என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • உலக முதுகெலும்புடைய உயிரிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை என அறியப்படுகிறது.
    • உலக மீன்பிடி உற்பத்தியில் சீனா முன்னணியில் இருந்து வருகிறது.

    உலக மீன்வள, மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந் தேதி இன்று உலகம் முழுவதிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. மீன்வளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கொண்டாடுவதும் தான் இதன் முக்கிய நோக்கமாகும்.

    நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என வியப்பாக சொல்வதுண்டு. உலக முதுகெலும்புடைய உயிரிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை என அறியப்படுகிறது.

    இந்த எண்ணிக்கையின் சூழலில் 536 மீன் குடும்பங்கள், 5,324 பேரினங்களை உள்ளடக்கிய மீன்கள் கூட்டம் மற்றும் 37 ஆயிரத்து 424 சிற்றின மீன் இனங்களாக அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது உயிரியல் ஆய்வில் ஓர் அதிசயம்.

    உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உலக மீன்வளம் மற்றும் நீருயிரின் வளர்ப்பின் நிலை 2024-ம் ஆண்டு அறிக்கையின்படி உலகளாவிய பிடிப்பு மீன்வளம் 92.3 மில்லியன் டன்களை எட்டியிருக்கிறது. இதில் கடல் மீன்பிடிப்பு 81 மில்லியன் டன்களாகவும், உள்நாட்டு மீன்பிடிப்பு 11.3 மில்லியன் டன்களாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. உலக மீன்பிடி உற்பத்தியில் சீனா முன்னணியில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா, பெரு மற்றும் ரஷியா கூட்டமைப்பு போன்ற நாடுகள் மீன்பிடி உற்பத்தியில் இருந்து வருகின்றன.

    தற்போது கடல்நீர் வெப்பமடைதல், அமிலமயமாதல், வாழ்விடச் சீரழிவு, அசாதாரண வானிலை நிகழ்வுகள் போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு, வேதிப்பொருள் போன்ற மாசுபாட்டின் விளைவுகள் உலக மீன்வளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    ஆகவே உலகளாவிய மீன்வளத்தின் எதிர்காலத்தையும், அவற்றைச் சார்ந்திருக்கும் சமூகங்களையும் உறுதிப்படுத்த, கடலோர கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மை மிக முக்கியமானது. மேலும் நிலையான மீன்பிடி முறைகள், ஆரோக்கியமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே உலக மீன்வள நாளின் முக்கிய நோக்கமாகும்.

    • ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
    • பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது.

    சென்னை:

    ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது அது எளிதாகிவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக்கொள்ளலாம். அதேபோல இப்போது பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுகிறது.

    தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

    அதன்படி ஒரு சொத்தின் உரிமையாளர் யார், அவரது பெயர் என்ன? இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது? அதோடு வங்கியில் இந்த சொத்து அடமானத்தில் இருக்கிறதா? இந்த சொத்தின் மீது என்னென்ன பறிமாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பதை பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

    அதே நேரத்தில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டாவில், பத்திரப்பதிவுத்துறை வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல் அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தமிழக அரசு, அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது''பட்டா வரலாறு" என்ற புதிய சேவையை பொதுமக்களுக்காக கொண்டு வந்துள்ளது.

    இதன் மூலம், அந்த நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள், பெயர் எப்போது மாற்றப்பட்டது, எந்த ஆணையின் பேரில் மாற்றம் நடைபெற்றது, பட்டா எந்த காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.

    இந்த பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பட்டா வில்லங்க சான்றிதழ் பெற பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். சோதனை முறை வெற்றி பெற்றுவிட்டால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார். மேலும் தற்போதைய நிலையில் இந்த பட்டா வரலாறு 2014-ம் ஆண்டு முதல்தான் இப்போதைக்கு எடுக்க முடியும்.

    • இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கண்புரை 82 சதவீதம், விழித்திரை பாதிப்பு 5.6 சதவீதம், நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1 சதவீதம், கண் நீரழுத்த நோய் பாதிப்பு 1.3 சதவீதம் மற்றவை 10.1 சதவீதம் ஆகும். 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 214 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளி குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும்.
    • காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வால், தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளையும், நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

    24-ந்தேதி (திங்கட்கிழமை) கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    • சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை பாஜக அரசு வழங்கியுள்ளது.
    • தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை பாஜக அரசு நிராகரித்திருக்கிறது.

    கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை , கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். அதாவது, " 2011 -ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகராட்சியின் மக்கள் தொகை (257 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சி.எம்.சி) 15.85 இலட்சம் கொண்டுள்ளது மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ கொண்ட எல்.பி.ஏ)

    7.7 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. அதனைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்க வேண்டும்" என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

    2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை ஒன்றிய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் அந்தப் புள்ளி விவரங்களை வைத்து இந்த திட்டங்களை நிராகரித்திருப்பது சரியானது அல்ல. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது. இதை ஒன்றிய அரசு தெரிந்திருந்தோம் கவனத்தில் கொள்ளாதது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.

    மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம். இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

    கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசு, தனது போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும்; இல்லையேல் தமிழ்நாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • மூத்த உறுப்பினர் முத்துவேலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேசினார்.
    • இதைக் கண்டு சிவகுமார் ஆனந்த கண்ணீர் விட்டார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் 41-வது நாளாக நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் ஆலங்குளம் தொகுதி சார்பில் பங்கேற்ற தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசிய சிவகுமார், "எங்க அப்பா முத்துவேல் 1967-ல் இருந்து திமுக உறுப்பினர். இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. உங்க கூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா?'" என கோரிக்கை விடுத்தார்.

    உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அப்பாவுக்கு போன் பண்ணுங்க, நானே பேசி வரச் சொல்லுறேன்" என கூறி, அவரது தந்தையுடனும் போனில் பேசினார். இதைக் கண்டு சிவகுமார் ஆனந்த கண்ணீர் விட்டார்.

    இந்நிலையில் நேற்று தொலைபேசியில் பேசிய ஆலங்குளம் மூத்த உறுப்பினர் முத்துவேலை நேரில் அழைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கவுரவித்தார்.

    அப்போது முதலமைச்சரிடம் பேசிய முத்துவேல், "எனது மகன்களுக்கு திராவிடமணி, ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கிறேன்" என்று கூறி பெருமிதம் அடைந்தார்.

    • தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
    • சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.

    வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    • பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல்.
    • திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை.

    தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக திமுக அரசு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

    சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் பொம்மை முதல்வர்.

    இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

    மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.

    ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவு படுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது.

    எதிர்க்கட்சியாக இருக்கும் போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை!

    தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர்.
    • காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.

    இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.

    அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர். காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சேலத்தில் விஜய் வேறுதேதியில் பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி

    டிசம்பர் 4-ந் தேதிக்கு பதில் வேறு தேதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்குமாறு விஜய் தரப்புக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் கார்த்திகை தீபம், ஜெயலலிதா நினைவு தினம், பாபர் மசூதி இடிப்பு தினம் வரிசையாக உள்ளதால் வேறு தேதியில் பிரச்சாரம் மெற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    • SIR குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம்.
    • தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 300க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்.

    இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு திமுகவிற்கு என்ன அச்சம். முதல்வர் ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    SIR குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் கொடுத்த பிறகு சிவி சண்முகம் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் மேலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    SIR விண்ணப்ப படிவங்களை BLO களிடம் பறித்து திமுகவினரே நிரப்பி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

    தமிழக வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் யார் யார் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதை திமுகவினரை முடிவு செய்கிறார்கள் தேர்தல் ஆணையத்தின் அத்தனை அதிகாரங்களையும் அவர்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 300க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட ராகுல் காந்தி இதே போன்ற ஆதாரங்களை தான் வெளியிட்டு வாக்கு திருட்டு புகார்களை கூறியிருந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 34 லட்சத்து 2998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் பச்சைப் பொய்யை கூறி வந்தனர்.
    • ரூ.11.32 லட்சம் கோடிக்கு திமுக அரசு கையெழுத்திட்டிருப்பது அனைத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான்.

    திமுக கட்டமைத்த பொய் கோட்டைகளை தொழில் அமைச்சரே தகர்த்திருப்பது தான் பா.ம.க.வின் வெற்றி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் என்ற பெயரில் திமுக அரசு நடத்தி வரும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் சென்னையில் நேற்று நான் வெளியிட்ட திமுக அரசின் தொழில் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தில் இடம்பெற்றுள்ள உண்மைகளை மறுப்பதாகக் கூறி தொழில்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

    ஆனால், பாவம்... பா.ம.க.வின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவை அனைத்தையும் அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

    இது பாமகவின் வெற்றி, தி.மு.க. அரசின் மீது பாட்டாளி மக்கள் சுட்சி தொடர்ந்து முன்வைத்து வந்த குற்றச்சாட்டும், வழங்கி வந்த அறிவுறுத்தலும் என்னவென்றால், தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்றப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்கள் எத்தனை? அவற்றின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் எவ்வளவு? என்பதை மூடி மறைக்காதீர்கள் என்பதும், அந்த விவரங்களை முழுமையாக வெளியிடுங்கள் என்பதும் தான்.

    ஆனால், திமுக அரசும், அதன் முதலமைச்சராகிய மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன்மூலம் 34 லட்சத்து 2998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் பச்சைப் பொய்யை கூறி வந்தனர்.

    அவர்கள் கூறுவது பொய் என்பதால் தான் தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்தது. ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், தங்களின் பொய்மூட்டைகள் அம்பலமாகிவிடும் என்பதால் பல்வேறு காரணங்களைக் கூறி அதற்கு திமுக அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

    இத்தகைய சூழலில் தான் திமுக அரசின் பொய் முதலீடுகளை அம்பலப்படுத்தும் நோக்குடன், திமுக அரசின் தொழில் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை சென்னையில் நேற்று நான் வெளியிட்டேன். அதில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்த உண்மை என்னவெனில், ரூ.11.32 லட்சம் கோடிக்கு திமுக அரசு கையெழுத்திட்டிருப்பது அனைத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான்; அந்த முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்பது தான்.

    மேலும், 2021-ம் ஆண்டு முதல் திமுக அரசு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவு; விழுக்காடு அடிப்படையில் அது 8.8% மட்டும் தான் என்பதை அந்த ஆவணத்தில் ஆண்டுவாரியான ஆதாரங்களுடன் நான் விளக்கியிருந்தேன்.

    அதன் பயனாக, நேற்று முன்நாள் வரை ரூ.11.32 லட்சம் கோடி முதலீடும் வந்து குவிந்து விட்டதைப் போலவும், அதன் காரணமாக 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதைப் போலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வந்த தொழில்துறை அமைச்சர், நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதன்முறையாக, 2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23 விழுக்காடும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 16 விழுக்காடும் வணிக உற்பத்தியை தொடங்கியிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    மொத்த ஒப்பந்தங்களில் 80 விழுக்காடும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 77 விழுக்காடும் செயலாக்கம் பெற்று விட்டதாக அவர் கட்டி வைத்த பொய்கோட்டையை இதன் மூலம் அவரே தகர்த்துள்ளார்.

    தொழில் துறை அமைச்சர் கூறியவாறு 2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23% முதலீடுகள் கூட முழுமையாக வரவில்லை என்பது தான் உண்மை. அதற்கு இரு சான்றுகளை மட்டும் இங்கு முன்வைக்கிறேன்.

    அமைச்சரின் கூற்றுப்படி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்திய நிறுவனங்களில் ஹூண்டாய். வின்ஃபாஸ்ட் மகிழுந்து நிறுவனங்கள் முதன்மையானவை. ஹுண்டாய் நிறுவனம் கடந்த 11.05.2022-ஆம் நாள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ரூ.20 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது.

    ஆனால், சுமார் ரூ.500 கோடி அளவுக்கு தான் முதலீடு செய்துள்ளது. அரசின் -கணக்குப்படி அந்த ஒப்பந்தம் செயலாக்கம் பெற்றுவிட்டது. ஆனால், அதில் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 2.5% மட்டும் தான் வந்துள்ளது. இதை எவ்வாறு முழுமையான செயலாக்கமாக எடுத்துக் கொள்ள முடியும்?

    அடுத்ததாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 07.01.2024 ஆம் நாள் தமிழக அரசுடன் செய்து கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி வின்ஃபாஸ்ட் மகிழுந்து நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு செய்யவும். அதன் மூலம் 3500 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் ஒப்புக்கொண்டது.

    அதன்படி வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் அதன் ஆலையை அமைத்து 04.08.2025ஆம் நாள் மகிழுந்து உற்பத்தியை தொடங்கி உள்ளது. ஆனால், அந்த நிறுவனம் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் ரூ.4000 கோடியை, அதாவது 25% மட்டுமே முதலீடு செய்துள்ளது; 400 பேருக்கு. அதாவது 11.5% மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

    இதேபோல், செயலாக்கம் பெற்று விட்டதாக தொழில்துறை அமைச்சர் குறிப்பிடும் 23% ஒப்பந்தங்களிலும் அரைகுறையாகவே முதலீடுகள் வந்துள்ளது. செயலாக்கம் பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விழுக்காட்டைக் கூறிய அமைச்சர், அவற்றின் மூலம் கிடைத்த முதலீட்டின் மதிப்பைத் தெரிவித்தால், அது பாட்டாளி மக்கள் கட்சியால் தெரிவிக்கப்பட்ட 8.8% (ரூ.1 லட்சம் கோழி என்ற அளவுடன் ஒத்துப் போகும். வேண்டுமானால், தொழில்துறை அமைச்சர் கூட்டிக் கழித்துப் பார்க்கட்டும்... பா.ம.க.வின் கணக்கு சரியாகவே இருக்கும்.

    இரண்டாவதாக, புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பாக குறிப்பிட்டு வந்த தொழில் துறை அமைச்சர், இப்போது முதன்முறையாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு.MoU என்பது முதலீட்டு 'உறுதிமொழிகள்' தான் (Commitments என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

    மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்தத் தொகையும் முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது. முதலீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி

    அடிப்படை புரிதல் இல்லாதவர்கள் மட்டுமே இத்தகைய அரைவேக்காட்டுதனமான அனுமானங்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் தொழில்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

    கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள், அளித்த பேட்டிகள் ஆகியவற்றையும், தொழில்துறை அமைச்சரே கடந்த காலங்களில் வெளியிட்ட அறிக்கைகளையும் அவர் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.

    அப்போது தான் கடந்த காலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாளிலேயே ஒட்டுமொத்த முதலீடும் தமிழ்நாட்டு வந்து விட்டதாக கூறி வந்த அவர்கள் இருவரும் தான் அரைவேக்காட்டுதனமான அனுமானங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்பதும், அவர்களின் நினைப்பு தான் குழந்தைத்தனமானது என்பதும் அனைவருக்கும் உறுதியாக தெரியவரும்.

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிய வேண்டும்; முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உயர வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகள் வந்தால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் நபர் நானாகத் தான் இருப்பேன். ஆனால், திமுக ஆட்சியில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தான் குறைகளை சுட்டிக் காட்டுகிறேன்.

    தொழில்துறை அமைச்சராக இருப்பவருக்கு மாநிலத்தின் நலனில் அக்கறையும், நேர்மையும் இருக்க வேண்டும். அவை இல்லாத தொழில்துறை அமைச்சரால் நிர்வகிக்கப்படும் துறையில் முதலீடுகள் வராது, மோசடிகளும், பொய்களும் தான் வரிசை கட்டி வரும். தமிழ்நாடு இப்போது இதைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திரத்திற்கும், தெலுங்கானாவுக்கு செல்வதற்கு காரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் தான். தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் தொடங்கி, நிலம் ஒதுக்குவது வரை அனைத்திலும் திமுக அரசின் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷனை தாங்கிக் கொள்ள முடியாததால் தான் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றன. இவை அனைத்தும் இன்னும் 3 மாதங்களுக்குத் தான்.

    அதன்பிறகு அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் ஆட்சியில், தொழில்துறை தூய்மையாக்கப்படும். பிற நாடுகளும், பிற மாநிலங்களும் தொழில் முதலீடு செய்ய தேடி வரும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
    • அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால், அவற்றை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் வருத்தமளிக்கின்றன.

    நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும். எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×