என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க. அரசை நாம் எல்லோரும் சேர்ந்து மாற்றுவோம் என்று த.வெ.க. தலைவர் கூறி இருந்தார்.
- இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க. அரசை நாம் எல்லோரும் சேர்ந்து மாற்றுவோம் என்று மகளிர் தின வாழ்த்து வீடியோவில் த.வெ.க. தலைவர் விஜய் கூறி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என த.வெ.க. தலைவர் கூறியது குறித்த கேள்விக்கு சென்னை மேயர் பிரியா கூறியதாவது:
* களத்திற்கே வராத தலைவரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை.
* இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும்.
பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதை நூலான 'எனது ஆண்கள்' நூலை தமிழில் மொழி பெயர்த்த பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலாவிற்கு எனது பாராட்டுகள்.
கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- நியாயம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை.
- இப்படியொரு மரணம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் பிரதமர் மோடியை சந்தித்து அவரிடம் நியாயம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார், "நான் பிரதமர் மோடியை சந்தித்து, இந்த விவகாரத்தில் அவர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரிடம் கூற விரும்புகிறேன்."
"எங்கள் மகள் பெரிய கனவு கொண்டிருந்தாள். அவளுக்கு இப்படியொரு மரணம் ஏற்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. அவள் எங்களை விட்டுச் சென்று ஏழு மாதங்கள் கழிந்துவிட்டது, ஆனால் நீதி எங்கே? எங்களிடம் அவளின் இறப்பு சான்றிதழ் கூட இல்லை. பெண் மருத்துவருக்கு அவர் பணியாற்றும் இடத்திலேயே பாதுகாப்பு இல்லையெனில், வேறு எங்கு தான் பாதுகாப்பு இருக்கும்?," என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயர் கூறிய கருத்துக்கள் குறித்து பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. அக்னிமித்ரா பால், "பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நமது பிரதமர் அவர்களுக்கு (பெற்றோருக்கு) நேரம் கொடுத்து, அவர்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்பார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில நிதித்துறை அமைச்சர் சந்திர்மா பட்டாச்சார்யா கூறும் போது, "நாட்டின் எந்த குடிமகனுக்கும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு அவரை சந்திக்கும் உரிமை உள்ளது. ஆனால், நமது தலைவர் மம்தா பானர்ஜி தான் இந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்து முதல் நடவடிக்கையை எடுத்தார் என்பதை மறந்துவிடக்கூடாது," என்று தெரிவித்தார்.
- குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி விளையாடுகிறது.
- இந்த காட்சிகள் மருத்துவமனையின் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் நோயாளி வைத்திருக்கும் பொருட்கள் மீது எலிகள் துள்ளிக்குதித்து விளையாடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி ஓடி விளையாடுகிறது.
இந்த காட்சிகள் மருத்துவமனையின் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளன.
இந்த வீடியோ பரவியதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இந்த பிரச்சனையை தீர்க்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தது.
இதுதொடர்பாக மருத்துவ அதிகாரி டாக்டர் பிரவீன் உய்கே கூறுகையில், நாங்கள் தொடர்ந்து பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்கிறோம், ஆனால் பிரச்சனை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மூத்த மாவட்ட அதிகாரி குழந்தைகள் வார்டை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்த அவர், உடனடியாக வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டார்.
மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. சம்பாதியா உய்கே, மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மூத்த மாவட்ட அதிகாரிக்கு அவர் அறிவுறுத்தினார்.
- இளையாராஜா எண்ணற்ற விருதுகளை வாரிக்குவித்துள்ளார்.
- உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வந்தனர்.
தமிழ் திரையுலகில் இசை பயணத்தை தொடங்கி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு மத்திய அரசு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. இதுதவிர தான் இசையமைத்த பல்வேறு திரைப்படங்களுக்காக இளையாராஜா எண்ணற்ற விருதுகளை வாரிக்குவித்துள்ளார்.
இளையராஜா இசைக்கு இன்றும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் இசையை கேட்டு மயங்காதவர்களே இல்லை எனலாம். அந்த வகையில், இசை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை அரங்கேற்றம் லண்டனில் நேற்றிரவு நடைபெற்றது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய சிம்பொனி அரங்கேற்றத்தை அனுபவிக்க உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வந்தனர்.
வெறும் 35 நாட்களில் சிம்பொனியை எழுதிய இளையராஜா, அதனை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற எவென்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்ற சிம்பொனி அரங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மெய்மறந்து இசையில் மூழ்கினர். முன்னதாக இளையராஜா மேடைக்கு வந்ததும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பு காரணமாக அரங்கமே அதிர்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிம்பொனி மட்டும் 45 நிமிடங்களுக்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வீடியோ வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் டி.டி.எஃப். வாசன்.
- டி.டி.எஃப். வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
வீடியோ வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் டி.டி.எஃப். வாசன். அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது, சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்கள் பதிவிடுவது போன்ற காரணங்களுக்காக இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக சிறை தண்டனையையும் டி.டி.எஃப். வாசன் பெற்றுள்ளார்.
முன்னதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு திருப்பதி மலைக்கு டி.டி.எஃப். வாசன் சென்றிருந்தபோது, தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த அவர், அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமலை போலீசார், டி.டி.எஃப். வாசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் டி.டி.எஃப். வாசனின் வங்கிக்கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் முத்து, தெரிவித்துள்ளார்.
மேலும், டி.டி.எஃப். வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு திருமஞ்சனம்.
- திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-25 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: தசமி காலை 11.24 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: புனர்பூசம் பின்னிரவு 2.50 மணி வரை. பிறகு பூசம்.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு திருமஞ்சனம். காரமடை ஸ்ரீஅரங்கநாதர் கருட வாகனத்தில் உலா. காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்சவம். குடந்தை ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கைலாச வாகனத்திலும் அம்பாள் ஏக சிம்மாசனத்திலும் பவனி. குலசேகர ஆழ்வார் திருநட்சத்திர வைபவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீகாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும் ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-நலம்
மிதுனம்-தேர்ச்சி
கடகம்-அமைதி
சிம்மம்-பாசம்
கன்னி-பண்பு
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-புகழ்
தனுசு- உயர்வு
மகரம்-சுகம்
கும்பம்-கவனம்
மீனம்-சுபம்
- வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.
- இந்த சமூகமும் ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
* இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எல்லாம் எழுதுகிறார்கள்.
* அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகிறார்கள்.
* இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.
* ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
* இப்படிப்பட்ட சமூகத்தில் தான் அங்குலம் அங்குலமாக போராடி... போராடி... போராடி... இன்றைக்கு இந்த அங்கீகாரத்தை நாம் பெற்று இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா?
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், ஐ.சி.சி. இறுதிப் போட்டி என்பதால் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதை முனைப்பில் இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 2 பந்துகள் மீதிமிருந்த நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
அந்த வகையில், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்றைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் நேரலையில் காணலாம்.
- நான் சொன்னதையும், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
- பா.ஜ.க.வை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.
கோவை:
கோவையில் நேற்று முன்தினம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இது அரசியல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்று அண்ணாமலை கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நானும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம். நான் அளித்த பேட்டியில் அ.தி.மு.க. என்ற பெயரை நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் அதுபற்றி விவாதத்துக்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் சொன்னதையும், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க.வை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வை பற்றி எடப்பாடி பழனிசாமியும் தெளிவாக பேசி இருக்கிறார். அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பா.ஜ.க.வை திட்டுவதையே நோக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தி படித்தால் என்ன லாபம்? என்று தெரியவில்லை.
- பல்வேறு நாடுகளில் ஒன்று அல்லது 2 மொழிகள் மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று, தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன் முன்னிலை வகித்தார்.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மருத்துவர் அணி தலைவர் கனிமொழி சோமு எம்.பி., மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிற்றரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
பெண்களை படிக்கக்கூடாது என்றும், இந்த உலகத்தில் உன்னால் போட்டிபோட முடியாது என்று சொல்வார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தற்போது பெண்கள் முன்னேற்றம் அடைந்ததற்கு நமது தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான் காரணம். பெண்கல்வி இருந்தால் சமூகம் மாற்றம் அடையும்.
நம்முடைய மொழியை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. மும்மொழிக் கொள்கையை நம் மீது திணித்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். எங்கள் வீட்டு பிள்ளைகள் யார் இந்தி படிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்தி படித்தது கிடையாது. நான் டெல்லியில் இருக்கும்போது இந்தி தெரியாததால் எனக்கு இதுவரை எந்த சிரமமும் ஏற்படவில்லை.
இந்தி படித்தால் என்ன லாபம்? என்று தெரியவில்லை. பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் அங்கிருந்து லட்சக்கணக்கான நபர்கள் வேலை தேடி தமிழகம் வருகிறார்கள்.
அவர்கள் தமிழ் தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். தமிழ் படித்தவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். மும்மொழி கொள்கை படிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. பல்வேறு நாடுகளில் ஒன்று அல்லது 2 மொழிகள் மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள்.
எந்த தடையும் பெண்களுக்கு இருக்கக்கூடாது என்று பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.






