என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்."
    • திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    அஸ்திரம் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு 30 வயதுடைய ஒரு நபர் கொடைக்கானலில் தன்னை தானெ கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக் கொள்கிறார் இந்த காட்சி வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

    இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

    • நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தர்மசெல்வன் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
    • அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து தர்மசெல்வன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் கடந்த மாதம் 23ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

    ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளுடன் பேசியபோது எடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் தர்மசெல்வன் "நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது.

    நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன்.

    என்னிடம் தலைவர், 'அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி நீ சொல்வதை யாரும் கேட்கவில்லையென்றால், எனக்கு லெட்டர்பேடில் எழுதி கொடு' என தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நீங்கள் எப்படியிருந்தீர்களோ, ஆனால் இனி எதுவாக இருந்தாலும் எனக்கு தெரிய வேண்டும்" என பேசியுள்ளார்.

    • கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
    • இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பாலாஜி ஜெயராமன் வரிகளில் அருன் ராஜ் பாடியுள்ளார்.

    • கிராமத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் 24 தலித்களை சுட்டுக்கொன்றது.
    • 17 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் மரணம் அடைந்தனர். ஒருவர் தலைமறைவானார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலால் ஒரு கிராமத்தில் 24 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 வருடங்கள் கழித்து 3 குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி மாவட்டத்தில் ஜேஸ்ரானா காவல் நிலையத்திற்கு உள்பட்ட திஹுலி கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பம் நுழைந்தது.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 24 பேரை ஈவு இரக்கமின்றி கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சுட்டுக்கொன்றதுடன் அவர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது கொள்ளைக் கும்பல்.

    இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாதம் 19-ந்தேதி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.

    மீதமுள்ள 4 பேரில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கை சந்தித்து வந்தனர்.

    இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதன்படி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 3 பேருக்கு மரண தண்டனை வழங்கியதுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது.

    இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.

    • உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.
    • இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும்.

    ஆண்டுதோறும் 2.1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கத்தில் இந்தாண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும். அதாவது உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.

    இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள் (AWS), சில்லறை விற்பனை செயல்பாடுகள் மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட பிரிவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேளைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியானது பேபி & பேபி திரைப்படம்.
    • இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்துள்ளார்.

    பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியானது பேபி & பேபி திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

    இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இத்திரைப்படம் இரு குழந்தைகள் வெவ்வேறு குடும்பத்தில் தவறுதலாக மாறி விடுகிறது அதற்கு அடுத்து அந்த குழந்தையை எப்படி மீட்டனர் என்பதே படத்தின் கதைக்களமாகும். படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார்.
    • திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    தன் மீது கோபமாக இருக்கும் மனைவியை சமாதனப்படுத்த கணவன், தனது முதலாளியின் விலையுயர்ந்த காரை திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசிக்கும் ராகேஷ் அகர்வால், ரேஞ்ச் ரோவர் காரை வைத்திருக்கிறார். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவரின் வீட்டில் காண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் ராஜ்புத் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார். உரிமையாளரும் ஓட்டுநரை நம்பி சாவியைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் அவரை காணவில்லை. போன் செய்தும் எடுக்காததால் தனது கார் திருடப்பட்டதை உணர்ந்த ஓனர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸ், காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் மூலம் காரை திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    விசாரணையின் போது, தன் மீது கோபமாக இருக்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தக் காரைத் திருடியதாக ஓட்டுநர் கூறியது போலீசை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    • கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • வேலை நாட்கள் எண்ணிக்கையை 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசியதாவது:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக தேக்கமடைந்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்

    ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் உண்மையில் ரூ.4,000 கோடி குறைந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையை அடைக்கப் பயன்படுத்தப்படும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

    அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறைக்கு மத்தியில் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்தத் திட்டத்தை மேம்படுத்துவது கிராமப்புற மக்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். திட்டத்தை நிலைநிறுத்தவும் விரிவுபடுத்தவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

    குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். வேலை நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.
    • பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது வேதனை அளிக்கிறது.

    பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 10 ஆண்டில் மொத்தம் 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • இந்த 193 பேரில் 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ரஹீம் பாராளுமன்றத்தில் அமலாக்கத்துறை பற்றி கேள்வி எழுப்பினார்.

    அதில், கடந்த பத்து ஆண்டுகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? சமீப ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் அதிகரித்துள்ளனவா என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பாக இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி அளித்துள்ள பதிலில் கூறியதாவது:

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 193 நபர்களில் மொத்தமாக 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

    இதில் 01.04.2016 முதல் 31.03.2017 மற்றும் 01.04.2019 முதல் 31.03.2020 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தலா ஒரு நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

    மேலும், அமலாக்கத்துறை விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த அரசாங்கம் ஏதேனும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு போதிய தகவல்கள் இல்லை என பதில் அளித்துள்ளார்.

    • ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் உயர்வை சந்தித்தன.
    • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.

    இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 74,169.95 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் சுமார் 450 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    இன்று குறைந்தபட்சமாக 74,480.15 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 75,385.76 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக 1,131.30 (1.53 சதவீதம்) புள்ளிகள் உயர்ந்து 75,301.26 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 22,508.75 ஆக இருந்தது. இன்று காலை சுமார் நிஃப்டி 154 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சடமாக 22,599.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 22,857.80 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக நிஃப்டி 22,834.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை 30 நிறுவன பங்குகளை முன்னணியாக கொண்டு செயல்படுகிறது. அதில் ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி பங்குகள் உயர்வை சந்தித்தன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
    • மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

    அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ,நேற்று மாலை வெளியானது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த பாடலுக்கு OG Sambavam என தலைப்பு வைத்துள்ளனர். OG என்றால் ஒர்ஜினல் கேங்ஸ்டர் என அர்த்தம். இப்பாடலை ஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார்.

    பாடல் காட்சிகள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    ×