search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஸ்ட்ரோ மரணத்தால் கியூபா-அமெரிக்க உறவில் பாதிப்பா?
    X

    காஸ்ட்ரோ மரணத்தால் கியூபா-அமெரிக்க உறவில் பாதிப்பா?

    பிடல் காஸ்ட்ரோ மரணத்தால் கியூபா உடனான உறவை பலப்படுத்துவதில் அமெரிக்காவின் முயற்சிக்கு பாதிப்பு இருக்காது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், பிடல் காஸ்ட்ரோ மரணத்தால் கியூபா உடனான உறவை பலப்படுத்துவதில் அமெரிக்காவின் முயற்சிக்கு பாதிப்பு இருக்காது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, அமெரிக்கா கியூபா இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக பகை இருந்து வந்தது. பனிப் போர் காலத்தில் அது மிகவும் தீவிரமாக இருந்தது. கியூபா ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டது. அமெரிக்காவின் காலடியில் இருக்கும் சிறிய தீவான கியூபா அந்நாட்டிற்கு சிம்மசொப்பமான திகழ்ந்தது.

    இதனால் அப்போது அதிபராக இருந்த காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. ஒருமுறை இரண்டு முறை அல்ல மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது.

    பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா சதி திட்டம் தீட்டியதை பிரிடிஷ் ஊடகமான Channel 4 ஆவணப்படமாக வெளியிட்டது. அந்த ஆவணப்படத்திற்கு “பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்” என்ற தலைப்பையே வைத்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்ற பிறகு இரு நாடுகள் இடையிலான உறவில் மாற்றங்கள் ஏற்பட்டது. சிறிது முன்னேற்றமும் ஏற்பட்டது.

    இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், இருநாடுகளிடையேயான உறவு கேள்விக் குறியாகி உள்ளது என்று கருதப்படுகிறது.
    Next Story
    ×