என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மீனவர்கள் நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகபட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் செருதூர் சிங்காரவேலன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 49), பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பை சேர்ந்த இடும்பன் (47), ரெத்தினம் (25) பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணேசன் (55) ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். நேற்று நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் செல்போன் மற்றும் தொழில் நுட்ப கருவிகளை கேட்டனர். அவர்கள் தரமறுத்ததால் மீனவர்களை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலையில் அவர்கள் கரை திரும்பினர். கடற்கொள்ளையர்களால் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன் ஆகிய 3 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    இதைப்போல் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த பிரகதீஸ் (வயது 25), திரிசெல்வம் (44), சுந்தரவேல் (30), மீனவர் காலனி வெல்லப்பள்ளத்தை சேர்ந்த சாந்தகுமார் (28), அந்தோணிராஜ் ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 மீனவர்களையும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து 200 கிலோ எடையுள்ள மீன்பிடி வலை, செல்போன்கள், பேட்டரி, டார்ச் லைட், சார்ஜர், பெட்ரோல் கேன், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைப்போல் செருதூரில் இருந்து சென்ற மற்றொரு பைபர் படகில் இருந்து 4 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடமிருந்து மீன்பிடி வலை மற்றும் தொழில் நுட்பபொருட்களை பறித்து சென்றனர். இது தொடர்பாக கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தால் செருதூர் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த சம்பவம் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடித்த திரைப்படம் வேம்பு

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வாரந்தோறும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

    "கூலி"

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கூலி. . இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    ஜென்ம நட்சத்திரம்

    அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஒரு நொடி' பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியான படம் 'ஜென்ம நட்சத்திரம்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் இன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    வேம்பு

    இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு இயக்கத்தில், 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகிய ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வேம்பு. இதில், கதாநாயகியாக ஷீலா நடித்துள்ளார். இப்படம் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளது. இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

    "சயாரா"

    அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடித்த காதல் படம் சயாரா. இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    "மீஷா"

    எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ள படம் மீஷா. சுவாரஸ்யமான திரில்லர் கதையில் உருவான இந்த படத்தில் ஷைன் டாம் சாக்கோ, கதிர், சுதி கொப்பா ஆகிய நடித்துள்ளனர். இப்படம் மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    "சு ஃப்ரம் சோ"

    ஜே.பி.துமினாட் இயக்கிய நகைச்சுவை திரைப்படம் சு ஃப்ரம் சோ. இதில் ஷனீல் கௌதம், ஜேபி துமிநாட், சந்தியா அரகெரே, பிரகாஷ் துமிநாட் , தீபக் ராய் பனாஜே ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவையான இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் மூலம் கிராம வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது இந்தக் கதை. பேய் பிடிக்காத நாயகன் ஆனால் அந்த ஊரில் அவனுக்கு பேய் பிடித்தது போலவே நம்புகின்றனர். இதை வைத்து நாயகன் என்ன செய்தான் என்பதே படத்தின் ஒன் லைன். இப்படம் கடந்த 9ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    "டிடெக்டிவ் உஜ்வாலன்"

    மலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரில்லர் படம் 'டிடெக்டிவ் உஜ்வாலன்'. இந்த படத்தினை இந்திரனீல் கோபிகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஜி ஆகியோர் எழுதி இயக்கியுள்ளனர். இதில் டிடெக்டிவாக தியான் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார். இப்படம் சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    "டூ யூ வான்னா பார்ட்னர்"

    நடிகைகள் தமன்னா பாட்டியா மற்றும் டயானா பென்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வெப் தொடர் ''டூ யூ வான்னா பார்ட்னர்'' . இந்தத் தொடரை கரண் ஜோஹர், அதர் பூனவல்லா மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த தொடர் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    சென்னை:

    அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார விடுமுறை தினங்களான நாளை (சனிக்கிழமை), ஞாயிற்றுக் கிழமை மற்றும் முகூா்த்த தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    இதுபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பஸ்களும், நாளை 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் 20 பஸ்கள் என ஆக மொத்தம் 980 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார்.
    • ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் முன் வைத்தனர்.

    ஜனாதிபதி திரௌபதி முர்மு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதியாக இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மந்திரிகளும் முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி முன்னிலையில் காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

    முன்னதாக 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது ஜெகதீப் தன்கர் உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருந்தது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபில் உள்ளிட்டோர், ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பின்னர் என்ன ஆனார்? எங்கு போனார்? என்பது மர்மமாக இருப்பதாக பேசியிருந்தனர். ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் முன் வைத்தனர்.

    இதற்கிடையே அண்மையில் ஜெகதீப் தன்கர் டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்து பண்ணை வீட்டுக்கு குடிபெயர்ந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அவர் உடல்நிலை காரணமாக எங்கும் செல்லாமல் பூரண ஓய்வில் இருந்ததாக விஷயம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில் பதவி விலகி 53 நாட்கள் கழித்து 15வது துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் அவர் இன்று கலந்து கொண்டுள்ளார். பொது வெளியில் தோன்றியதன் மூலம் அவரின் நிலை குறித்து எழுந்த ஊகங்களுக்கு ஜெகதீப் தன்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  

    • சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு போன்ற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பயணிகள் பெறலாம்.
    • தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரில் டிக்கெட்டுகளை பெறலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

    சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்று பயணிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.
    • வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது.

    மத்திய அரசு, தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும், தொழிலாளர்களும் செலுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு தற்போது வழங்கி வரும் டிஜிட்டல் சேவையை மேலும் நவீன அம்சங்களுடன் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி அடுத்த மாதம் அமல்படுத்தப்பட உள்ளது.

    இதேபோல வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10, 11-ந்தேதிகளில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை பரிசாக இந்த வசதி அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ஸ்ருதிஹாசன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

    • இது பிரதமரின் தாய், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அவமானம் என பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.
    • காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டிக்கு வருகிற தேர்தலில் பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

    பீகார் மாநிலம் தர்பாங்காவில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வாக்காளர் அதிகார யாத்திரை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இது பா.ஜ.கவினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி கட்சியினரின் இந்த செயலுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் மோடியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்து இருந்தார்.

    பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக கூறப்படும் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரசார் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

    ஏ.ஐ.வடிவிலான அந்த வீடியோவில் பிரதமரின் அரசியல் பயணத்தை, அவரது தாயார் கண்டிப்பது போன்று பிரதமர் கனவு காண்பதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பிரதமரின் தாய், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அவமானம் என பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது:-

    காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி பிரதமரின் தாயாரை தொடர்ந்து அவமதிக்கிறது. இந்த செயல்கள் அனைத்தும் ராகுல்காந்தியின் கட்டளைப்படியே நடந்து வருகிறது.

    தொடர்ந்து பீகாரின் தாய்மார்கள், சகோதரிகளை கேலி கிண்டல் செய்து வரும் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டிக்கு வருகிற தேர்தலில் பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

    ஒரு கட்சி இந்தியாவின் ஏழைகளை இவ்வளவு வெறுப்பது உணர்ச்சியற்றது மட்டுமல்ல. வேதனையானது. காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது, நாட்டின் ஏழை மக்களை வெறுக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பா.ஜ.க.வை சேர்ந்த ஷேசாத் பூனவாலா என்பவர் கூறும்போது, காங்கிரஸ் மீண்டும் பிரதமரின் தாயாரை அவமதித்துள்ளது. இது இனி காந்தியின் காங்கிரஸ் அல்ல என தெரிவித்தார்.



    • கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், நடத்துநர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில், தமிழ்நாட்டு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீசார் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில், நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரமௌலியின் மனைவியும் மகனும் விரைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
    • துண்டிக்கப்பட்ட தலையை இரண்டு முறை உதைத்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார்.

    அமெரிக்காவில் மோட்டல் விடுதி ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்தவர் 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா என அடையாளம் காணப்பட்டுள்ளார். டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் கடந்த 10 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

    மோட்டலில் பணியாற்றிய கோபோஸ் மார்டினெஸ் தனது பெண் சக ஊழியருடன் மோட்டலில் ஒரு அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது சந்திரமௌலி அங்கு சென்றார்.

    ஏற்கனவே உடைந்திருந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இருப்பினும், சந்திரமௌலி இதைப் பற்றி கோபோஸிடம் நேரடியாகச் சொல்லாமல், அருகில் இருந்த பெண் ஊழியரிடம் சொன்னபோது, கோபோஸ் மிகவும் கோபமடைந்தார். சந்திரமௌலி தன்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்த கோபோஸ் கத்தி ஒன்றை எடுத்து வந்து சந்திரமௌலியைத் தாக்கினார்.

    உயிருக்கு பயந்து சந்திரமௌலி மோட்டல் பார்க்கிங் இடத்திற்குள் ஓடினார். இருப்பினும் கோபோஸ் அவரைத் துரத்திச் சென்று கொடூரமாகத் தாக்கினார்.

    அலறல் சத்தம் கேட்டு, மோட்டல் முன்னறையில் இருந்த சந்திரமௌலியின் மனைவியும் மகனும் விரைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் கோபோஸ் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சந்திரமௌலியின் தலையை துண்டித்தார். பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை இரண்டு முறை உதைத்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் சந்திரமௌலியை கத்தியால் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  

    ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ப்ளாக்மெயில்

    வாரம் வாரம் தமிழ் சினிமா துறையில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சிலவை ஹிட்டாகிரது சில திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் இன்ரு வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களை இப்பதிவில் பார்ப்போம்.

    ப்ளாக்மெயில்

    ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம். இப்படத்தை மு மாறன் எழுதி இயக்கியுள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். இது ஒரு அதிரடி கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

    பாம்

    விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளி வெங்கட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் உருவாகியுள்ளது பாம் திரைப்படம். இது ஒரு நகைச்சுவையான திரைப்படமாக வெளியாகியுள்ளது.

    தணல்

    அறிமுக இயக்குநரான ரவீந்தர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் தணல் திரைப்படம் உருவாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் அதிரடி திரில்லராக உருவாகியுள்ளது.

    யோலோ

    சாம் எஸ் இயக்கத்தில் தேவிகா, ஆகாஷ் மற்றும் கிரி த்வாரகிஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ளது யோலோ திரைப்படம்.

    குமாரசம்பவம்

    பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் தங்கராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் பாயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், பால சரவணன் , கி.எம் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டீமன் ஸ்லேயர்

    ஜபானிய மாங்கா தொடரின் அடுத்த பாகமாக டீமன் ஸ்லேயர் படத்தை உருவாக்கியுள்ளனர். அனிமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. 

    இத்திரைப்படங்களுடன் மிராய், காயல், உருட்டு உருட்டு போன்ற திரைப்படங்களும் வெளியாகியுள்ளது.

    • பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை, வாகன நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதற்கேற்ப பொது போக்குவரத்து வசதியையும் அரசு கூடுதலாக செய்து வருகிறது.

    இதையொட்டி சிறிய தெருக்களிலும் பஸ்கள் செல்வதற்காக மினி பஸ் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    தமிழக அரசின் திட்டத்தின்படி 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயங்கும் வகையில் குறைந்தது 5 ஆயிரம் மினி பஸ்கள் இப்போது தேவைப்படுகிறது.

    இந்த சூழலில் மினி பஸ் சேவைக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    குக்கிராம மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    அதன்படி மினி பஸ்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் வேன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை மினி பஸ்களாக இயக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் பஸ்களை போன்று இந்த வேன்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பஸ்களில் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணம் செய்யும் வாகனங்களில் 150 முதல் 200 செ.மீ உயரமும் இருக்கலாம்.

    இப்போது வேன்களை மினி பஸ்களாக இயக்குவதற்காக பொதுப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ. என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

    இனி நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்கும் வாகனங்கள் 150 முதல் 200 செ.மீ. உயரமும் இருக்கலாம்.

    இந்த தளர்வு மேக்சி-கேப்ஸ் போன்ற சிறிய 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் மினி பஸ் திட்டத்தில் இணைய உதவும்.

    இதுபற்றி போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் ஆர்.கஜலட்சுமி கூறுகையில், 'இதன் மூலம் இம்மாத இறுதிக்குள் 2000 வேன்கள் பொதுப்போக்குவரத்து சேவையில் இணையும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக இந்த வகை வேன்களின் உயரம் குறைவாக இருக்கும் என்பதால் நின்று கொண்டு பயணிக்க அனுமதி கிடையாது.

    இது மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த புதிய திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில், வேன்களை மினி பேருந்துகளாக மாற்றி பயன்படுத்தும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யுங்கள். இதுபற்றி விரிவான அறிக்கையை அடுத்த ஒரு மாதத்தில் சமர்பிக்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மினி பஸ் வசதிகள் தேவைப்படுகின்றன என்பது பற்றி விவரங்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வேன்களை மினி பஸ்களாக மாற்றும் திட்டத்தின் மூலம் பள்ளி வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை பொதுப் போக்குவரத்து வசதிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகப்படியானோரை ஏற்றி செல்லக் கூடாது. தொங்கி கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

    ×