search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹுகோ சாவேஸ்
    X
    ஹுகோ சாவேஸ்

    ஹுகோ சாவேஸ் நினைவு பரிசை அறிவித்தது, வெனிசுலா: முதல் விருதை ரஷிய அதிபர் புதின் பெறுகிறார்

    அமெரிக்காவின் நாட்டாண்மை மனப்போக்கை எதிர்த்து வெளிப்படையாக போர்க்குரல் எழுப்பிய வெனிசுலா நாட்டின் முன்னாள் அதிபர் ஹுகோ சாவேஸ் நினைவு பரிசு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்துள்ளார். இந்த விருது முதல்முறையாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    கராக்கஸ்:

    1997-ல் 5-வது குடியரசுக் கட்சியைத் துவக்கிய ஹுகோ சாவேஸ், வெனிசுலா மக்களை வாட்டி வதைக்கும் உலகமயக் கொள்கைக்கு மாற்றாக, சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதே தமது கட்சியின் லட்சியம் எனப் பிரகடனம் செய்தார். 1998-ல் நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பெற்று வெனிசுலாவின் அதிபரானார். அதிபரானதும் இராணுவத்திலுள்ள ஊழல் செய்த அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கினார்.

    சாவேஸ் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் மக்களுக்கு விரோதமாக செயல்படு‍ம் ஜனாதிபதியை மக்களே திரும்ப அழைக்கும் உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கையெழுத்திட்ட மனு தேர்தல் ஆணையத்திடம் அனுப்பினால் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது. இந்த பிரிவை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சிகள் 2004-ம் ஆண்டில் இதனையே பயன்படுத்தி சாவேசை அகற்ற வாக்காளர் பட்டியலில் செத்தவர்கள் கையெழுத்தையும் சேர்த்து மனுவாக அனுப்பினர். அந்த மனுவை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை சாவேஸ் சந்தித்தார்.

    மக்களுக்கு வாக்களித்தவாறே புதிய அரசியல் சட்டத்தினை உருவாக்கி நாட்டின் பெயரை “பொலிவாரிய சோசலிசக் குடியரசு” என பெயரை மாற்றினார். பெண்களுக்கும் பூர்வீகக் குடிமக்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சாவேஸ் எண்ணெய் வளத்தின் பலனை மக்களுக்கு அளிக்க முடிவு செய்தார். வெனிசுலாவில் அபரிமிதமான எண்ணெய் வளம் எப்போதும் இருந்தது. ஆனால், சாவேஸ்தான் உரிய முறையில் அதைப் பயன்படுத்தினார். அதுவரை, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை ஒரு சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தினார்.

    முற்போக்கான வரித் திட்டத்தினை உருவாக்கி பணக்காரர்களும், நிறுவனங்களும் உரிய வரியை செலுத்தச் செய்தார். இதனால் அவர்கள் சாவேசை வெறுத்தனர். அதிகரித்த வருவாயில், 66 சதவீத சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினார். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு மாற்று இல்லை என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூக்குரலிடும் போது “மாற்று உலகம்” சாத்தியம் என்பதை நிரூபித்தார். பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி கியூப ஆசிரியர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது. உலகில், மலிவான கட்டணத்தில் மின்சாரம் பெறுகின்றனர்.

    வெனிசுலா மக்கள் பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக மருத்துவர்கள் என கியூபாவுடன் ஒப்பந்தம் செய்தார். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்தார். உருகுவேயிடமிருந்து, எண்ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

    உணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டன. இன்று வெனிசுலாவின் தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர் பொதுத்துறையில் வேலை செய்கின்றனர். குறைவான அளவில் முதலாளித்துவம் அதிகமான அளவில் சோசலிசம் வேண்டும் என்றார். இன்று, உலகில் மிகவும் குறைவான அளவில் அசமத்துவம் உள்ள நாடாக வெனிசுலா உள்ளது. சாவேசுக்கு முன்புவரை வெனிசுலா பேசப்படவே இல்லை. இன்று உலகம் முழுவதும், வெனிசுலா பேசு பொருளாக மாறியுள்ளது.

    சாவேசுக்கு முந்தைய வெனிசுலா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு ஆட்சியர்களாய் சீரழிக்கப்பட்டிருந்தன. தனது 14 ஆண்டுகால ஆட்சியில் அடித்தட்டு மக்களின் கனவுகளை பலவகைகளில் நனவாக்கிய ஹுகோ சாவேஸ் கடந்த 5-3-2003 அன்று தனது 58-வது வயதில் மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், அமைதி மற்றும் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து முன்னாள் அதிபர் ஹுகோ சாவேஸ் நினைவு பரிசு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்துள்ளார். இந்த விருது முதல்முறையாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×