என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டார்ஜிலிங்கில் கடந்த வாரம் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது.
- இந்த நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததால் இர்பானால் அங்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கயிறு கட்டி ஜிப்லைன் போன்று அமைத்து இர்பான் அங்கு சென்றார். அதன்பின் காயமடைந்திருந்த மக்களுக்கு மருத்துவம் செய்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உயிரை துச்சமென மதித்து ஜிப்லைனில் சென்று மருத்துவம் பார்த்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய இந்தியா 49.5 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விசாகப்பட்டினம்:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒரு கட்டத்தில் 102 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன்கள் குவித்தார். பிரதிகா ராவல் 34 ரன்னும், ஸ்நே ரானா 33 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சோ ட்ரியான் 3 விக்கெட்டும், காப், கிளர்க், எம்லாபா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 70 ரன்கள் எடுத்தார். சோ ட்ரியான் 49 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
8வது வீராங்கனையாக களமிறங்கிய டி கிளெர்க் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் நிதானமாக ஆடிய அவர் பின் அதிரடியில் இறங்கினார். அவர் 54 பந்துகளில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 48.5 ஓவரில் 252 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் கிராந்தி கவுட், ஸ்நே ரானா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விஷ்ணு விஷால். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஆர்யன்.
ராட்சசன் வரிசையில், ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவாகி இருக்கும் ஆர்யன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்யன் படம் குறித்து விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் தான் ஆர்யன் படத்தின் கதையை கேட்டேன். கதையை கேட்டதும், இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராட்சசன் படத்திற்கு பிறகு திரில்லர் படத்தில் நடிக்க வேண்டும், ஆனால் அந்தப் படம் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
அதற்கு ஏற்றார்போல் இந்தப்படம் அமைந்துள்ளது. நிச்சயமாக ராட்சசன் போன்று இருக்காது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயம் இந்தப் படத்தில் இருக்கிறது. கட்டா குஸ்தி திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே இந்தப் படத்திற்காக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டோம். எனினும், பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதமானது.
வெப் சீரிஸ் தொடர்பான பணிகளுக்காக நானும் ஆர்யன் படத்தின் இயக்குநர் பிரவீன் மும்பை சென்றிருந்தோம். அப்போது நடிகர் அமீர் கானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவர் பொதுவாக பேசும் போது, இந்தப் படத்தின் கதையை கேட்பதாக சொன்னார்.
அதன்படி ஒருநாள் இரவு 10 மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்து, மறுநாள் காலை 6 மணி வரை ஆர்யன் படம் மட்டுமின்றி பொதுவில் சினிமா தொடர்பான விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கதையை கேட்ட அமீர்கான் இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் தான், வில்லனாக நடிப்பதாக கூறினார். எனினும், இந்தப் படத்தின் இந்தி பதிப்பு தற்போது உருவாகும் சூழல் ஏற்படாமல் போய்விட்டது.
அமீர்கான் நடிப்பதாக தெரிவித்த கதாபாத்திரத்தில் தற்போது செல்வராகவன் நடித்திருக்கிறார். நாங்கள் இந்தப் படத்தை தொடங்கும் போதே, வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
எனக்கு பான் இந்தியா கான்செப்ட்டில் நம்பிக்கை இல்லை. தற்போது பான் இந்தியா படங்கள் கடவுள் சார்ந்ததாகவும், அதீத கமர்ஷியலாகவும் இருக்கின்றன. இந்தப் படம் முற்றிலும் வேறானது. இந்தப் படம் அதிக மொழிகளில் வெளியாகி, சில மொழிகளில் மட்டும் நல்ல பெயர் எடுத்தால் போதும் என்று நான் நினைக்கவில்லை. குறைந்த அளவில் இரு மொழிகளில் வெளியானால் கூட எனக்கு அதன் வரவேற்பு மகிழ்ச்சியை கொடுத்தாலே போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ம.பி. காவல்துறை அமைத்த சிறப்பு விசாரணைக் குழு நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னையில் கைது செய்தது.
- மத்திய அரசு மற்றும் ம.பி. அரசின் சோதனைகளில் மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது என ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ம.பி. காவல்துறை அமைத்த சிறப்பு விசாரணைக் குழு நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னையில் கைது செய்தது.
இந்நிலையில் நாக்பூரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், "எங்கள் காவல்துறை தமிழ்நாட்டில் கைது நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கும் விதத்தில் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒரு முறையான அறிக்கையை அளிக்க வேண்டும். மருந்து தயாரிக்கப்பட்ட இடத்தில் உள்ள அரசு உறுதியான மற்றும் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருந்தில் டையெத்திலீன் கிளைக்கால் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மருந்துக்குத் தடை விதித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், ஆரம்பத்தில் மத்திய அரசு மற்றும் ம.பி. அரசின் சோதனைகளில் மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசுதான் நச்சுத்தன்மையை உறுதி செய்து இரு மாநில அரசுகளுக்கும் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், அலட்சியமாக இருந்ததாகக் கூறி, இரண்டு மூத்த மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் ஆக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ம.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டார்.
- "இது பிரதமர் நேதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்" என்று மோடி குறிப்பிட்டார்.
- டிரம்ப்-ஐ புகழ பிரதமர் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமல்ல.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுள்ள நிலையில் முதற்கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பாராட்டி பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், "இது பிரதமர் நேதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்" என்று மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில் இதை விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில்," காசா தொடர்பான புதிய முன்னேற்றங்களை பிரதமர் வரவேற்று அதிபர் டிரம்பைப் பாராட்டியுள்ளார். அவ்வாறு செய்ய பிரதமர் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமல்ல.
ஆனால், கடந்த இருபது மாதங்களாக காசாவில் இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்ட இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவுக்கு மோடி அளித்துள்ள தகுதியற்ற பாராட்டு அதிர்ச்சியளிப்பதும் வெட்கக்கேடானதும் ஆகும். மேலும் தார்மீக ரீதியாக கொடூரமான ஒரு விஷயம்.
1988 நவம்பரில் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட, இப்போது 150க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசின் எதிர்காலம் குறித்தும் மோடி முழுமையான மௌனம் காத்து வருகிறார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்ந்து விரிவடைவது குறித்தும் மோடி எதுவும் கூறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
- உலக சாதனை புத்தகத்திலும் இந்திய உலக சாதனை புத்தகத்திலு இடம் பெற்றுள்ளது.
- 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள இந்த சிலையை உருவாக்கினர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கைவினை கலைஞர்கள் புதுமையான ராமர் சிலை ஒன்றை உருவாக்கினர்.
ஒரு லட்சம் மதிப்பிலான 1,5,10 நாணயங்களை கொண்டு 25 கைவினை கலைஞர்கள் 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள இந்த சிலையை உருவாக்கினர்.
இந்த ராமர் சிலை ஆசிய உலக சாதனை புத்தகத்திலும் இந்திய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
லக்னோவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் உத்தரப்பிரதேச துணை முதல் மந்திரி பிரஜெஸ் பதக் நேற்று திறந்து வைத்தார்.
- தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
- இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அவருக்கு சில நாடுகளும் ஆதரவு தெரிவித்து பரிந்துரைத்தன. ஆனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தநிலையில் அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்க உள்ள நிலையில் அதுகுறித்து டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த டிரம்ப்,"நாங்கள் 7 போர்களை தீர்த்து வைத்தோம். 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.
வரலாற்றில் யாரும் இவ்வளவு போர்களை தீர்த்து வைத்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருவேளை அவர்கள் (நோபல் குழு) அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரம்ப்பின் படத்தை "அமைதித் தலைவர்" என்ற தலைப்பில் பகிர்ந்து உள்ளது.
- வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் குறித்தும் ஆலோசித்தோம்.
- இது பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார்.
இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இருதரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில், இரண்டு வருட கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, காசாவிற்குள் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் மற்றும் உதவி நுழைவுக்கான ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்தியஸ்தர்கள் தெரிவித்ததாக எகிப்திய அரசு தொடர்பான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைதி ஒப்பந்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். அதிபர் டிரம்ப்-ஐ தொலைபேசியில் அழைத்து மோடி பாராட்டி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "எனது நண்பர் அதிபர் டிரம்பிடம் பேசினேன். வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தினேன். மேலும், வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் குறித்தும் ஆலோசித்தோம். வரும் வாரங்களில் இருவரும் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "அதிபர் டிரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்.
பணயக்கைதிகள் விடுதலையும், காசா மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட மனிதாபிமான உதவிகளும் அவர்களுக்கு நிம்மதியைத் தரும் என்றும், நீடித்த அமைதிக்கு வழி வகுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் 24 ஆட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- தமிழ் தலைவாஸ் அணி நேரு ஸ்டேடியத்தில் 4 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது.
12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. அதை தொடர்ந்து 2-வது கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
சென்னையில் 3-வது கட்ட புரோ கபடி 'லீக்' போட்டிகள் கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. நாளையுடன் சென்னையில் போட்டிகள் முடிவடைகிறது. சென்னையில் 24 ஆட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்றுடன் 20 போட்டிகள் முடிவடைந்தன.
இன்று 2 ஆட்டங்களும் (பெங்கால்-டெல்லி, குஜராத்-உ.பி.) நாளை 2 போட்டிகளும் (குஜராத்-டெல்லி, பெங்கால்-மும்பை) நடைபெறுகிறது.
சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி நேரு ஸ்டேடியத்தில் 4 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது. இரண்டில் தோற்றது. ஒட்டு மொத்தத்தில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இந்த 5 போட்டிகளையும் டெல்லியில் விளையாடுகிறது.
நேற்றுடன் 72 ஆட்டங்கள் முடிந்துள்ளது. டெல்லி அணி 11 வெற்றி, 1 தோல்வி யுடன் 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும். புனே 10 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும் உள்ளன.
தெலுங்கு டைட்டன்ஸ் (16 புள்ளிகள்), மும்பை பெங்களூரு (தலா 12 புள்ளி)ஆகியவை முறையே 3 முதல் 5-வது இடங்களில் உள்ளன. ஜெய்ப்பூர், அரியானா (12) 7-வது மற்றும் 8-வது இடத்தில் உள்ளன. உ.பி. (8), குஜராத், பெங்கால், பாட்னா (தலா 6 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே 9 முதல் 12-வது இடங்களில் உள்ளன.
முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
- ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில் விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியது.
- இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர அசர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் ஜூலையில் அறிவித்திருந்தார்.
2024 டிசம்பர் 25 அன்று, பாகுவிலிருந்து குரோஸ்னிக்குச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம், கஜகஸ்தானின் அக்தாவுக்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்.
ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில், விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் ரஷியாவின் விமானத் தற்காப்பு அமைப்பே அஜர்பைஜான் பயணிகள் விமானத்தை தவறுதலாக தாக்கியதாக ரஷிய அதிபர் புதின் ஒப்புக்கொண்டார்.
தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் சந்திப்பில், விமான விபத்துக்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ஒப்புக்கொண்ட புதின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர அஜர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் கடந்த ஜூலையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதின் தற்போது வெளிப்படையாக தவறை ஒப்புக்கொண்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
- விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
- தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு.
ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் இன்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது;-.
தமிழ்நாட்டில் பெரும்பா லான நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி 40 கிலோ எடையுள்ள 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவ சாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, சுமை தூக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
மத்திய அரசை காரணம் காட்டாமல், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல் மணிகளை தடையில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள விவசாயி கள், தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபக ரமான விலை வேண்டும் என்பன உள்ளிட்ட விவ சாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, அனை த்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றனர்.
மேலும் விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கேட்டு 7-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில், 5 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- விபத்தின்போது விமானத்தில், ஃபரூகாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு பீர் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் இருந்துள்ளார்.
- அவர் தனது திட்டப் பணியை ஆய்வு செய்வதற்காக விமானத்தில் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஜெட் விமானம், காலை 10:30 மணியளவில், முகமதாபாத் பகுதியில் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தில் டேக்-ஆஃப் செய்யும் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்த புதர்களுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.
விபத்தின்போது விமானத்தில், ஃபரூகாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு பீர் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் இருந்துள்ளார். அவர் தனது திட்டப் பணியை ஆய்வு செய்வதற்காக விமானத்தில் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்தில் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.






