search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ருவாண்டா மாநாட்டில் ஹைட்ரோபுளூரோ கார்பன்களை ஒழித்துக்கட்ட 197 நாடுகள் உடன்படிக்கை
    X

    ருவாண்டா மாநாட்டில் ஹைட்ரோபுளூரோ கார்பன்களை ஒழித்துக்கட்ட 197 நாடுகள் உடன்படிக்கை

    உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான சி.எப்.சி. என்னும் ஹைட்ரோ புளூரோகார்பன்களை ஒழித்துக்கட்டுவதற்கு 197 நாடுகள் பங்கேற்ற ருவாண்டா மாநாட்டில் உடன்பாடு கையெழுத்தானது.
    கிகாலி:

    உலக வெப்பமயமாதல் என்ற பிரச்சினை, பயங்கரவாதம் போன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை ஆகும். வெப்ப மயமாதலுக்கு அடிப்படை காரணம் என அறியப்படுகிற 'கிரீன் ஹவுஸ் கியாஸ்' என்னும் பசுமை குடில் வாயுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம், நியூயார்க் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. இதில் பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை என்ற பெயரில் ஒரு உடன்படிக்கை உருவானது. இதில், உலகளவில் 56 சதவீதத்துக்கும் அதிகமான பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்துக்கு காரணமான 72 நாடுகள் உள்பட பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டன.

    கையெழுத்திட்ட நாடுகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நாடுகள், இதை முறைப்படி ஏற்று, அது தொடர்பான ஆவணங்களை ஐ.நா. சபையிடம் அளித்து விட்டன. இதன்காரணமாக பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை அடுத்த மாதம் 4-ந் தேதி அமலுக்கு வர உள்ளது.

    இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் உள்ள கிகாலி நகரில் பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை என்ற கனவை நனவாக்குகிற விதத்தில், 197 நாடுகள் கலந்து கொண்ட பருவநிலை மாற்ற மாநாடு நடந்து வந்தது. இந்த மாநாடு நேற்று முடிந்தது. இந்த மாநாட்டில், உலக வெப்பமயமாதலுக்கு பெரும் பங்களிப்பை செய்கிற சி.எப்.சி. என்னும் ஹைட்ரோபுளூரோகார்பன்களை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    நேற்றுமுன்தினம் இரவு விடிய, விடிய நடந்த நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

    இந்த ஹைட்ரோபுளூரோ கார்பன்கள்தான், நாம் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிற குளிர்பதனப்பெட்டிகள் (பிரிஜ்), குளிர்சாதனப்பெட்டி (ஏ.சி.) ஆகியவை செயல்படுவதற்கு மிக முக்கியமான அடிப்படை ஆகும்.

    கார்பன்டை ஆக்சைடை விட இந்த  ஹைட்ரோபுளூரோகார்பன்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். உடன்படிக்கையின்படி, சுற்றுச்சூழலை பாதிக்காத மாற்றுப்பொருட்களை அறிமுகம் செய்துவிட்டு, இந்த ஹட்ரோபுளூரோகார்பன்கள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு விடும்.

    இந்த உடன்படிக்கையின்படி, ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் அடுத்த சில ஆண்டுகளில்  ஹைட்ரோபுளூரோகார்பன்களை கட்டுப்படுத்த தொடங்கி விடும். 2019-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10 சதவீதம் கட்டுப்படுத்தி விடும்.

    சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகள், தீவு நாடுகள் 2024-ம் ஆண்டு முதல் இந்த  ஹைட்ரோபுளூரோகார்பன்களை கட்டுப்படுத்த தொடங்கும்.

    பிற வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக், வளைகுடா நாடுகள் 2028-ம் ஆண்டு வரை இந்த ஹைட்ரோபுளூரோகார்பன்களை கட்டுப்படுத்தாமல் இருக்கலாம்.

    உலகிலேயே அதிகளவில் ஹைட்ரோபுளூரோகார்பன்களை உற்பத்தி செய்கிற சீனா மட்டும் 2029-ம் ஆண்டு வரை கட்டுப்படுத்தாது.

    இந்தியாவை பொறுத்தமட்டில் 2032-ம் ஆண்டுதான் 10 சதவீத  ஹைட்ரோபுளூரோகார்பன்கள் பயன்பாட்டை குறைக்கும்.

    இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி முக்கிய பங்கு ஆற்றினார். உடன்பாடு எட்டப்பட்டது குறித்து அவர் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், 'இந்த உடன்பாடு, பூமிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. இது நினைவில் நிறுத்தத்தக்க முன்னோக்கிய நடவடிக்கை' என குறிப்பிட்டார்.
    Next Story
    ×