தின்படி, நிதியமைச்சர் சோய் சாங்-மோக், செயல் அதிபராகப் பதவியேற்க உள்ளார். 

    • 3 ஆண்டுகளுக்கு முன்பு உதித்த யோசனையின் காரணமாக தனது உயரத்தையே சாதகமாக மாற்ற முடிவு செய்தார்.
    • வீடியோக்களுக்கு அமோக வரவேற்பு இருந்தது.

    பெண்கள் சராசரி உயரத்தைவிட அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஒரு பிரச்சனையாகவே கருதுவார்கள். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 36 வயதான டோனா ரிச் என்ற பெண்ணுக்கு அவரது உயரமே ஒரு பிரச்சனையாக இருந்தது. 6 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட அவர் ஆரம்பத்தில் தனது அதிகமான உயரத்தை வெறுத்தார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு உதித்த யோசனையின் காரணமாக தனது உயரத்தையே சாதகமாக மாற்ற முடிவு செய்தார்.

    அதன்படி டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உயரம் தொடர்பாகவும், ஆண்களை ஈர்க்கும் வகையிலும் சில வீடியோக்களை வெளியிட்டார். அவரது இந்த வீடியோக்களுக்கு அமோக வரவேற்பு இருந்தது. இதனால் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து ஏராளமான வீடியோக்கள் பதிவிட்டு வருமானம் ஈட்ட தொடங்கினார்.

    இதன்மூலம் ரூ. 6 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ள அவர் கூறுகையில், ஒரு காலத்தில் எனது உயரம் பாதுகாப்பின்மைக்கான ஆதாரமாக இருந்தது. இப்போது எனது வெற்றியின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது என்றார். அவர் ஹீல்ஸ் அணியும் போது அவரது உயரம் 6 அடி 8 அங்குலமாக அதிகரிக்கிறது. இது அவரது கவர்ச்சியை மேலும் அதிகரிக்க செய்வதாக பயனர்கள் பலரும் பதிவிட்டுள்ளனர்.



    • உடல் நலம் குன்றிய நிலையில் சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரது மைத்துனர் ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி. இவர் ஜமாத்-உத்-தவா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக இருந்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஜமாத்-உத்-தவா தெரிவித்துள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு நிதிமன்றம் ஹபீஸ் அப்துல் ரகுமான் மக்கிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. அப்துல் ரகுமான் மக்கி பாகிஸ்தான் சித்தாந்தத்திற்கு ஆதரவாளர் என பாகிஸ்தான் முதாஹிதா முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

    ஐ.நா. 2023-ம் அவரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது. சொத்துகள் முடக்கம், பயணத் தடை ஆகிய தடைகளுக்கு உள்ளானார்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
    • முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இங்கிலாந்து மில்டன் கெய்ன்ஸ் பிளெட்ச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புகுந்த 49 வயது மதிக்கத்தக்கவர் திடீரென கத்திக்குத்தில் ஈடுபட்டார். அந்த பகுதியில் வசித்து வந்த 38 வயது மற்றும் 24 வயதுடைய பெண்களை அவர் கத்தியால் குத்திக்கொன்றார். மேலும் சிலரையும் வெறித்தனமாக கத்தியால் குத்தினார்.

    இதில் 20 வயது வாலிபர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் ஏன் 2 பெண்களை குத்திக்கொன்றார் என தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
    • காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது மத்திய காசாவில் அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனை மீது இஸ்ரேல் காசாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

    மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் நியூஸ் நெட்வொர்க்கில் [Quds News] பணியாற்றிய பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடாத்தியுள்ளது.

     

    இதனால் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 130க்கும் மேற்பட்ட பாலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது. 

     

    • விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன.
    • சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும், பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது.

    ஏமனில் உள்ள தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று [வியாழக்கிழமை] இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

    பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலை கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் செங்கடலில் வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் கப்பல்களையும் சிறை பிடித்து வருகின்றனர். எனவே அமெரிக்கா உதவியுடன் ஹவுதிகள் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஐநா ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், ஏமனில் சுகாதர மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும் ஐநா இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் தலைமையிலான குழு ஏமன் சென்றது.பணிகளை முடித்து நேற்று சனாவில் இவர்கள் விமானம் ஏற இருந்தபோது அங்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

    எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் இதில் காயமடைந்தார். மேலும் விமான நிலையத்தில் 2 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன. நாங்கள் இருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இடமும் சேதமடைந்தது.

    நானும் என்னுடன் இருந்த ஐநா மற்றும் உலக சுகாதர அமைப்பு அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம். நாங்கள் புறப்படுவதற்கு முன் விமான நிலையத்தின் சேதம் சரிசெய்யப்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும்.

    தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்கள் என்று டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஹூதிகள் பயன்படுத்திய உள்கட்டமைப்பு மற்றும் ஹொடைடா, அல்-சலிஃப் மற்றும் ராஸ் காண்டிப் துறைமுகங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. டெட்ரோஸின் அறிக்கை பற்றிய கேள்விகளுக்கு இஸ்ரேல் பதிலளிக்கவில்லை.

    ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டார். ஐநா பொதுச்செயலாளர் தங்கள் நாட்டுக்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த விமானத்தில் 62 பயணிகள், ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர்.
    • கிரோஸ்னி மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது

    அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் எம்ப்ரேயர் 190 விமானம் நேற்று முன் தினம் பாகுவில் இருந்து ரஷியாவின் குரோஸ்னி என்ற இடத்திற்கு சென்றபோது அடர் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் திருப்பிடிவப்பட்டு கடைசியாக கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையத்துக்கு திசை மாற்றி விடப்பட்டது. அதன்படி அக்டாவ் விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

    இந்த விமானத்தில் 62 பயணிகள், ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர். இதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் உயிர் பிழைத்தனர். இதில் இரண்டு சிறுமிகள் ஆவார்கள்.

    விமானம் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அல்லது நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணை ஆகிவயற்றில் ஏதாவது ஒன்று தவறுதலாக தாக்கி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என உலகின் பல்வேறு மீடியாக்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.

    இதற்கு முக்கிய காரணம் விமானத்தின் வாள் பகுதியில் ஏவுகணை பகுதிகளில் தாக்கியதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    உக்ரைன் தற்போது ரஷியா மீது டிரோன் தாக்கல் நடத்தி வருகிறது. கிரோஸ்னி மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் டிரோன் ஆக இருக்கலாம் என ரஷியாவின் ஏர் பாதுகாப்பு நிலையம் தகவல் தெரிவித்து அதன்மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கிரோஸ்னி விமான நிலையத்தில் தரையிறக்க விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட பிறகு சிறிது நேரத்தில் வெளியே மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக உயிர்பிழைத்தவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் அஜர்பைஜானி மற்றும் அமெரிக்க அதிகாரிகள், ரஷ்யாவின் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணையால் தான் விபத்து ஏற்பட்டதாக ஜெட் நம்புகின்றனர்.

    அரசு சார்பு அஜர்பைஜான் இணையதளமான காலிபர், Pantsir-S வான் பாதுகாப்பு அமைப்பில் இருந்து ஏவப்பட்ட ரஷ்ய ஏவுகணை விமானத்தை வீழ்த்தியதாக அஜர்பைஜானி அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி உள்ளது. இதே கூற்றை நியூயார்க் டைம்ஸ், யூரோநியூஸ் மற்றும் துருக்கிய செய்தி நிறுவனமான அனடோலுவும் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் விபத்து தொடர்பான கட்டுக்கதைகளை உருவாக்க வேண்டாம் என ரஷியா எச்சரித்துள்ளது. கிரெம்ளின் [ரஷிய அதிபர் மாளிகை] செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணையின் முடிவுகள் வருவதற்கு முன் யூகங்களை உருவாக்குவது தவறானது.

    நாங்கள் நிச்சயமாக இதைச் செய்ய மாட்டோம், யாரும் இதைச் செய்யக்கூடாது. விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

     

    டிமிட்ரி பெஸ்கோவ்

    இதற்கிடையே கஜகஸ்தான் துணைப் பிரதமர் கனாட் போசும்பாயேவ், விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

    விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆடியோ கேட்கப்பட்ட பின்னர்தான் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும்.

    • வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 25 பேருக்கு கடந்த வாரம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • மேலும் 60 குற்றவாளிகளுக்கு நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி இம்ரான்கான் ஆதரவாளர்கள், அவரை கைது செய்ததற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் ராணுவ வாகனங்கள், ராணுவ கமாண்டர் ஒருவரின் வீடு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.இது தொடர்பான விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 25 பேருக்கு கடந்த வாரம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மேலும் 60 குற்றவாளிகளுக்கு நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அவர்கள் 2 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றனர். இதில் இம்ரான்கானின் மருமகன் ஹாசன் கான் நியாசி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். ராணுவ கமாண்டரின் வீட்டை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பனி மலை ஒன்றிற்கு அவர் சூனியக்காரிபோல வேடமணிந்து சென்றார்.
    • வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    பிரபல கார்ட்டூன் தொடர்கள், ஹாலிவுட் படங்களில் சூனியக்காரிகளாக வருபவர்கள் மந்திர சக்திகளை கொண்டு நீண்ட துடைப்பத்தில் வானில் பறப்பதுபோலான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதை பார்ப்பவர்களுக்கு நாமும் இதேபோல வானில் பறந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும். இதனை இளம்பெண் ஒருவர் சாத்தியப்படுத்தி உள்ளார்.

    சீனாவை சேர்ந்தவர் வான்டி வாங். வானில் பறந்து சாகசத்தில் ஈடுபடும் 'பாரா கிளைடிங்'கில் தேர்ச்சி பெற்றவராக விளங்குகிறார். சாகசத்தில் ஈடுபடுவது தொடர்பான வீடியோக்களை வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமாகவும் உள்ளார்.

    இந்தநிலையில் பனி மலை ஒன்றிற்கு அவர் சூனியக்காரிபோல வேடமணிந்து சென்றார். பின்னர் தன்னுடைய உடலில் பாராசூட் ஒன்றை பொருந்தி கொண்டு துடைப்பத்தில் ஏறி வானில் பறக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.



    • திருமணத்திற்கு முன்பாக அங்கு லேசர் ஒளிவிளக்குகளை கொண்டு குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.
    • மணமகளின் வாழ்க்கையில் நடந்த கடந்தகால நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்தவர் சுரபி. இந்திய வம்சாவளி இளம்பெண்ணான இவருக்கு லண்டனை சேர்ந்த ரிஷப் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமண மண்டபத்தில் மணமக்கள் குடும்பத்தினர் பலர் திரண்டு இருந்தனர். திருமணத்திற்கு முன்பாக அங்கு லேசர் ஒளிவிளக்குகளை கொண்டு குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.

    அதில் சிறுமி ஒருவரின் வாழ்க்கை காட்சிகள் இடம் பெற்றன. அதில் அவளது தந்தையுடனான பாசத்திற்குரிய தருணங்கள், பள்ளி-கல்லூரி வாழ்க்கை, எதிர்கால கணவரை சந்தித்து காதல் வயப்படுவது என மணமகளின் வாழ்க்கையில் நடந்த கடந்தகால நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    ரம்மியமான இசையொலியில் திரையிடப்பட்ட அந்த வீடியோவின் இறுதியில் திரைச்சீலை மறைவில் இருந்து மணமகள் ஆரவாரத்துடன் வெளிப்பட்டு மணமகனை திருமணம் செய்து கொள்கிறார். இந்த வீடியோ காட்சி வலைத்தளத்தில் வெளியாகி 13 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.




    • பேபி டிரைவர் திரைப்படத்தில் யங் பேபியாக நடித்தவர் ஹட்சன் மீக்.
    • அவரது மரணம் குறித்து வெஸ்டாவியா ஹில்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    பேபி டிரைவர் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்தது. அதில் யங் பேபியாக நடித்தவர் ஹட்சன் மீக். அதன்பின், அவரது நடிப்பு வாழ்க்கை முன்னேறியது.

    இந்நிலையில், ஹட்சன் மீக் அலபாமாவின் வெஸ்டாவியா ஹில்ஸ் பகுதியில் வண்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய ஹட்சன் மீக் வண்டியில் இருந்து விழுந்தார்.

    சாலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்த மீக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஹட்சன் மீக் மரணம் குறித்து வெஸ்டாவியா ஹில்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை விபத்தில் 16 வயது நடிகர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×