search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராசிபுரம் அருகே விவசாயி கொலையில் மகன்கள் உள்பட 3 பேர் கைது
    X

    ராசிபுரம் அருகே விவசாயி கொலையில் மகன்கள் உள்பட 3 பேர் கைது

    • ராசிபுரம் அருகே விவசாயி கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • விவசாயி கொலையில் மகன்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆயில்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 55). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

    இவருக்கு பாலமணிகண்டன், பரணிகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலசுப்பிரமணியன் தன்னுடைய அக்காள் மகள் லாவண்யாவை மூத்த மகன் பாலமணிகண்டனுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக பாலமணிகண்டன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாலமணிகண்டனின் மனைவி லாவண்யா கோபித்து கொண்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

    பின்னர் லாவண்யா ஆயில்பட்டிக்கு வந்து, தன்னுடைய குழந்தையை அழைத்து கொண்டு மீண்டும் திருப்பூருக்கு சென்றுவிட்டார். தனது குழந்தையை தந்தை பாலசுப்பிரமணியன் தான், லாவண்யாவுடன் அனுப்பி வைத்து விட்டதாக பாலமணிகண்டன் எண்ணினார்.

    மேலும் லாவண்யா தன்னுடன் வாழாததற்கு காரணமும் தந்தை பாலசுப்பிரமணியன் தான் என்று கருதி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பாலமணிகண்டன், இவருடைய தம்பி பரணிகுமார், உறவினர் சீனிவாசன் ஆகிய 3 பேரும் நேற்று மாலை பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பாலசுப்பிரமணியனை 3 பேரும் கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாலமணிகண்டன், பரணிகுமார், சீனிவாசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான பாலமணிகண்டன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்ததால் தந்தையை அடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

    கைதான 3 பேரும் இன்று ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×