search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு
    X

    கொடைக்கானலில் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு

    • நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • கொடைக்கானலில் 3 பெட்ரோல் பங்குகள் உள்ளன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 13ந் தேதி 2வது சனிக்கிழமையை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. இதனால் அனைத்து ஓட்டல்கள், விடுதிகளும் நிரம்பி வழிந்தன. முக்கிய சுற்றுலா இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் மோட்டார் சைக்கிள்களில் அண்டை மாவட்டங்களில் இருந்து வாலிபர்கள் கொடைக்கானலுக்கு வருகை தருவது அதிகரித்து வருகிறது. இதனால் கார்கள், வேன்கள் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள்களின் நெரிசலாலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் விடுமுறையை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்ப நினைத்த சுற்றுலா பயணிகளுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்காமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடைக்கானலில் 3 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த 3 பங்குகளிலும் பெட்ரோல், டீசல் இல்லாததால் சுற்றுலா பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

    கொடைக்கானலுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் லாரிகள் பழனி சாலையில் மட்டுமே வருகிறது. கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு பெட்ரோல், டீசலுடன் வந்த லாரிகள் மலைச்சாலையை கடக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டன.

    காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இதே நிலை நீடித்ததால் அனைத்து பெட்ரோல் பங்குகள் முன்பாக ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தன. போக்குவரத்து சீரானதும் கோவையில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் லாரிகள் கொடைக்கானல் நகரை அடைந்தது. இதனைத் தொடர்ந்து தட்டுப்பாடு முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் கொடைக்கானலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×