என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான ‘ஜீரோ அவர்' எடுக்கப்படும்.
    • சட்டசபையில் தற்போது தி.மு.க.வின் பலம் 133 ஆகவும், அ.தி.மு.க.வின் பலம் 66 ஆகவும் உள்ளது.

    சென்னை:

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.

    தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று (திங்கட்கிழமை) அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று காலை சட்டமன்ற கூட்டத்தின் தொடக்கத்தில் திருக்குறளை படித்து அவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைப்பார். பின்னர், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதன் பிறகு கேள்வி நேரம் நடைபெறும்.

    கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான 'ஜீரோ அவர்' எடுக்கப்படும். அப்போது உதயகுமார் தனது தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோருவார். அல்லது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒரு நேரத்தை குறிக்கும்படி அவர் கோரலாம். தீர்மானத்தை உடனே எடுக்கும்பட்சத்தில், சபாநாயகர் அப்பாவு, தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவார்.

    பின்னர் துணை சபாநாயகர் அல்லது அவையை நடத்துவோர் பெயர் பட்டியலில் உள்ளவர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பை நடத்துவார்.

    பின்னர் அந்த தீர்மானத்தின் மீது உதயகுமார் பேசுவார். அவரது விவாதத்திற்கு முதலமைச்சரோ அல்லது அவை முன்னவரோ பதில் அளித்து பேசுவார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டால், 'ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க' என்று கூறும்படி துணை சபாநாயகர் கேட்டுக்கொள்வார்.

    தீர்மானத்தை ஏற்று ஆம் என்று ஒலிக்கும் மொத்த குரலையும், இல்லை என்று ஒலிக்கும் குரலையும் கணக்கிட்டு துணை சபாநாயகர் தீர்ப்பளிப்பார்.

    சட்டசபையில் தற்போது தி.மு.க.வின் பலம் 133 ஆகவும், அ.தி.மு.க.வின் பலம் 66 ஆகவும் உள்ளது. தீர்மானம் தோற்றுவிட்டால், சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்பார்.

    ஒருவேளை எண்ணிக் கணிக்கும் 'டிவிஷன்' முறைப்படி வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டால், நேரம் குறிக்கப்பட்டு அவையின் நுழைவு வாயில்கள் அடைக்கப்படும். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்தால், அவர் அமைச்சர் என்றாலோ அல்லது எம்.எல்.ஏ. என்றாலும் யாரும் அவைக்குள் வர முடியாது.

    அந்த வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்துவார். தமிழக சட்டசபையில் 6 டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எழுந்து நிற்கச் செய்து அவர்களின் வாக்குகளை சட்டசபை செயலாளர் பெற்று, அதை எண்ணிக் கணித்து, அதை துணை சபாநாயகரிடம், சட்டசபை செயலாளர் அளிப்பார். அதன் அடிப்படையில் தீர்மானத்தின் முடிவை துணை சபாநாயகர் அறிவிப்பார்.

    2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதிருந்த சபாநாயகர் தனபாலுக்கு எதிராக இந்த தீர்மானத்தை அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்பட்டதால், அரசியல் நோக்கத்தில் தி.மு.க. அதை சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டது. எந்த இடத்திலும் அரசியலில் எதிர்வினைகள் உண்டு என்பதற்கு, சட்டசபையில் இன்று கொண்டுவரப்படும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானமும், ஒரு சாட்சியாக அமையும்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
    • கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவடத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன், ஒரு தேர்தலிலும் போட்டியிடாத நடிகர் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள் என்று பேசினார்.

    கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி வந்தனர். விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போதும் அப்படித் தான் சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.

    கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தை சேர்ந்த யாரையும் திசை திருப்ப முடியாது. 25 ஆண்டுகளாக ஒரு பட்டாளத்தை விடுதலை சிறுத்தைகள் அதே வேகத்தில் வைத்துக் கொண்டுள்ளது. எந்த சரிவும் ஏற்படவில்லை, வீழ்ச்சியும் இல்லை. ஒரு அரசியல் கட்சியை 25 ஆண்டுகள் கடந்து தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்து இருப்பதால் தான் வெற்றி கிடைப்பதாக சிலர் ஏளனம் பேசி வருகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆண்ட கட்சிகள் தான் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம்.

    தற்போது ஒரு நடிகர், எந்த தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை. ஆனால் அடுத்த முதல்வர் அவர் தான் என்று பேசுகின்றனர். நான் தொடக்கத்தில் அதிக வாக்குகள் பெற்றபோது என்னை பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர் நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிகளுக்குள் ஒதுக்குகின்றனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு தான் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு கொள்கை தான் பெரியது என்பதால் குறைந்த தொகுதிகளை வாங்குகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நம் இலக்கு,"

    என்று கூறினார்.

    • விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

    கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.

    கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் டிராக்கை அனிருத் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியிடவுள்ளார். இதனை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    புதுடெல்லி:

    தற்போது, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் அமலில் உள்ளன.

    இந்நிலையில், மேற்கண்ட 4 சட்டங்களுக்கு பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    இந்த மசோதாவில், தற்போதைய 4 மசோதாக்களில் ஏற்கனவே உள்ள பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமை தொடர்பான எந்த அம்சமும் இடம்பெறவில்லை.

    இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களை தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுகிறது.

    இந்த மசோதா நிறைவேறியவுடன், பழைய 4 மசோதாக்களும் ரத்து செய்யப்படும். சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கேற்ப இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இந்தியாவில் நுழைவதற்கும், தங்குவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ்போர்ட்டையோ அல்லது போலி விசாவையோ அல்லது முறைகேடாக பெறப்பட்ட பயண ஆவணங்களையோ பயன்படுத்தினால் அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு குறையாமலும், 7 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    அத்துடன், ரூ.1 லட்சத்துக்கு குறையாமலும், ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

    உரிய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள்வரையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும்.

    வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவலை ஓட்டல்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதன்மூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.

    மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம்.

    வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'
    • திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகத்தையும் நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி மலையாளம்,தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழு ஒரு சுவாராசிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் முதல் நாள் முதற்காட்சி அதிகாலை 6 மணிக்கு தொடங்கும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் முதல் பாகமான லூசிஃபர் படத்தை வரும் மார்ச் 20 ஆம் தேதி ரீரிலீஸ் செய்யவுள்ளனர்.

    படத்தை குறித்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம்.
    • திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-3 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை இரவு 6.38 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 2 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலு கந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம், வழிபாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-பொறுமை

    மிதுனம்-அன்பு

    கடகம்-உதவி

    சிம்மம்-உவகை

    கன்னி-பதவி

    துலாம்- ஆதாயம்

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- இன்பம்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-கடமை

    மீனம்-பயணம்

    • சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.
    • வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.

    இதைத் தொடர்ந்து 2025-26 வேளாண் பட்ஜெட் கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வாசித்தார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், சபாநாயகர் மீது அ.தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம் நடைபெறுகிறது.  

    • லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
    • இவர் ஏற்கனவே டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரான இவர் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

    இவரது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

    லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நடந்தது.

    இந்நிலையில், சிறந்த கிரிக்கெட் அணி எது இந்தியாவா, பாகிஸ்தானா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி பதில் கூறியதாவது:

    விளையாட்டுக்கு உலகம் முழுவதையும் உற்சாகப்படுத்தும் சக்தி இருப்பதாக நினைக்கிறேன்.

    விளையாட்டு உணர்வு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது. மனித பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என உண்மையிலேயே நம்புகிறேன். அவை வெறும் விளையாட்டுகள் அல்ல, அவை மக்களை ஆழமான மட்டத்தில் இணைக்கின்றன.

    இப்போது யார் சிறந்தவர் அல்லது இல்லாதவர் என்ற கேள்விக்கு வருகிறேன். விளையாட்டின் நுட்பங்களைப் பொறுத்தவரை நான் ஒரு நிபுணர் அல்ல. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே அதை மதிப்பிட முடியும்.

    எந்த அணி சிறந்தது, எந்த வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் சில நேரங்களில், முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன.

    சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் முடிவு எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியது என தெரிவித்தார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
    • இதன் இறுதிச்சுற்றில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, பிரிட்டிஷ் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஜாக் டிராபர் 6-2, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • எம்.எஸ்.தோனி தலைமையில் திசாரா பெரேரா விளையாடியுள்ளார்.
    • ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடினார்.

    கொழும்பு:

    ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பையையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளார்.

    எம்.எஸ்.தோனி சி.எஸ்.கே. கேப்டனாக இருந்தபோது பல இளம் வீரர்களின் திறமைகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐ.பி.எல். தொடர்களில் பல வெளிநாட்டு வீரர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா சமீபத்திய அளித்த பேட்டியில் பேசியதாவது:

    சில நேரங்களில் நான் தடுப்பாட்டம் விளையாடும்போது எம்.எஸ். தோனி என்னிடம் வந்து பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் நல்ல பவர் ஹிட்டர். எனவே இப்படி விளையாடாமல் ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொல்வார். அது போன்ற வார்த்தைகள் இளம் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கும். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது மட்டுமே இருந்தது. அப்போது அவருடன் மகிழ்ச்சியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    நான் புனே அணிக்காக விளையாடிய போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 4 - 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம். அந்தச் சமயத்தில் களமிறங்கிய எனக்கு அதிரடியாக விளையாடலாமா அல்லது சிங்கிள் எடுக்கலாமா என்ற குழப்பம் இருந்தது.

    அப்போது என்னிடம் வந்த எம்எஸ், 'பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என கேட்டார். அதற்கு நாம் விக்கெட்டுகளை இழந்துள்ளோம் என்று சொன்னேன். அதைக் கேட்ட தோனி ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொன்னார்.

    அதைப் பின்பற்றி விளையாடியதால் ஒரு கட்டத்தில் 60/5 என்ற நிலையில் இருந்த நாங்கள், கடைசியில் 190/7 என்ற ஸ்கோர் எடுத்தோம். நான் 40 ரன்கள் அடித்தேன். தோனி 80 முதல் 90 ரன்கள் அடித்தார்.

    தனிப்பட்ட முறையில் தோனி எனக்கு இந்த உலகின் மிகச்சிறந்த கேப்டன். அவரது தலைமையில் நான் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியுள்ளேன். என்னை எப்போதும் நம்பிய அவர் பவர் ஹிட்டராக உருவாக நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தார் என தெரிவித்தார்.

    • கோட்டூர்புரத்தில் 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
    • படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி.

    சென்னை:

    சென்னை, கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியானது.

    கோட்டூர்புரத்தில் 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ஜெமெல்லி மருத்துவமனை தெரிவித்தது.
    • போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர்,

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவாது முதல் புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

    அதில் போப் பிரான்சிஸ் வழிபாட்டு உடைகளின் வழக்கமான ஊதா நிற ஸ்டோலை அணிந்து, மருத்துவமனை தேவாலயத்தின் பலிபீடத்திற்கு முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது காட்டப்பட்டுள்ளது.

    ஜெமெல்லி மருத்துவமனையின் 10-வது மாடியில் உள்ள போப்பாண்டவர் குடியிருப்பில் மற்ற பாதிரியார்களுடன் திருப்பலி கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார் என வாடிகன் தெரிவித்துள்ளது.

    மேலும், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

    இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் கூறுகையில், எனக்காகப் பல குழந்தைகள் ஜெபிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களில் சிலர் இன்று ஜெமெல்லிக்கு வந்தனர். அன்பான குழந்தைகளே நன்றி, போப் உங்களை நேசிக்கிறார், உங்களைச் சந்திக்க எப்போதும் காத்திருக்கிறார் என தெரிவித்தார்.

    ×