search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் தீவிரவாத வழக்குகளுக்கான ராணுவ நீதி மன்றங்கள் இன்று முதல் மூடப்படுகிறது
    X

    பாகிஸ்தானில் தீவிரவாத வழக்குகளுக்கான ராணுவ நீதி மன்றங்கள் இன்று முதல் மூடப்படுகிறது

    பாகிஸ்தானில் தீவிரவாத வழக்குகளை விசாரிப்பதற்கென்று அவசர சட்டம் மூலம் திறக்கப்பட்ட ராணுவ நீதி மன்றங்கள் இன்றிலிருந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி முடிந்து, ஜனநாயகரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னர் அந்நாட்டில் தூக்கு தண்டனை முறை ஒழிக்கப்பட்டு, ராணுவ நீதிமன்றங்களும் கலைக்கப்பட்டன.

    இந்நிலையில், கடந்த 16-12-2004 அன்று பெஷாவர் நகரில் உள்ள பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 150 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், நாட்டில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்குவதற்கு வசதியாக மீண்டும் ராணுவ நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன.

    பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்ட தூக்கு தண்டனையும் நடைமுறைப்படுத்த, 21-வது அரசியலமைப்பு சட்டதிருத்தத்தின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இரண்டு ஆண்டுகளுக்குள் தீவிரவாத வழக்குகள் அனைத்தையும் விரைந்து விசாரித்து, தண்டனை அளிப்பதற்காக திறக்கப்படும் ராணுவ நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்தது. தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுவர்களை இதர நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தாமல் 90 நாட்கள்வரை விசாரணை காவலில் வைத்திருக்கவும் இந்த சட்ட திருத்தம் அனுமதி அளித்திருந்தது.

    இதுவரை, 275 தீவிரவாத வழக்குகளை விசாரித்துள்ள ராணுவ நீதிமன்றம், 161 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையும், 116 பேருக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட சிறை தண்டனைகளை விதித்துள்ளது.

    முதல் தூக்கு தண்டனை கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், கடைசி தூக்கு தண்டனை கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் விதிக்கப்பட்டது.

    மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அல்-கொய்தா, தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான், ஜமாத்துல் அஹ்ரார், லச்கர் இ ஜாங்வி, லஷ்கர் இ இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 12 பேருக்கு இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராணுவ நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பாக அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் விதிக்கப்பட்டிருந்த இரண்டாண்டு காலக்கெடு முடிவடைந்ததால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் இயங்கிவந்த ராணுவ நீதிமன்றங்கள் இன்றுடன் மூடப்படும் என பாகிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

    அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் இரண்டாண்டுகளில் இந்த நடைமுறை முடிவுக்கு வரும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் ராணுவ நீதிமன்றங்களை மூடுவது தொடர்பாக அரசின் சார்பில் தனி அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.

    Next Story
    ×