என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
    • இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

    திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    இப்படத்தை தயாரித்த துல்கர் சல்மானைஇப்படி ஒரு திரைப்படத்தை தயாரித்ததற்கு கொண்டாடி வருகின்றனர்.. இப்படம் மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படத்தில் சில நட்சத்திர நடிகர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

    திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு மிக வேகமாக நடைப்பெறுகிறது. நாளை லோகா திரைப்படம் தமிழில் வெளியாகிறது. மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் படத்தை விட இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    • நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.
    • இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையானது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும், புதன்கிழமை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும், நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.

    தொடர்ந்து, இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையானது

    இந்நிலையில், தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு 520 அதிகரித்த நிலையில், தற்போது மேலும் 520 உயர்ந்துள்ளது.

    இதன்மூலம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.76,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 637 கிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
    • 2ஆவதாக கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் ரோகித் சர்மா. பந்துகளை அடிக்கடி சிக்சருக்கு பறக்க விடுவதால், இவரை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என அழைக்கிறார்கள்.

    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய பேட்டர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். தற்போது வரை 637 சிக்சர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக உள்ள கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள்தான் அடித்துள்ளார்.

    இந்த நிலையில், நீங்கள் சிக்சர் அடிக்க விரும்பும் பந்து வீச்சாளர் யார்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அனைவரது பந்திலும் சிக்ஸ் அடிக்க விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை தேர்வு செய்து அடிக்க வேண்டும் என்பது கிடையாது.

    என்னுடைய மனநிலை எப்போதும் ஒரே மாதிரியான நிலையில்தான் இருக்கும். வரனும் சிக்ஸ் அடிக்கனும். இதுதான் என்னுடைய மனநிலை. யார் எனக்கு பந்து வீசுகிறார்கள் என்பது பெரிய விசயம் அல்ல" எனத் தெரிவித்து்ளளார்.

    அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாட இருக்கிறது.

    • ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறப்பு.
    • இரு நூல்களை பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்!

    சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • லோதா கமிட்டி பரிந்துரையின்படி கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
    • தொடர்ந்து 6 ஆண்டுகள் அல்லது இடைவெளி விட்டு 9 ஆண்டுகள் வரை பதவி வகிக்கலாம்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை ராஜீவ் சுக்லா துணைத் தலைவராக நீடிப்பார் எனத் தெரிகிறது.

    லோதா கமிட்டி பரிந்துரையின்படி உச்சநீதிமன்றம் பிசிசிஐ உறுப்பினர்கள் தேர்வுக்கான விதிமுறைகளை வகித்துள்ளது. அதன்படிதான் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. லோதா கமிட்டி பரிந்துரையின்படி 70 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு செய்யப்பட்டால், பதவிக்கான தகுதி காலம் முழுவதும் பதவியில் நீடிக்கலாம்.

    மேலும், தொடர்ந்து 6 வருடங்கள் பதவியில் நீடிக்கலாம் அல்லது 9 ஆண்டுகள் இடைவெளி விட்டு பதவி வகிக்கலாம். 9 ஆண்டுகள் நிறைவடைந்தால் அவர்கள் பதவியை கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு ரோஜன் பின்னி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக Dream11 இருந்து வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் Dream11 அதன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. இதனால் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாடும் எனத் தெரிகிறது.

    • வருவாய் நலன்களைப் பாதுகாப்புடன், நியாயமான முடிவுகளை உறுதி செய்ய வேண்டும்.
    • மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பலன் தராது.

    மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் GST-ல் சீர்திருத்தம் செய்வது பயனளிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் டெல்லியில் கூடி ஆலோசித்த புகைப்படத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    GST வரி குறைப்பு சீர்திருத்தம் மக்களை சென்றடைய வேண்டும். வருவாய் நலனை பாதுகாக்க அனைத்து மாநிலங்கள், மத்திய அரசின் ஆதரவு கோரும் வரைவு GST கவுன்சிலிடம் வழங்கப்படும்.

    மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பலன் தராது.

    குறைப்பு விகிதங்களின் நன்மைகள் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும். வருவாய் நலன்களைப் பாதுகாப்புடன், நியாயமான முடிவுகளை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்.
    • சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம்.

    ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. ஆக லட்சுமி, சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஐ.ஜி. ஆக அனிஷா ஹுசைன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சென்னை மாநகர சிபிசிஐடி கண்காணிப்பாளராக ஜவஹர், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * கோவை காவல் தலைமையக துணை ஆணையராக திவ்யா, பதவி உயர்வு பெற்ற சஜிதா சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சிபிசிஐடி-யில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புப்பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு அதன் எஸ்.பி.யாக சஜிதா ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




     


    • சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
    • சுப்பிரமணிய சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்

    புதுடெல்லி:

    முன்னாள் மேல்-சபை எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க தான் விடுவித்த கோரிக்கை குறித்து விரைவாக முடிவு செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது சுப்பிரமணிய சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். பின்னர் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    • ஜப்பானின் தொழில் மேம்பாடுகளை உலகம் முழுக்க கொண்டு செல்லும் சக்தியாக இந்தியா திகழ்கிறது.
    • இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் எப்போதும் முக்கிய பங்கு தாரராக திகழ்ந்து வருகிறது.

    டோக்கியோ:

    இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோ சென்று அடைந்தது. விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியவாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    டோக்கியோ விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதை கண்டுகளித்த பிறகு பிரதமர் மோடி தனது 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    டோக்கியோவில் வந்து இறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்களது உறவுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் இந்தப் பயணத்தின்போது பிரதமர் இஷிபா மற்றும் பிற தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் எதிர் நோக்குகிறேன். மேலும் உறவை வலுப்படுத்தவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

    விமான நிலைய வரவேற்புக்கு பிறகு பிரதமர் மோடி இந்திய ஜப்பான் தொழில் அதிபர்கள் பங்கேற்ற இந்தியா-ஜப்பான் கூட்டு பொருளாதார மன்ற கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று இந்தியா அரசி லில் நிலைத்த தன்மையுடன் உள்ளது. பொருளாதாரத்தில் நிலையான தன்மையுடன் உள்ளது. கொள்கைகளில் வெளிப்படை தன்மை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல உலகளவில் பொருளாதாரத்தில் மிகமிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது.

    மிக விரைவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது. ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையான இளைஞர்களும் இணைந்து பணியாற்றும்போது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும்.

    ஜப்பானின் தொழில் மேம்பாடுகளை உலகம் முழுக்க கொண்டு செல்லும் சக்தியாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவும், ஜப்பானும் ஒருங்கிணைந்து எதிர்காலத்தில் நிலையான, வளர்ந்த, செல்வசெழிப்பு மிக்க ஆசிய நூற்றாண்டை வடிவமைக்கும்.

    இந்தியாவும், ஜப்பானும் வெற்றிகரமாக ரோபாடிக்ஸ், செமி கண்டக்டர்ஸ், கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு இந்தியாவும், ஜப்பானும் முக்கிய பங்காற்ற முடியும்.

    இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் எப்போதும் முக்கிய பங்கு தாரராக திகழ்ந்து வருகிறது. மெட்ரோ ரெயிலில் இருந்து ஸ்டார்ட் அப் தொழில் வரை ஜப்பானின் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்து இருக்கின்றன. தொடர்ந்து இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய வருமாறு நான் அழைக்கிறேன்.

    இந்தியாவில் தயார் செய்து உலகம் முழுக்க கொண்டு செல்ல உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவின் பொருளாதாரம் அதற்கு ஏற்ப நிலையானதாக இருப்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் நீங்கள் செய்யும் தொழில் முதலீடு சாதாரணமாக வளர்ச்சி அடைவது இல்லை. அந்த முதலீடு பல மடங்காக வளர்ச்சி அடையும் ஆற்றல் கொண்டது. எனவே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    அது மட்டுமல்ல உலகம் முழுக்க உள்ள பொருளாதார நட்பு நாடுகளில் இந்தியாவுக்கு தோழமை கொடுக்கும் முதல் நாடாக ஜப்பான் விளங்குகிறது. விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த துறைகளில் தனியார் துறை ஊக்குவிக்கப்படுகிறது.

    இந்தியாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் கண்காணிப்பதோடு மட்டுமின்றி நினைத்து பார்த்து எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்திக் கொண்டு இருக்கிறது.

    இந்தியாவில் இளைஞர்கள் சக்தி அதிகம் உள்ளனர். அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களது கடமையாகும். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மீண்டும் அழைக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது.
    • கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சலையில் பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம் உள்ளது.

    இங்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது.

    இந்நிலையில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூர் அடுத்த மணி மூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் லட்சுமி நாராயணன் (வயது 18) நேற்று தனது மோட்டார் சைக்கிளை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகில் ஓட்டி சென்றுள்ளார்.

    வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், நீ எப்படி மோட்டார் சைக்கிளை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே, லட்சுமி நாராயணனுக்கு ஆதரவாக வரலாற்று துறையில் படிக்கும் ஆகாஷ் வந்துள்ளார்.

    வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

    • மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.
    • காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

    சென்னை:

    தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக உள்ள சங்கர் ஜிவால் வருகிற 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

    இதையொட்டி இன்று மாலையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பணி நிறைவு விழா நடத்தப்படுகிறது. சங்கர் ஜிவாலுடன், காவல் துறை வீட்டு வசதி நிறுவன இயக்குனர் உள்ள டி.ஜி.பி. சைலேஸ் குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார்.

    இதைத் தொடர்ந்து இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த விழாவில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சங்கர் ஜிவால், சைலேஸ் குமார் யாதவ் ஆகிய இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்கள்.

    டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டம்-ஒழுங்கு பதவியில் டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த போது தான் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் சில ஆண்டுகள் முன்னணி நிறுவனங்களில் என்ஜினீயராகவும் பணி புரிந்துள்ளார். அதன் பிறகே ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். மதுரை மற்றும் சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ள சங்கர் ஜிவால், திருச்சி கமிஷனராகவும், உளவு பிரிவில் ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார். சிறப்பான பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

    தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் ஓய்வு பெற உள்ள போலீஸ் டி.ஜி.பி சங்கர் ஜிவால் சந்தித்து பேசினார். அதேபோல் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேலும் காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

    பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமன் குறித்த தகவல்கள்...

    * 1968-ம் ஆண்டு மே 8-ந்தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தார்.

    * யு.பி.எஸ்.சி. தேர்வில் 1994-ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    * இளங்கலை பொருளாதாரம்; பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம்.

    * நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்தபோது, காவல்துறையில் காகிதமில்லாப் பணியை நடைமுறைப்படுத்தினார்.

    * ஏடிஜிபியாக சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளில் முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்.

    * கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார்.

    * தற்போது சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், படைத் தலைவர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார்.

    • நல்லகண்ணு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததால் காயம் அடைந்தார். கடந்த 24-ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை நேரில் பார்த்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

    ×