என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
    • அணை பகுதியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அதன்படி நீர்வரத்து 1697 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.15 அடியாக உள்ளதால், நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2195 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆற்றில் சீறி பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக, தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் கே.ஆர்.பி. அணை போலீசார் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அணை பகுதியை பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதே போல் ஆற்றங்கரை யோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • இரண்டு மாதங்களாக எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன்.
    • இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ.40,59,220 செலுத்தியுள்ளோம்.

    சென்னை:

    பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக எனது கவனத்திற்கு வந்தது.

    1. இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் We the Leaders' அறக்கட்டளை. இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே, இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என்று நான் கருதுகிறேன்.

    ஆம். கடந்த ஜூலை 12, 2025 அன்று, விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10, 2025 காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி திருமதி. அகிலா அவர்களுக்கு எனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது.

    இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ.40,59,220 செலுத்தியுள்ளோம்.

    மேலும், நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான்

    2. நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள நமது இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.

    தமிழகத்தில், பாஜக மாநிலத் தலைவரானதிலிருந்து, கடந்த ஏப்ரல் 2025 வரை என் குடும்பத்துடன் செலவிட எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம். தற்போது, எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் சில ஆர்வக்கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்.

    இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள். குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.



    • இரண்டு லட்சம் பேரை திரட்டி மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
    • கிராம கமிட்டிகளை உடனடியாக முழு அளவில் தயார் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நெல்லையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் டெல்லி பிரதிநிதி க்ரிஷ் சோடங்கர் கலந்து கொண்டார்.

    இந்த மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து தமிழகத்தில் கிராம கமிட்டிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தவும் அதில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் அவர் தமிழகத்திற்கு வருவதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். இதை அடுத்து இரண்டு லட்சம் பேரை திரட்டி மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    இதற்காக கிராம கமிட்டிகளை உடனடியாக முழு அளவில் தயார் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த மாநாட்டை சென்னை அல்லது திருச்சியில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் ராகுல் கொடுக்கும் தேதியை பொறுத்து இடமும் தேதியும் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • வெடிகுண்டு மிரட்டல் குறித்து நீதிபதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • டெல்லி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    டெல்லி ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பதிவாளர் ஜெனரலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் குறித்து நீதிபதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் நீதிமன்ற அறைகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இன்று நடைபெற இருந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.

    இந்நிலையில் டெல்லி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நீதிமன்றம் காலி செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் வருகிற 16-ந்தேதி சென்னையில் கூட்டம் நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் பா.ஜ.க. அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசிக்க உள்ளார்.

    தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் வருகிற 16-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் 2026 தேர்தலுக்கான வியூகம், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தலைவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் பா.ஜ.க. அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசிக்க உள்ளார்.

    கூட்டணி முரண்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என்றும், பா.ஜ.க. தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    OG படத்தை சுஜித் இயக்கியுள்ளார்

    பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து தே கால் ஹிம் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    பவன் கல்யாணுடன் பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது. பிரியங்கா மோகனின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. படத்தில் கண்மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ரிலீசை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் டிரெய்லர் வரும் செப்- 18 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது.

    படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர். 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அடையாறு: எல்லையம்மன் கோவில் தெரு, வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அபிராஞ்சி அவென்யூ, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் 7 முதல் 13வது குறுக்குத் தெருக்கள் மற்றும் 1வது பிரதான சாலை.

    • விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

    அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.

    இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை செல்கிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அரை மணிநேரம் உரையாற்றுகிறார்.

    முன்னதாக பிரசார வாகனம் இன்று மாலைக்குள் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்படுகிறது. திருச்சி பிரசாரத்தை முடித்துக் கொண்டு காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு வழியாக பால் பண்ணை சென்று சிதம்பரம் பைபாஸ் வழியாக அரியலூர் புறப்பட்டு செல்கிறார்.

    பின்னர் அரியலூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மதியம் 12 மணியளவில் திறந்த வெளி வாகனத்தில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

    அதன் பின்னர் அங்கிருந்து மருதையான் கோவில் வழியாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் புறப்பட்டு செல்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு இடங்களில் 21 நிபந்தனைகளுடன் ஒரு மணி நேரம் பேச காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. குன்னம் பஸ் நிலையத்தில் மாலை 4 மணிக்கு பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் பேரளி வழியாக பெரம்பலூர் நான்கு ரோடு பாலக்கரை சங்குப்பேட்டை வழியாக மேற்கு வானொலி திடல் செல்கிறார். அங்கு மாலை 5 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.

    திருச்சியில் ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள அக்கட்சியினர் அனுமதி கோரினர். ஆனால் மரக்கடை பகுதியில் ஓரிடத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. விஜய்யை வரவேற்று ஆங்காங்கே பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது.



    சாலைகளில் கட்சிக் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் பிரசாரக் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் வார இறுதி நாள் என்பதால் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பல்லாயிரக்கணக்கில் திரளாக பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

    விஜய் வருகையால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரது இந்த சுற்றுப்பயணம் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விஜய் வருகையை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 2 நாட்களாக மூன்று மாவட்டங்களிலும் முகாமிட்டு முன்னேற்பாடு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். பெரம்பலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார். நாளை தொடங்கும் விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதனிடையே, விஜய்யின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுப்பயண லோகோவில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் விஜய் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. மேலும் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

    அண்ணா அட்சி அமைத்த 1967, எம்ஜிஆர் ஆட்சி அமைத்த 1977 ஆண்டுகளுடன் 2026-ஐ குறிப்பிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    • போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
    • அர்ஜென்டினாவுக்கு தப்பியோடும் அவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது.

    பிரேசில் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிதக்கப்படட்டது.

    கடந்த 2022ம் ஆண்டு நடந்த பிரேசில் தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ தோல்வியடைந்தார்.

    தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் தோல்வி அடைந்ததாக குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இடையில் அர்ஜென்டினாவுக்கு தப்பியோடும் அவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது.

    இந்நிலையில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்ததால் அவருக்கு தண்டனை விதிக்கப்ட்டுள்ளது.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் போல்சனாரோ தீர்ப்பை எதிர்த்து 11 நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    • மீனவர்கள் நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகபட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் செருதூர் சிங்காரவேலன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 49), பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பை சேர்ந்த இடும்பன் (47), ரெத்தினம் (25) பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணேசன் (55) ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். நேற்று நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் செல்போன் மற்றும் தொழில் நுட்ப கருவிகளை கேட்டனர். அவர்கள் தரமறுத்ததால் மீனவர்களை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலையில் அவர்கள் கரை திரும்பினர். கடற்கொள்ளையர்களால் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன் ஆகிய 3 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    இதைப்போல் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த பிரகதீஸ் (வயது 25), திரிசெல்வம் (44), சுந்தரவேல் (30), மீனவர் காலனி வெல்லப்பள்ளத்தை சேர்ந்த சாந்தகுமார் (28), அந்தோணிராஜ் ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 மீனவர்களையும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து 200 கிலோ எடையுள்ள மீன்பிடி வலை, செல்போன்கள், பேட்டரி, டார்ச் லைட், சார்ஜர், பெட்ரோல் கேன், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைப்போல் செருதூரில் இருந்து சென்ற மற்றொரு பைபர் படகில் இருந்து 4 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடமிருந்து மீன்பிடி வலை மற்றும் தொழில் நுட்பபொருட்களை பறித்து சென்றனர். இது தொடர்பாக கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தால் செருதூர் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த சம்பவம் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடித்த திரைப்படம் வேம்பு

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வாரந்தோறும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

    "கூலி"

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கூலி. . இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    ஜென்ம நட்சத்திரம்

    அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஒரு நொடி' பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியான படம் 'ஜென்ம நட்சத்திரம்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் இன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    வேம்பு

    இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு இயக்கத்தில், 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகிய ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வேம்பு. இதில், கதாநாயகியாக ஷீலா நடித்துள்ளார். இப்படம் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளது. இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

    "சயாரா"

    அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடித்த காதல் படம் சயாரா. இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    "மீஷா"

    எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ள படம் மீஷா. சுவாரஸ்யமான திரில்லர் கதையில் உருவான இந்த படத்தில் ஷைன் டாம் சாக்கோ, கதிர், சுதி கொப்பா ஆகிய நடித்துள்ளனர். இப்படம் மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    "சு ஃப்ரம் சோ"

    ஜே.பி.துமினாட் இயக்கிய நகைச்சுவை திரைப்படம் சு ஃப்ரம் சோ. இதில் ஷனீல் கௌதம், ஜேபி துமிநாட், சந்தியா அரகெரே, பிரகாஷ் துமிநாட் , தீபக் ராய் பனாஜே ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவையான இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் மூலம் கிராம வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது இந்தக் கதை. பேய் பிடிக்காத நாயகன் ஆனால் அந்த ஊரில் அவனுக்கு பேய் பிடித்தது போலவே நம்புகின்றனர். இதை வைத்து நாயகன் என்ன செய்தான் என்பதே படத்தின் ஒன் லைன். இப்படம் கடந்த 9ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    "டிடெக்டிவ் உஜ்வாலன்"

    மலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரில்லர் படம் 'டிடெக்டிவ் உஜ்வாலன்'. இந்த படத்தினை இந்திரனீல் கோபிகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஜி ஆகியோர் எழுதி இயக்கியுள்ளனர். இதில் டிடெக்டிவாக தியான் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார். இப்படம் சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    "டூ யூ வான்னா பார்ட்னர்"

    நடிகைகள் தமன்னா பாட்டியா மற்றும் டயானா பென்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வெப் தொடர் ''டூ யூ வான்னா பார்ட்னர்'' . இந்தத் தொடரை கரண் ஜோஹர், அதர் பூனவல்லா மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த தொடர் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    சென்னை:

    அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார விடுமுறை தினங்களான நாளை (சனிக்கிழமை), ஞாயிற்றுக் கிழமை மற்றும் முகூா்த்த தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    இதுபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பஸ்களும், நாளை 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் 20 பஸ்கள் என ஆக மொத்தம் 980 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×