என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடியின் அரசியலை அவரது தாயார் கண்டிப்பது போன்று ஏ.ஐ. வீடியோ - காங்கிரசுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்
    X

    மோடியின் அரசியலை அவரது தாயார் கண்டிப்பது போன்று ஏ.ஐ. வீடியோ - காங்கிரசுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்

    • இது பிரதமரின் தாய், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அவமானம் என பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.
    • காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டிக்கு வருகிற தேர்தலில் பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

    பீகார் மாநிலம் தர்பாங்காவில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வாக்காளர் அதிகார யாத்திரை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இது பா.ஜ.கவினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி கட்சியினரின் இந்த செயலுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் மோடியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்து இருந்தார்.

    பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக கூறப்படும் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரசார் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

    ஏ.ஐ.வடிவிலான அந்த வீடியோவில் பிரதமரின் அரசியல் பயணத்தை, அவரது தாயார் கண்டிப்பது போன்று பிரதமர் கனவு காண்பதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பிரதமரின் தாய், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அவமானம் என பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது:-

    காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி பிரதமரின் தாயாரை தொடர்ந்து அவமதிக்கிறது. இந்த செயல்கள் அனைத்தும் ராகுல்காந்தியின் கட்டளைப்படியே நடந்து வருகிறது.

    தொடர்ந்து பீகாரின் தாய்மார்கள், சகோதரிகளை கேலி கிண்டல் செய்து வரும் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டிக்கு வருகிற தேர்தலில் பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

    ஒரு கட்சி இந்தியாவின் ஏழைகளை இவ்வளவு வெறுப்பது உணர்ச்சியற்றது மட்டுமல்ல. வேதனையானது. காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது, நாட்டின் ஏழை மக்களை வெறுக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பா.ஜ.க.வை சேர்ந்த ஷேசாத் பூனவாலா என்பவர் கூறும்போது, காங்கிரஸ் மீண்டும் பிரதமரின் தாயாரை அவமதித்துள்ளது. இது இனி காந்தியின் காங்கிரஸ் அல்ல என தெரிவித்தார்.



    Next Story
    ×