என் மலர்tooltip icon

    உலகம்

    இடைக்கால அதிபரையும் பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றம் ஒப்புதல் - தென் கொரியாவில் மீண்டும் குழப்பம்
    X

    இடைக்கால அதிபரையும் பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றம் ஒப்புதல் - தென் கொரியாவில் மீண்டும் குழப்பம்

    • மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பினர்.
    • டிசம்பர் 14 ஆம் தேதி தற்காலிக அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

    பட்ஜெட் மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

    மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உள்ளிட்டவை பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். முதல் தீர்மானம் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தோல்வி அடைந்தது.

    ஆனால் மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பினர். எனவே இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீது கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. எனவே யூன் பதவிநீக்க தீர்மானம் வெற்றி பெற்றது.

    தென் கொரிய சட்டப்படி, இந்த வெற்றி பெற்ற தீர்மானம் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், பதவி நீக்கம் முற்றிலுமாக செயல்பாட்டுக்கு வர பல வாரங்கள் ஆகும். எனவே அதுவரை, டிசம்பர் 14 ஆம் தேதி இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் திடீர் அவசர நிலை பிரகடனத்தில் ஹான் டக்-சூ -க்கும் முக்கிய பங்கு இருப்பதாக கூறி அவரையும் பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    தற்காலிக அதிபர் ஹான் டக்-சூ பதவிநீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக 300 இல் 192 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதால் தீர்மானம் வெற்றி பெற்றது.

    இதனை கண்டித்து சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முந்தைய அதிபர் குறித்த பதவிநீக்கம் குறித்து முடிவெடுக்க அரசியலமைப்பு நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 6 நீதிபதிகளே உள்ள நிலையில் புதிதாக 3 நீதிபதிகளை நியமிக்க ஹான் மறுத்துள்ளார்.

    இதனால் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த பதவிநீக்கத்தில் வந்து முடிந்துள்ளது. மேலும் அவசர நிலை குறித்த குற்ற விசாரணையில் முந்தைய அதிபரோடு ஹான் மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    ஹானின் பதவி நீக்கத்திற்குப் பிறகு, தென் கொரிய சட்டத்தின்படி, நிதியமைச்சர் சோய் சாங்-மோக், செயல் அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

    Next Story
    ×