search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நண்பர் மரணத்துக்கு பழிவாங்க ரவுடியை கொன்ற கும்பல்
    X

    நண்பர் மரணத்துக்கு பழிவாங்க ரவுடியை கொன்ற கும்பல்

    • போலீசார் தலைமறைவாக உள்ள ஒன்றரை கவுதம் உள்பட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • நானும், கோகுலும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். நீதிமன்றத்திற்கு போக துணைக்கு என்னை அழைத்து வந்தார்.

    கோவை:

    கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது23). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்கு உள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக கோவை ஜே.எம்.2 கோர்ட்டுக்கு வந்தார்.

    அவருடன் அவரது நண்பரான மனோஜூம் வந்தார். கையெழுத்து போட்ட பின்னர் கோகுல், தனது நண்பருடன் கோர்ட்டுக்கு பின்புறம் உள்ள டீ கடைக்கு சென்றார்.

    அப்போது அவரை 5 பேர் கும்பல் பின் தொடர்ந்து வந்தது. சிறிது நேரத்தில் அந்த கும்பைலை சேர்ந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோகுலை நோக்கி ஓடி வந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியான அவர் தப்பிப்பதற்காக நண்பருடன் ஓட்டம் பிடித்தார். ஆனால் கும்பல் விடாமல் துரத்தி சென்று கோகுலை சுற்றி வளைத்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றனர். அதனை தடுக்க வந்த கோகுலின் நண்பர் மனோஜையும் வெட்டினர்.

    கோகுல் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் 5 பேரும் எதுவும் நடக்காதது போல சட்டையில் ரத்தக்கறையுடன் சர்வசாதாரணமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் 5 பேர் கோகுலை கொன்று விட்டு அரிவாளுடன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரித்தனர்.

    விசாரணையில், கோகுலை கொன்றது குரங்கு ஸ்ரீராமின் நெருங்கிய நண்பர்களான ரத்னபுரியை சேர்ந்த ஒன்றரை கவுதம், சூர்யா, சித்தாபுதூரை சேர்ந்த கவாஸ்கான், வெள்ளலூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தங்கள் நண்பரான குரங்கு ஸ்ரீராம் கொலைக்கு பழிக்குப்பழியாக கோகுலை வெட்டி கொன்றதும் தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்களும் தெரியவந்தது.

    ரத்னபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கும்பலுக்கும், கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்த கோகுல் தலைமையிலான கும்பலுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என மோதல் இருந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி கோகுல் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து குரங்கு ஸ்ரீராமை வெட்டி கொன்றார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்து, ஜெயிலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    ஜாமீனில் வெளியில் வந்த அவரை குரங்கு ஸ்ரீராமின் நண்பர்களான ஒன்றரை கவுதம் மற்றும் கவாஸ்கான், பழிவாங்க காத்திருந்தனர்.

    இதை அறிந்த கோகுல் ஜெயிலில் இருந்து வந்த பின்னர் எந்த சம்பவத்திலும் ஈடுபடாமல் பதுங்கியே வாழ்ந்து வந்துள்ளார். கோவையில் இருந்தால் மாட்டி கொள்வோம் என அடிக்கடி வெளியூர்களில் சென்று தங்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

    மேலும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதால் கையில் எப்போதும் கத்தியுடனேயே வலம் வந்துள்ளார்.

    ஆனால் கோகுலை பழிவாங்கியே தீர வேண்டும் என்று வன்மத்துடன் குரங்கு ஸ்ரீராமின் நண்பர்கள் சுற்றி திரிந்தனர். அந்த நாளுக்காக காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போன்று கோர்ட்டில் ஆஜராவதற்காக கடந்த வாரம் கோகுல் வெளியில் வந்ததை அறிந்ததனர். ஆனால் அப்போது அவருடன் நிறையே பேர் வந்தனர். அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என தெரிகிறது.

    தொடர்ந்து, கோகுல் எங்கு செல்கிறார். யாரை எல்லாம் சந்திக்கிறார். எப்போது வெளியில் வருவார் என கண்காணித்தனர்.

    நேற்று காலை கோகுல் கோர்ட்டுக்கு வருவதை அறிந்து அவரை கொன்று தங்கள் நண்பரின் மரணத்திற்கு பழி தீர்த்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தலைமறைவாக உள்ள ஒன்றரை கவுதம் உள்பட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கோகுல் கடந்த சில வருடங்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரை இன்று திருமணம் செய்யவும் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    கொலையான கோகுலுடன் வந்த மனோஜ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், கோகுலும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். நீதிமன்றத்திற்கு போக துணைக்கு என்னை அழைத்து வந்தார்.

    நாங்கள் ஜாலியாக பேசியபடி வந்தோம். கையெழுத்து போட்டு விட்டு சென்றால் போதும் இனி எந்த விவகாரத்திற்கும் போக மாட்டேன் என தெரிவித்தார். டீ குடிப்பதற்காக சென்றபோது தான் எங்களை தொடர்ந்து வந்த 5 பேர் கோகுலை வெட்டினார்கள்.

    நான் தடுக்க முயன்றபோது, எனக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. நான் கீழே விழுந்ததால் என்னை விட்டு சென்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×