search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேஷியாவில் 6 தீவிரவாதிகள் கைது
    X

    இந்தோனேஷியாவில் 6 தீவிரவாதிகள் கைது

    சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த 6 தீவிரவாதிகளை இந்தோனேஷியாவில் போலீசார் கைது செய்தனர்.
    ஜகார்த்தா:

    சிரியா மற்றும் ஈராக்கில் தளம் அமைத்து உலகின் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ். அமைப்பினர் இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளிலும் கைவரிசை காட்டி வருகின்றனர். அந்தவகையில் இந்தோனேஷியாவின் மத்திய ஜகார்த்தாவில் இந்த அமைப்பினர் கடந்த ஜனவரி மாதம் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு இருந்தனர்.

    இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தோனேஷியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் அடிக்கடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு சிங்கப்பூர் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள படாம் தீவுப்பகுதியில் நேற்று போலீசார் தேடுதலில் ஈடுபட்ட போது 6 தீவிரவாதிகள் சிக்கினர். இந்தோனேஷியாவை சேர்ந்த இவர்கள் 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    குறிப்பாக அண்டை நாடான சிங்கப்பூரில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் மற்றும் போலீஸ் நிலையங்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதலை அரங்கேற்ற அவர்கள் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து பணியாற்றி வரும் இந்தோனேஷியரான பஹ்ருன் நயிமுடன் இவர்கள் 6 பேருக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

    நயிமின் திட்டப்படி படாம் தீவு வழியாக சிங்கப்பூரில் தாக்குதல்களை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டு இருந்ததாக கூறிய இந்தோனேஷிய போலீசார், இந்த பஹ்ருன் நயிம் தான் ஜகார்த்தா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் என்றும் தெரிவித்தனர்.

    இந்தோனேஷியாவில் 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சிங்கப்பூர் அரசு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளை உஷார்படுத்தியுள்ள உள்துறை அமைச்சகம், எத்தகைய அச்சுறுத்தலையும் முறியடிக்க விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    மேலும் இந்தோனேஷிய அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ள சிங்கப்பூர் பாதுகாப்பு துறையினர், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் தொடர்பான மேலதிக தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தீவிரவாதிகளின் இந்த திட்டம் குறித்து ஏற்கனவே தெரியும் என சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரி கே.சண்முகம் கூறுகையில், ‘எங்கள் மீது ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது குறித்து எங்களுக்கு ஏற்கனவே தெரியும்’ என்று தெரிவித்தார்.

    இந்தியர்கள் உள்பட பலநாட்டு குடிமக்களும் அதிகமாக வாழும் சிங்கப்பூர் நாடு பன்முக கலாசாரம் கொண்டது. உலக அளவில் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கு தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் இதுவரை நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×