search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேவல் ஆண்டை ஆடிப்பாடி வரவேற்ற சீன மக்கள்
    X

    சேவல் ஆண்டை ஆடிப்பாடி வரவேற்ற சீன மக்கள்

    இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. சேவல் ஆண்டாக பிறந்துள்ள இந்த புத்தாண்டை கோடிக்கணக்கான மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
    பீஜிங்:

    இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. சேவல் ஆண்டாக பிறந்துள்ள இந்த புத்தாண்டை கோடிக்கணக்கான மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    சுமார் 135 மக்கள் வாழும் உலகின் அதிகளவில் மக்கள்தொகை கொண்ட பெரிய நாடான சீனாவில் 12 ராசிகளின் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலி, குரங்கு, ஆடு, குதிரை என புத்தாண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. அவ்வகையில், இன்று பிறந்த 2017-ம் புத்தாண்டை சீன மக்கள் சேவல் ஆண்டாக கொண்டாடி வருகின்றனர்.



    அறுவடை காலம் முடிந்து இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் சீன மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதால் ஒருவாரத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவது இங்கு வழக்கமாக உள்ளது.



    இந்த விடுமுறையை பயன்படுத்தி, உற்றார், உறவினர்கள், நண்பர்களை சந்திக்க வெளியூர்களுக்கு சென்றும், பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களை பார்வையிட்டும் சீன மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.



    அவ்வகையில் இன்று பிறந்த சேவல் ஆண்டையொட்டி, நண்பர்கள், உறவினர்களுக்கு தடபுடலான விருந்து அளித்தும், ஆடல், பாடல் என மகிழ்ச்சியுடனும் மக்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.



    தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பகுதிகளில் உள்ள கடை வீதிகள் மின் அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. வாழ்த்து அட்டைகள், இனிப்பு வகைகள், மது மற்றும் பட்டாசு விற்பனை அமோக நடைபெற்று வருகிறது.

    சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான ‘வீய்போ’ மூலமாகவும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கின்றனர். புத்தாண்டையொட்டி, புத்தாடைகளுடன் எடுத்துகொண்ட ‘செல்பி’ புகைப்படங்கள் அதிகமாக பதிவிடப்படுகின்றன.

    “சுறுசுறுப்பான உழைப்பாளிகளான சீன மக்களுக்கு இந்த புத்தாண்டு எல்லா வளங்களையும் சேர்க்கட்டும்” என்ற பிரார்த்தனையுடன் நாமும் அவர்களை வாழ்த்துவோமாக!
    Next Story
    ×