என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ, நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிகப் பிரிவு சார்பில் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விண்ணப்பதார்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களைக் கேட்பதால் வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ, நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.

    அதேநேரம் விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றையும், ஒப்புதல் கடிதம் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்தால், பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் அல்லது அண்மைக் காலத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • திருச்சியை அடுத்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம்.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 4 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், தற்போது விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வை சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பதில் திருச்சி மரக்கடை, உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சியை அடுத்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.

    தமிழகம் முழுவதும் நடத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஐந்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

    மகளிர் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.

    மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத திமுக அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    அதைவிடக் கொடுமை என்னவென்றால், கையூட்டு கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இயல்பாக அரசு அலுவகங்களில் வழங்கப்படும் சேவைகள் ஆகும். இந்த சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்கும் வகையிலும் சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்திருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லை; மக்கள் கையூட்டு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், அதை செய்யத் தவறிய திமுக அரசு, இப்போது முகாம்களை நடத்தி ஊழலை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

    மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டதுடன், திமுகவின் ஏமாற்று நாடகங்களையும் புரிந்து கொண்டனர். அதனால், வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய அரசு முன்வர வேண்டும்.
    • எந்தவொரு அரசியல் சார்புமின்றி, சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் பற்றி ஏர்போர்ட் மூர்த்தி யூடியூப்களில் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

    அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஏர்போர்ட் மூர்த்தியை காலணியால் தாக்கி சட்டையையும் கிழித்தனர்.

    பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் அவர்களை திருப்பி தாக்கினார். டி.ஜி.பி. அலுவலக வாசலில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்து வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்றனர்.

    டி.ஜி.பி. அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விடுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இரு தரப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ஏர்போர்ட் மூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பாதுகாப்புக்காக எதிர்தாக்குதலில் ஈடுபட்டார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்தது. ஏர்போர்ட் மூர்த்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலைந்து சென்றனர்.

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பா.ம.க பிரமுகரான ம.கா. ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ம.க.வினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.

    அவர்களோடு செல்வதற்காகவே ஏர்போர்ட் மூர்த்தி டி.ஜி.பி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

    அப்போதுதான் அவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனை அங்கிருந்த தொலைக்காட்சியினர் வீடியோவாகவும் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளனர். டி.ஜி.பி. அலுவலகம் அருகே ஏற்பட்ட இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதனிடயே, எர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    தலைநகர் சென்னையில், காவல்துறை அலுவலகத்தில் வைத்தே, ஒரு கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு யார் துணிச்சல் அளித்தது? நேற்று ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருரைக் கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று காவல்துறை அலுவகத்தில் மற்றொரு கட்சித் தலைவரைத் தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏட்டளவில் கூட இல்லை என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிலும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே தாக்குதலில் ஈடுபட்டிருப்பதும், அதனைத் தடுக்க இயலாமல் காவல்துறையினர் கைகட்டி நிற்பதும், தமிழகத்தை வன்முறைப் பாதையில் அழைத்துச் செல்வது தான் திமுக அரசின் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது.

    தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய அரசு முன்வர வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் சார்புமின்றி, சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றார். 

    • திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
    • நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 சவரன் நகை திருட்டு வழக்கில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    "திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்" திமுக கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என்று தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் அரசு காக்கத் தவறுவதும், குற்றச்செயல்களில் திமுக-வினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    ஏற்கனவே இந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது பல வழக்குகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

    திருட்டு, கொள்ளை எல்லாம் தெரிந்திருந்தால் தானே அரசுப் பொறுப்புகளுக்கு வந்து, திமுக-வின் கொள்கையான கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷனை முறையாக செயல்படுத்த முடியும்?

    இப்படிப்பட்டவர்களைக் கொண்டிருக்கும் கட்சி நடத்தும் ஆட்சி இனியும் தேவையா? என்ற கேள்விக்கு நான் செல்லும் தொகுதிகளில் எல்லாம் மக்கள் சொல்லும் பதில்- "இல்லை"!

    நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான நிரந்தர தீர்வு- #ByeByeStalin! என்று பதிவிட்டுள்ளார்.

    • என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் பாதிப்பா என்றால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
    • கட்சி நலன் மற்றும் ஆட்சி அமைப்பதற்காக தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன்.

    கோபி:

    பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசினர்.

    * அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வை தான் நான் வெளிப்படுத்தினேன்.

    * அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து என்னை நீக்குவதற்கு முன்னதாக என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

    * என்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சி பொறுப்பில் இருந்து என்னை நீக்கியுள்ளனர்.

    * கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    * காலில் விழுகிறோம் என கூறியவர்களையே ஏற்காமல் புறக்கணித்து விட்டனர்.

    * என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் பாதிப்பா என்றால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    * கட்சி நலன் மற்றும் ஆட்சி அமைப்பதற்காக தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன்.

    * ஒன்றிணைந்தால் சட்டமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என அ.தி.மு.க. தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

    * அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தை யார் தான் வெளிப்படுத்துவது? என வினா எழுப்பினார்.

    அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல் அவரது ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    கன்னடத்தில் வெளியான ஹாரர் காமெடி "Su From So", பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வெற்றியை பெற்றது.

    கன்னடத்தில் வெளியான ஹாரர் காமெடி "Su From So", பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வெற்றியை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புதுமுகங்களை மட்டுமே கொண்ட இப்படம் ₹100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெற்றிக்குப் பிறகு, Jio Hotstar படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றியது. ஆரம்பத்தில், செப்டம்பர் 5 அன்று OTT-யில் வெளியாகும் என அறிவித்து இருந்தாலும் நேற்று திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் . ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 9, 2025 முதல் Hotstar டிஜிட்டல் தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தை ராஜ் பி. ஷெட்டி (Light Buddha Films) தயாரிக்க ஜே.பி துமிநாட் இயக்கினார். ஷனீல் கவுதம், ஜே. பி. துமிநாட், சந்தியா அரகேரே, பிரகாஷ் துமிநாட், தீபக் ராய் பனாஜே, மைம் ரம்தாஸ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    • செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு.
    • எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என உற்று நோக்கப்படுகிறது.

    இதனிடையே, செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில்,

    செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு. செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது அவருக்கு பின்னடைவு அல்ல, அதை செய்தவருக்குத்தான் பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்.

    எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போன்று செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றார். 

    • தி.மு.க.வை வெல்ல ஒன்றிணைவது அவசியம் என்பதை தான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.
    • டி.டி.வி தினகரன் கூறுவதை போல் நாங்கள் யாரையும் குறைகூறவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டி.டி.வி. தினகரன் விலகியது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,

    தி.மு.க.வை வெல்ல ஒன்றிணைவது அவசியம் என்பதை தான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.

    டி.டி.வி தினகரன் கூறுவதை போல் நாங்கள் யாரையும் குறைகூறவில்லை. அதற்கான நபர்களும் தாங்கள் அல்ல.

    செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது உட்கட்சி விவகாரம், அதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல என்றார்.

    • தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
    • சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    மார்ச் 12-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27ந்தேதி மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி முடிவடைந்தது.

    6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதற்காக வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று அறிவித்தார்.

    15-வது புதுவை சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவை கூடத்தில் கூடுகிறது. பேரவையின் முன் வைக்க வேண்டிய சட்ட முன்வரைவுகள், ஏடுகள் இருந்தால் அவற்றை பேரவை முன் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதோடு, இந்த சட்ட பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். புதுச்சேரியில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. 2-வது சட்ட திருத்த மசோதா ஆகியவை சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.

    மேலும் சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெளியான அனைத்து மொழிகளிலும் லோகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தை இந்தி மொழியிலும் படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான அனைத்து மொழிகளிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இத்திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சென்னையில் வெற்றி விழா நடத்தப்பட்டது.

    அதில் பேசிய துல்கர் சல்மான் " படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. இப்படத்தை ஒரு புது முயற்சியாக தான் தயாரித்தேன். திரைப்படம் 5 பாகங்களாக உருவாக்க இருந்தோம், இப்பொழுது படத்தின் வரவேற்பை வைத்து அதிகம் எடுக்கலாம் என நினைத்துள்ளோம். படத்தின் லாபத்தை படக்குழுவிற்கு கண்டிப்பாக பகிர்வேன். அவர்களது உழைப்பால் மட்டுமே இது சாத்தியமானது" என குறிப்பிட்டார்.

    • செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
    • அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே கருத்து கூறினேன்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

    இதன்பின்னர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    இந்த நிலையில், அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே கருத்து கூறினேன். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன். 

    ×